

ஈகை என்பது தமிழர்கட்கு புதிதல்ல; சங்ககாலத் தமிழரிடத்து வீரம், காதல், ஈகை என்ற விழுமியங்கள் ரத்தத்தோடு கலந்தவையாக இருந்தன. தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையில் அகத்தில் காதலும், கருணையும் நிரம்பி வழிந்தன. புறத்திலோ வீரம் துள்ளி விளையாடி நின்றது. இவ்வரிய புகழாய்ந்த பீடுயுயர் பெருமைகளை விளக்கவல்ல பனுவல்கள்தாம் அகநானூறும் புறநானூறும்.
அத்தகைய பண்டைநாள் தமிழர்கள் வாழ்வில் குறிப்பாக நயம்புகழ, கவிவளம் சுரக்க பாடல் பாடிய புலவர்கள் சில சமயங்களில் வறுமையுற்ற போதும், ஈகையில் குறைந்தார்கள் இல்லை என்பதை, ஒரு காட்சி மெய்படுத்தி இயம்புகிறது.
பெருஞ்சித்திரனார் என்றதொரு புலவர் தமது குடும்பச் சூழ்நிலையை மன்னன் குமணன்பால் எடுத்துரைக்கும் போது, 'பல ஆண்டுகள் யான் வாழ்ந்து விட்டேன், இன்னும் என் உயிர் கழியாது இருக்கிறதே' என்று அரற்றி, ஒவ்வொரு நாளையும் போக்கும் துயருற்ற நிலையில் ஊன்று
கோலையே காலாகக் கொண்டு நடக்கும், என் தாயின் தலை பஞ்சுவிரித்தாற்போல் நரையுடையவள். கண் மலர்கள் கசங்கிய நிலையில் வீட்டின் முன்புற வாசலுக்கு வர இயலாதவள்.
பசலை படர்ந்த மேனியுடன், மனத்துயரால் நினைவு தடுமாற பக்கத்தில் இருக்கும் பச்சிளம் குழந்தை பால் உண்ண விரும்பும் வாடிய மார்பை உடைய என் மனைவி குப்பை மேட்டில் முன்பே பறிக்கப்பட்ட கீரைத்தண்டின் அடிப்பாகத்தில் புதிதாகத் துளிர்த்திருக்கும் இளந்தளிர்களைப் பறித்து அவற்றை உப்பிடாமல் வெறும் நீரில் உலையில் இட்டு காய்ச்சி சோற்றை மறந்த நிலையில் பச்சை இலையையே உணவாகக் கொள்ளுபவள், அரைகுறை ஆடையும் அழுக்கேறிய நிலையிலும் அறக்கடவுளை மறவாத அன்புடையவள்.
எங்கள் இருவரின் மனம் மகிழ வேடுவர்கள் சுட்டு கரியாக்கி, திருத்திய நிலத்தை உழுது ஐவன நெல்லை விளைவித்து அதை பழுதுபடாது காத்து கொடுக்க குறைபடா விளையும் வள
நிலமும் கூர்; வேலும் ஏந்திய குமண வள்ளலே! உரத்த ஓசையுடன் இடியும், மின்னலுமாய் தொடர் மழை பொழிவதைப்போல நானும் என் மக்களும், சுற்றமும் பசி களைந்து உண்டு மகிழ, எனக்கு பரிசில் வழங்குவாயாக. கொடுக்கிற பெறுகின்ற, இருவர் மனமும் மகிழ பரிசில் தருவதும், பெறுவதுமாக இருக்க வேண்டும்.
அப்படி அல்லாமல் முகம் திரிந்த நிலையில் பெரிய யானையையே பரிசிலாக தந்தாலும் நான் ஏற்க மாட்டேன். பரிசில் மிகச் சிறிதாக இருந்தாலும் குன்றிமணி அளவு உடையதாக இருந்தாலும் அன்புடன் அளிப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன் என்ற பொருள் அமைந்தது அந்தப் பாடல்.
வாழ்நாளோடு யாண்டு பல உண்மையின் தீர்தல் செல்லாது என் உயிர் எனப் புரிந்து என்று தொடங்கி 28 வரிகளில் 'வசையில் விழுத்தினைப் பிறந்த இசைமேற் தோன்றல் நின் பாடிய யானே!' என்று முடித்துப் பாடினார்.
