

மக்கள் சிந்தனைப் பேரவையின் கிளை கடந்த மூன்று ஆண்டுகளாக ஜப்பானில் செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல், அங்கே பாரதி விழாவும் நடத்தி வருகிறது. கூடவே, உலக அறிவியல் தினத்தையொட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அறிவியல் மாநாட்டையும் நடத்தி வருகிறார்கள்.
நேற்று சிறப்பாக பாரதி விழாவும் அறிவியல் மாநாடும் ஜப்பானில் நடந்தது குறித்து தோழர் ஸ்டாலின் குணசேகரன் கட்செவி அஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார். அவரே நேரில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருக்கிறார்.
தாய்த் தமிழகத்திற்கும் ஜப்பான்வாழ் தமிழர்களுக்கும் இடையே பாலமாக மக்கள் சிந்தனைப் பேரவை விளங்குவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
மயிலாடுதுறை தருமை ஆதீன 27-ஆவது குருமகாசந்நிதானத்தின் மணிவிழா நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, நான் தங்கி இருந்தது வைத்தீஸ்வரன் கோயிலில். சில தலைமுறைகளுக்கு முன்பு எனது மூதாதையர்கள் வாழ்ந்த மண்; அதனால்தான் எனக்கு இந்தப் பெயர். புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாத சுவாமியையும், செல்வ முத்துக்குமார சுவாமியையும் அவர்கள் நாளும் பொழுதும் சுற்றிச்சுற்றி வலம்வந்து செய்த பிரார்த்தனையின் பலனைத்தான் நான் இன்று அனுபவிக்கிறேன் என்பது எனது நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை.
தங்குவது வைத்தீஸ்வரன் கோயிலாக இருந்தாலும், இரவு உணவுக்கு சிதம்பரம் சென்று விடுவது எனது வழக்கம். சிதம்பரம் வாத்தியார் கடை இட்லி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு முறை அந்த இட்லியின் ருசி பார்த்தவர்கள், தில்லையம்பதி நடராஜப் பெருமானை தரிசித்த கையோடு பசியாற வாத்தியார் கடைக்கு இட்லி சாப்பிடப் போவார்கள் என்பது உறுதி.
எங்கள் சிதம்பரம் நிருபர் சுந்தரராஜன் மூலம்தான் வாத்தியார் கடை இட்லி எனக்கு அறிமுகம். நான் வாத்தியார் கடைக்குச் சென்றபோது, தனது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் அவர் அங்கே எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். காலம் சென்ற 'வாத்தியார்' ஆ. பழனிசாமியின் மகன் அப்பு சந்திரசேகரும், பொதுவுடைமைக் கட்சித் தோழர் க.அறவாழியும் அவருடன் இருந்தனர்.
நாங்கள் 'தினமணி' குறித்தும், வாத்தியார் கடை இட்லியின் பிரபலம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தபோது, இட்லி வாங்க வந்தார் ஒரு பெரியவர். என்னை அங்கே பார்த்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து பணி ஓய்வு பெற்றிருக்கும் அவரது பெயரும் அறவாழி. முனைவர் த.அறவாழி 'தினமணி' நாளிதழை அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாசித்து சுவாசிக்கும் தமிழ் பற்றாளர்.
'தினமணி' ஆசிரியர் உரை, நடுப்பக்கக் கட்டுரைகள், 'தமிழ்மணி' பகுதியின் இலக்கியப் பங்களிப்பு என்று தொடங்கி தினமணி கதிரில் வெளிவரும் சுவாமிநாதனின் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் வரை அங்கே விவாதிக்கப்பட்டது; விமர்சிக்கப்பட்டது.
பத்திரிகை ஆசிரியருக்கு வாசகர்களிடமிருந்து நேரடியாகக் கிடைக்கும் பாராட்டுகளும், விமர்சனங்களும் தருகின்ற உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வார்த்தையில் விவரிக்க முடியாது. 'தினமணி' நாளிதழின் பலம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது-
ஏ.என்.சிவராமன் என்கிற ஜாம்பவான் போட்டு வைத்திருக்கும் அடித்தளமும், வகுத்துத் தந்திருக்கும் நெறிகளும், உயர்த்திப் பிடித்திருக்கும் சமூகப்பிரக்ஞையும்தான் அந்த பலம்!
வெள்ளை சரிகைத் தலைப்பா; பிறைச் சந்திரத் திலகம்; பஞ்சகச்ச வேட்டி; வெள்ளைச் சட்டை; வெண்கலக் குரல்; வேகமான நடை; சங்க இலக்கியத்திலும் தமிழ் இலக்கணத்திலும் வியப்பூட்டும் புலமை- அவர்தான் 'தி.கி.கோ.' என்று அழைக்கப்பட்ட தமிழ்மொழி வித்தகர் பேராசிரியர் தி.கி. கோபாலய்யர். அவரும் 'தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதையரும் அணுக்கத் தோழர்கள்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் புகழ்மிகு தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் தி.கி.கோபாலய்யர். 1928-ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் இயங்கி வந்த கிறிஸ்தவக் கல்லூரியில் மொழித் துறையில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்த தி.கி.கோபாலய்யர், 1937-இல் தாம்பரத்துக்கு கல்லூரி இடம் மாறியபோதும், இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை அடைந்தபோதும் பணியில் தொடர்ந்து, 1951-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர்.
அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகவும், இரண்டாண்டுகள் சேத்துப்பட்டு சேவாசதன் பள்ளியிலும், மினர்வா தமிழ்ப் பயிற்சிக் கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றி தனது 61-ஆவது வயதில் 1957-ஆம் ஆண்டில் அவர் மறைந்தார். அவரிடம் தமிழ் பயின்ற பலர் பின்னாளில் தமிழறிஞர்களாகவும், பெரும் புலவர்களாகவும் வலம் வந்தனர்.
1940-களில் அகில இந்திய வானொலியில் பேராசிரியர் தி.கி.கோபாலய்யர் ஆற்றிய இலக்கிய உரைகளில் சில கட்டுரையாக எழுதப்பட்டவை. அவற்றில் 12 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, இப்போது 'காலத்தை வென்ற தமிழ்ப் புதையல்கள்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் தி.கி.
கோபாலய்யர் எழுதி வைத்திருந்த கட்டுரைகள் முனைவர் த.பூங்கோதையால்
தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் மட்டுமல்ல, அதில் இடம் பெற்றிருக்கும் பேராசிரியர் தி.கி.கோபாலய்யர் குறித்த தகவல்களும், புகைப்பட இணைப்புகளும்கூடப் புதையல்கள்தான்!
கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு 'அன்பின் அலெக்ஸா'. முதலாவது நூல் 'கனவின் இசைக் குறிப்பு'. 'இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிப்பை நல்கியிருக்கும் 'தினமணி' நாளிதழில் எனது கவிதைகள் அறிமுகம் பெற்றால் எனக்கு அது பெரும்பேறு' என்கிற கோரிக்கையுடன் விமர்சனத்துக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது 'அன்பின் அலெக்ஸா...' அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தக் கவிதை-
தொலைந்த பின்தான்
தெரிகிறது
கொடுத்த விலை.
கொடுத்த விலையைவிட
மதிப்புக் கூடிப் போகின்றன
தொலைத்தவை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.