போரைத் தடுக்கும் தும்பிகள்!
பகையுணர்வு கொண்ட இருவரையோ, குழுவையோ ஒன்று சேர்க்க வேண்டும் அல்லது அவரை அமைதிப்படுத்தி நல் வழியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரிடமும் ஒரு குழுவோ அல்லது தனி மனிதனோ ஒருமுறை சென்றோ அல்லது பலமுறை மாறி மாறிச் சென்றோ அமைதிப்படுத்துவது வழக்கமும் அன்று தொட்டு இன்று வரை வழக்கத்திலுள்ளது. இச்செயலைச் சந்து செய்தல் என்றும் சந்து பிசைதல் என்றும் கூறுவர்.
போருக்குத் தயாராகும் மன்னரில் ஒருவர் போரைத் தவிர்க்கும் நோக்கில் போர் தொடங்குவதற்கு முன்பே சான்றோர் ஒருவரை மாற்றரசனிடம் தூது அனுப்பும் வழக்கமும் இருந்துள்ளது. மன்னன் அனுப்புவதற்கு முன்னரே நல்லெண்ணம் கொண்டோர் தாமே தூது செல்வதுமுண்டு. இவ்வழக்கத்தைப் போர்முறையின் ஒரு வகையாகவே கடைப்பிடித்தனர் தமிழர்.
தூது என்ற சொல் தமிழில் ஒரு சிறப்பான சொல். ஒரு நெடில் எழுத்தைத் தொடர்ந்து அதே எழுத்தின் குறில் வருவது தூது என்ற சொல்லைத் தவிர வேறு எந்த சொல்லும் தமிழில் இல்லை.
தும்பிகளிடமும் தூது செல்லும் வழக்கம் காணப்பட்டதாகக் கபிலர் குறிஞ்சிக் கலியில் கற்பனை வளத்துடன் காட்டுகிறார்.
வேங்கை மரங்கள் நிறைந்த காட்டில் முகம் முழுவதும் புள்ளிகளையுடைய புலியொன்று வந்து கொண்டிருந்தது. அப் புள்ளிகள் வேங்கை மரத்தின் பூங்கொத்துகள் போல் இருந்தன. அதேவேளை, வேங்கை பூங்கொத்துகள் போன்ற முகத்தில் புள்ளிகளையுடைய களிறு ஒன்றும் அப்புலியின் எதிரே வந்தது.
அவை ஒன்றையொன்று தாக்கிச் சண்டையிடத் தொடங்கின. வேங்கை மரத்தின் பூக்களில் அமர்ந்திருந்த தும்பிகள் போரிடும் களிறு, புலி இவற்றின் முகத்தில் உள்ள புள்ளிகளைப் பூங்கொத்துகள் என்று மயங்கிய நிலையில் தேனுண்ண விரும்பி களிறு முகத்தில் ஒரு சில தும்பிகளும், புலியின் முகத்தில் ஒரு சில தும்பிகளும் விரைந்து வந்தமர்ந்தன.
சிறிது நேரம் சென்றபின் புலியின் முகத்தில் இருந்த தும்பிகள் யானையின் முகத்திலும் யானையின் முகத்தில் இருந்த தும்பிகள் புலி முகத்திலும் மாறிச் சென்று அமர்ந்தன. பின்னர், மீண்டும் அவை இடம் மாறிச் சென்றமர்ந்தன. இவ்வாறு தொடர்ந்து அங்கிருந்த தும்பிகள் இங்கும் இங்கிருந்த தும்பிகள் அங்குமாக மாறி மாறித் தாவலாயின.
இந்தத் தும்பிகள் இரு விலங்குகளின் முகத்திலிருந்த புள்ளிகளை வேங்கைப் பூக்கள் என்று மயங்கி தேனுண்ணச் செல்வதையும், ஒவ்வொரு முறையும் ஏமாந்து போவதையும் அப்படியிருந்தும் முயற்சியைச் சிறிதும் கைவிடாத தும்பிகள் இடம் மாறி மாறிச் சென்று விலங்குகளின்மேல் அமர்வதையும் கண்டதும் கபிலருக்குச் சிரிப்பு உண்டாயிற்று.
சண்டையிட்ட யானையையும் புலியையும் போர் புரியும் ஆற்றல் மிகுந்த மன்னர் போன்றும், அங்குமிங்கும் மாறி மாறி அலைந்த தும்பிகளைச் சந்து செய்ய செல்லும் நல்லெண்ணம் கொண்ட சான்றோர் போன்றும் அவருக்குத் தோன்றியதாம். இதனை,
வீயகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அம்சிறை மணிநிறத் தும்பி,
வாய்இழி கடாத்த வான்மருப்பு ஒருத்தலொடு
ஆய்பொறி உழுவை தாக்கிய பொழுதின்
வேங்கையஞ் சினையென விறல்புலி முற்றியும்,
பூம்பொறி யானைப் புகர்முகம் குறுகியும்
வலிமிகு வெகுளியான் வாளுற்ற மன்னரை
நயன்நாடி நட்பாக்கும் வினைவர்போல் மறிதரும்
அயம் இழி அருளிய அணி மலை நன்னாட!
(குறிஞ்சிக்கலி பா.எண் 10. 1-9)
என்று பாடியிருப்பார்.
இப்பாடலின் வண்டினங்கள் அமைதியை நாடியதாகக் கற்பனை வளத்தால் புலவர் பாடினார் என்ற போதிலும், இலக்கியமென்பது சமகால மக்களின் பழக்கவழக்கங்களைப் பதிவுகளென்றும், நற்சிந்தனைகளின் தொகுப்பே இலக்கியமென்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இன்றுபோல் அக்காலத் தமிழர்களும் போர்க்குணம் தவிர்த்து வாழ விரும்பினரென்பதும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

