

மறுபிறவி என்பது உண்டா, இல்லையா என்கிற கேள்வி மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.
'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்'
என்று மனித உயிர்களின் மறுபிறவிப் பரிமாணத்தைக் குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான். இதை மனிதனின் பரிணாம வளர்ச்சியாகக் காண்பார் விஞ்ஞானி சார்லஸ் டார்வின்.
பல பிறவிகளுக்கு ஊடாகக் கடந்து, உயிரின் மூலம் கடத்தப்படும் மரபணுக்களில் கூர்மைக்குரியவை தங்கும். தேவையற்றவை புதைந்து மங்கும். 380 கோடி ஆண்டுகளாக இந்த இடைவிடாத முயற்சி தொடர்கிறது. அதைக் களைத்து, இளைத்துப்போன முயற்சி என்பார் மாணிக்கவாசகர். அந்த 380 கோடி ஆண்டுகால உயிரின் முயற்சி, வீடுபேறு நோக்கிய முயற்சி என்பார் அவர்.
அண்மையில் காலமான ஜேம்ஸ் வாட்சன் என்கிற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி உயிர் மறுபிறவி எடுக்கிறது என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் ஆய்வுக் கண்டுபிடிப்பை, ஏனைய மூன்று விஞ்ஞானிகளின் துணையுடன் 1953இல் வெளியிட்டார். மரபணு (டி.என்.ஏ.) என்று பரவலாக நாம் அழைக்கும் இரட்டைப் பாம்பு வடிவத்தையும் இணைப்புச் சலாகைகளையும் அறிவியல் தளத்தில் அரங்கேற்றிய பெருமைக்குரியவர்கள் அவர்கள்.
விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனின் மறைவு குறித்து நான் எழுதிய ஆசிரியர் உரையைப் படித்துவிட்டு எனக்கு கட்செவி அஞ்சல் செய்தி ஒன்றையும் சில புகைப்படங்களையும் அனுப்பித் தந்திருந்தார் பெரியவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா. கலிஃபோர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் இரால்ஃப் உலூயினுடன் ஜேம்ஸ் வாட்சனின் அறைக்குச் சென்று அவரைச் சந்தித்ததையும் நினைவுகூர்ந்து தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணம் மறவன்புலவில் எட்டடி உயரத்தில் மரபணு வடிவத்தை அமைத்திருப்பதுடன் அந்தக் கல்வெட்டில் விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனின் பெயரையும் பதிவு செய்து வைத்திருக்கிறார் சச்சிதானந்தம் ஐயா. அதை நேரில் பார்த்து ரசிப்பதற்காகவே மறவன்புலவுக்கு பயணிக்கத் தோன்றுகிறது.
'மரபணுக்கள் வினைப்பயன் தாங்கிகள், கடத்திகள் என்று நான் கருதுகிறேன்' என்கிற அவரது கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனின் மறைவு குறித்தும் சச்சிதானந்தம் ஐயாவின் கட்செவி அஞ்சல் செய்தி குறித்தும் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தப் பதிவு.
குடும்ப ஜவுளித் தொழிலை கடந்த 70 ஆண்டுகளாக தலைமை நிர்வாகியாக திறம்பட நடத்தும் அவரிடம் நாம் நேர மேலாண்மையை (டைம் மேனேஜ்மென்ட்) கற்றுத் தேற வேண்டும். அகவை 85ஐ கடந்தாலும்கூட அன்றாடம் இரவு 11 மணி வரை தனது கடையில் ஒவ்வொரு கொள்முதலையும் தானே நேரில் பரிசோதித்து ஒப்புதல் வழங்குவ
தில் இருந்து அந்த மனிதரின் ஒழுங்கு
முறைகளை எத்துணை பாராட்டினாலும் தகும்.
ஒன்று அவர் வியாபார விஷயமாக வெளியூர்களுக்குப் பறந்து கொண்டிருப்பார்; இல்லையென்றால், சென்னையில் ஏதாவது நிகழ்ச்சியிலோ கூட்டத்திலோ, பங்கேற்க போயிருப்பார். இதற்கிடையில், பேரன்கள், கொள்ளுப் பேரன்களுடன் வெளியில் சென்றிருப்பார்; இத்தனைக்கும் மேலே எல்லா நாளிதழ்களையும்
படித்து விடுவார்; ஏதாவது
புத்தகத்தையும் படித்துக் கொண்டிருப்பார்.
அவ்வப்போது, தனக்குத் தோன்றும் கருத்துகளை உதவியாளர்களிடம் சொல்லிப் பதிவு செய்வதும், அவற்றைத் தொகுத்து புத்தகமாக்குவதும் அவரது வழக்கம். அவர் எழுதித் தொகுப்பதும் உண்டு; வாய்மொழிப் பதிவு செய்வதும் உண்டு. அதை ஒருவர் கணினியில் தட்டச்சு செய்து கொடுத்தால் மெய்ப்புப் பார்ப்பதில் குறியாக இருப்பார். கடந்த 9ஆம் தேதி அகவை 86இல் அடியெடுத்து வைத்த 'நல்லி' செட்டியார் எழுதியிருக்கும் நூல்கள் 49 என்றால், இந்த ஆண்டில் பிறந்த நாள் வெளியீடாக வெளிக்கொணர்ந்திருக்கும் புத்தகங்கள் பத்து.
தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் சில புத்தகங்களை வெளியிட்டு கொண்டாடும் 'பத்மபூஷண்' 'நல்லி' குப்புசாமி செட்டியாரின் இந்த ஆண்டுக்கான வெளியீடுகளில் ஒன்று 'புதிய பார்வையில் திருவிளையாடல் புராணம்'. மதுரை நல்லி கிளையைப் பார்வையிடச் சென்ற செட்டியார், மதுரை மீனாட்சி அம்மன் ஆலய பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது, அவருக்கு ஏற்பட்ட உந்துதலின் விளைவுதான் இந்தப் புத்தகம்.
பழைய புத்தகக் கடையில் வாங்கப்பட்ட பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தின் பழைய பிரதி ஒன்று அவரிடம் இருந்தது. அதுதான் இவரது புத்தகத்துக்கு ஆதாரம். திருவிளையாடல் புராணத்துக்கு மிக சுவாரஸ்யமான பின்னணி இருப்பதை அவர் பதிவிடுகிறார்.
'வேத வியாசர் எழுதிய ஸ்கந்த புராணத்தின் ஒரு பகுதிதான் ஹாலாஸ்ய மகாத்மியம். அதுதான் திருவிளையாடல் புராணத்துக்கு ஆதாரம். ஹாலாஸ்யம் என்பது மதுரை மாநகரின் சம்ஸ்கிருத பெயர். திருப்பதி, பழனி, திருமலை, சிதம்பரம், காசி என்பதுபோல 60 ஆண்டுகளுக்கு முன்புவரை ஹாலாஸ்யம் என்ற பெயர் உள்ளவர்கள் இருந்ததை அந்தக் கால டெலிபோன் டைரக்டரியைப் புரட்டினால் தெரியும்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவர் 3,633 செய்யுள்களைக் கொண்ட திருவிளையாடல் புராணத்தை 16ஆம் நூற்றாண்டில் இயற்றியிருக்கிறார். தேசாந்திரியாக அவர் மதுரையில் தங்கிய ஓர் இரவில் மீனாட்சி அம்மனே அவர் கனவில் வந்து சில வரிகளை தமிழில் எழுதக் கட்டளையிட்டதாக ஐதீகம். சிவபெருமானின் 64 லீலைகளை மதுரைக் காண்டம் (18 படலங்கள்) கூடல் காண்டம் (30 படலங்கள்), திருவாலவாய் காண்டம் (16 படலங்கள்) என்று மூன்று காண்டங்களில் சொல்கிறது திருவிளையாடல் புராணம்.
திருவிளையாடல் புராணம் கடவுளின் சித்தத்தை மனிதனுக்கு உணர்த்தும் நூல். எனது நோக்கம் கதை சொல்வதல்ல. வாழ்க்கைக்கு வழிகாட்டும் குறிப்புகளை உணர்ந்து கொண்டபடி விளக்குவது' என்று தனது தன்னுரையில் குறிப்பிடுகிறார் 'நல்லி' செட்டியார்.
திருவிளையாடல் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு சில கதாபாத்திரங்களைப் படைத்து அவர்கள் வாயிலாக மூலக்கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் புதிய உத்தியைக் கையாண்டு வெற்றியடைந்திருக்கிறார். திருவிளையாடல் புராணத்துக்கு நிர்வாகவியல் ரீதியாக புதிய பரிமாணத்தை கொடுக்க முற்பட்டிருக்கிறார் 'நல்லி' குப்புசாமி செட்டியார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மண்டலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோ.வசந்தகுமாரன் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்க் கவிதைப் பரப்பில் இயங்கி வருபவர்.
இதழியலுடன் தொடர்பில் இருப்பவர். பாலைவனத்துப் பூக்கள், சொந்த தேசத்து அகதிகள், மனிதன் என்பது புனை பெயர், மழையை நனைத்தவள், சதுர பிரபஞ்சம், முறிந்த வானவில், அரூப நர்த்தனம் சூர்ய ஆகிய தொகுப்புகளைத் தொடர்ந்து, அண்மையில் வெளிவந்திருக்கும் கோ.வசந்தகுமாரனின் கவிதைத் தொகுப்பு 'பியானோ மீது கல்லெறிந்தாலும் இசை பிறக்கும்'.
அதில் இடம்பெற்றுள்ளது இந்தக் கவிதை:
கடவுள் இல்லையென
ஆதாரங்களை அடுக்கிவைத்து
அரங்கம் திகைக்கவைத்தான்
ஒருவன்.
கடைசி வரிசையில் நின்று
கைதட்டிக்கொண்டிருந்தார்
கடவுள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.