பின்னர், வள்ளல் குமணன் அன்புடன் அளித்த பெருந் செல்வப் பொதியோடு இல்லம் சார்ந்தார். சொல்லொணாத் துயரில் மூழ்கி இருந்த புலவர் அகம் வளம் கண்டு மனம் மகிழ்ந்திருந்த காலை ஈதல் இசைபட வாழ்தல் என்ற குறள் வழிக்கு ஒப்ப தன் மனைவியிடம் பகர்ந்தார்.
உன்னை விரும்பி நேசித்தவர்கட்கும், நீ விரும்பியவர்கட்கும் கற்பில் தலைநிற்கும் உன் உறவினர்க்கும், நாம் பசித்துயரில் துவண்டபோது எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவியவர்கட்கும், யார், எவர் என்று பார்க்காமல் எத்தகையோர்க்கு என்ன தரலாம் என்பதை என்னிடம் கூறவேண்டா, நம் எதிர்காலத்துக்காக பாதுகாக்க வேண்டும் என்று எண்ணிடாது, என் அன்புறுவான மனைவியே, நீயே நான் கொண்டு வந்த பரிசில் பொருள்களைப் பகிர்ந்து அளிப்பாயாக.
இவை எல்லாம் கனிகள் விளையும், தருக்கள் சூழ்ந்த மலையான முதிரமலைக்கு உரிமையுடையவன் வெற்றிவேல் ஏந்திய குமண வள்ளல் அள்ளிக்கொடுத்த கருவூலங்கள், முதிர மலைத் தலைவன் நமக்கு வழங்கியது போலவே நாமும் பிறர்க்கு வழங்கி மகிழ்வோம் என்ற பொருள் பொதிந்த பாடலையும் நாம் புறநானூற்றில் காணலாம்.
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே
பழம்தூங்கு முதிரத்துக்கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே!
சங்க காலம்தொட்டு இன்று வரை பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழர்தம் வாழ்வில் அற உணர்ச்சி சிறிதும் குறையவில்லை. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரங்கியரிடம் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி, தான் சேர்த்த செல்வமனைத்தும் ஊர் நலனுக்கே என்று கோயில் கட்டவும், கல்விச் சாலை கட்டவும், இன்ன பிற அறப் பணிகளுக்கும் என சாசனப்படுத்திய பெரும் வள்ளல் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் எனில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த வணிகப்பெருமகன் செட்டி நாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெருந்செல்வந்தருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், காரைக்குடி வள்ளல் அழகப்பச் செட்டியாரும், கோவை காந்தியச் செல்வர் தி.சு. அவிநாசிலிங்க செட்டியாரும் அற வேந்தர்களே! தைலத்தாரையாக தொடர்ந்த அறச்செல்வர்தாம் இவர்கள்.
அற்றை நாளில் அரசர்கள் பல கோயில்களை எடுப்பித்தும், தொடர்ந்து அதன் பராமரிப்புக்குமாக பல ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை நிவந்தமாக எழுதி கற்சாசனம் பொறித்தனர். விலை உயர்ந்த பொன், வெள்ளி ஆபாரணங்களை அளித்து ஆதரித்தனர்.
பல கோயில்களில் இன்னன்ன சமூகங்கள் இந்த, இந்த உற்சவங்களை நடத்தவும், சமூக ஒழுக்கலாறுகளை வழக்கப்படுத்தினர். உதாரணமாக, பெரும் புகழ் கொண்ட திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் பெருவிழாவான கார்த்திகை தீப
உற்சவத்தில் நெடிதுயர்ந்த மலையில் தீபம் ஏற்றும் இரும்பு கொப்பரை, நெய், திரிநூல் ஆகியற்றை ஏற்கும் புண்ணியப் பணியை பர்வதராஜ குலத்தினரிடம் வழங்கி இருப்பதை காணலாம்.
இதைப் போன்றே பல புகழ்பெற்ற கோயில்களில் நித்திய பூஜைக்கும், பெருவிழாக்களுக்கும் சமூக பிரதிநிதித்துவம் உண்டு. பல திருத்தலங்களில் பற்பல சமூகத்தினருக்கு என்று திருமடங்களும், அன்னசத்திரங்களும் இருப்பதை இன்றும் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.