நற்றிணையின் முடிவுநிலையில் (397) இடம்பெற்றுள்ள அம்மூவனாரின் பாலைத் திணைப்பாட்டு, 'தோளும் அழியும் நாளும் சென்றன' எனத் தொடங்குகிறது. தலைவனைப் பிரிந்து துன்பத்துக்கு ஆற்றாதவளாய் வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறவும், அதற்கு 'நான் ஆற்றியிருப்பேன்' என்று தலைவி கூறுவதை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல் அது.
தோழியே! தலைவன் மீண்டு வருவதாகக் குறித்துச் சென்ற கார்ப் பருவமும் வந்து கடந்து போய்விட்டது. என் தோள்களும் அழகு ஒழிந்தன. அவன் வரும் நீண்ட நெறியையுடைய சுரத்து வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி அவிந்து கண்களும் காணுதற்குரிய பொலிவு குன்றின. என்பால் இருந்த அறிவும் என்னைக் கைவிட்டு மயக்கமுற்று என்னிடமிருந்து வேறாக விலகி நின்றது. நோயை வைத்து உயிர்நீங்காது ஆதலின் அந்நோயும் காடேறிச் சென்றொழிந்தது.
உயிரைப் போக்குதற்குரிய மாலைப்பொழுதும் வந்து தங்கிவிட்டது. இனி நான் இங்கு எவ்வண்ணம் ஆவேனோ? அறியேன். பிறந்தவர் மரணிப்பது உறுதியாகலின் நான் அதற்கு அஞ்சவில்லை. பிறகு ஏன் இந்த அச்சம்?. இறந்தால், இதன்பிறகு வரும் பிறப்பு மக்கட் பிறப்பன்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை நான் மறக்க நேரிடுமோ என்றுதான் அஞ்சுகிறேன்.
இம்மையிற் போலவே மறுமையிலும் தலைவனைப் பிரியாமை வேண்டும் என்னும் தலைவியின் அருமைப்பாட்டை விளக்கிப் பேசுகிறது இப்பாட்டு. பாடல் இதோ!
தோளும் அழியும், நாளும் சென்றென;
நீள்இடை அத்தம் நோக்கி, வாள்அற்றுக்
கண்ணும் காட்சி தெளவின; என்நீத்து
அறிவு மயங்கிப், பிறிதாகின்றே;
நோயும் பேரும் மாலையும் வந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவிற்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே.
(நற்.397)
அடுத்த பிறப்பில் விலங்கு, பறவை முதலியவாக மாறிப் பிறந்தால் அவனை மறந்துவிடுவேனோ என்ற அச்சம்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. இதை முடிந்த முடிவாகத் தெரிவிக்கும் பாடலின் கடைசி அடி இதற்கு உயிர்நிலையாக அமைந்துள்ளது.
இதே அம்மூவனார் குறுந்தொகையில் தலைவி கூற்றாக,
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே
என்று பாடியிருத்தலும் இங்குக் கருதத்தக்கது.
'நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடர்வதாக' என்பது கருத்து.
அகப்பொருள் தலைவி பேச்சு இவ்வாறாகத் திருநாவுக்கரசரது பக்தி நெறிப்பாடல் ஒன்றிலும் இதேபோன்றதொரு கருத்து மிளிரக் காணலாம்.
'பற்றினை முற்றவும் விட்டொழிக்க முடியாத இவ்வுடம்பினை விட்டு இறப்பேன். இறந்து கொடிய யம தூதருடன் இம்மண்ணுலகத்தைக் கடப்பேன். கடந்தால் பெரிய வானுலகம் ஏறுவேன். ஏறிவந்து மீண்டும் மண்ணுலகில் பிறப்பேன். அப்படிப் பிறந்தால் சிவபிரானது திருப்பெயரை மறந்து விடுவேனோ என்றுதான் என்னுள்ளம் மறுகுகின்றது' என்கிறார் மருள்நீக்கியார். அத்திருப்பாடல் வருமாறு:
துறக்கப் படாத உடலைத் துறந்து
வெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால் இருவிசும்பு ஏறுவன்;
ஏறிவந்து
பிறப்பன்; பிறந்தாற் பிறையணி வார்சடைப்
பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோஎன்றுஎன் உள்ளம்
கிடந்து மறுகிடுமே!
என்கிறார்.
'பிறவாமை வேண்டும்; பிறந்தால் இறைவன் பெயர் மறவாமை வேண்டும்' என்னும் இறையடியார்தம் அடிமனக் கருத்தே இங்கும் எதிரொலிக்கிறது. அன்றியும் இயற்கைநெறிக் காலத்தில் அகப்பொருள் தலைவனுக்குரிய இடம் பக்திநெறிக் காலத்தில் கடவுளுக்குரியதாக மாறுவதைக் காட்டு
கிறது இப்பாடல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடைக்கேற்ற கொடை

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



