ஏக்கறவு என்னும் ஒரு சொல்

வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.
ஏக்கறவு என்னும் ஒரு சொல்
Published on
Updated on
2 min read

வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.

திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில்,

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர் (395)

என்கிறார்.

பொருள் படைத்த செல்வர் முன் வறியவர் எப்படித் தாழ்ந்து நிற்பார்களோ, அப்படிக் கல்வி கற்றவர் முன் ஏங்கித் தாழ்ந்து நின்று கல்வி கற்றவரே உயர்ந்தவர் ஆவர்; அங்ஙனம் கல்லாதவர் இழிந்தவர் கடையராவர் என்பது கருத்து.

குறளில் (395) வரும் ஏக்கறுதல்' என்பதற்கு, ஆசையால் தாழ்ந்து நிற்றல்' எனப் பரிமேலழகர் எழுதியது இங்கு நினைவு கூரத்தக்கது. பிற்காலத்துப் பாண்டியருள் ஒருவனான அதிவீரராமனும், பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றான். இனி, ஏக்கறுதல்' என்னும் சொல் கம்பனிடம் பதியனிடப்பெற்ற அழகைப் பார்க்கலாம்.

சீதையிடத்துக் கொண்ட தகாத ஆசையினால் ஆன்ற மதிப்புடன் வாழ்ந்த இராவணன் அடுக்கடுக்கான அவமதிப்புகளுக்கு உள்ளானான். மாமன் மாரீசன் மாண்டான்; கரதூடணர் முதலான தம்பியர்களும் மாண்டார்கள்; தங்கை சூர்ப்பணகையும் மூக்கிழந்தாள். இவற்றால் எங்கும் எதையும் ஏறெடுத்துப் பார்க்க

வியலாத அவலமும் அவனுக்கு உண்டாயிற்று. இராவணனே இவற்றை உணர்ந்து பேசுவதாகக் காட்டும் கம்ப சித்திரம் இதோ!

நோக்கறவும் எம்பியர்கள் மாளவும்

இந்நொய்திலங்கை

போக்கறவும் மாதுலனார் பொன்றவும்

என்பின் பிறந்தாள்

மூக்கறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலைக்கிடந்த

ஏக்கறவால்;

இன்னம் இரேனோ உனையிழந்தும் (7714)

இராமன் அம்பினால் தம்பி கும்பகர்ணன் இறந்தான்' என்ற செய்தியைத் தூதர் சொல்லக் கேட்டு, உன்னை இழந்தும் இனி உயிர் வாழ்வேனோ?' என்று ஒப்பாரி வைக்காத குறையாக இராவணன் புலம்பிய புலம்பல் இது. மாயா

சனகப் படலத்தில் இடம் பெறுவது.

சீதையிடத்துத் தான் ஆசையால் தாழ்ந்து நின்றதே இத்தனை தாழ்வுகளுக்கும் காரணமாகும் என்பதை உணர்ந்து பேசுகின்றான். அப்படி

அவன் தாழ்ந்து நின்ற இடங்களைக் கீழ்க்காணும் கம்பராமாயணப் பாடல்களால் அறியலாம்.

முதலில் இராவணன் பீடத்தில் வீற்றிருந்து பேசும் நிலை; பின்னர், சீதையின் முன் நிலத்தில் விழுந்து வணங்கும் நிலை ஆகிய இருவேறு நிலைகளில் சீதையின் மனத்தை மாற்ற முயலுகின்றான். முதலில் அவன் ஆசனத்தில் அமர்ந்தவாறு கூறியன இவை:

தோற்பித்தீர் மதிக்குமேனி சுடுவித்தீர்;

தென்றல் தூற்ற

வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்;

வேனில் வேளை

ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்;

அமரர் அச்சம்

தீர்ப்பித்தீர்; இன்னம் என்என் செய்வித்துத்

தீர்தீர் அம்மா! (7642)

அந்தரம் உணரின் மேல்நாள் அகலிகை

என்பாள் காதல்

இந்திரன் உணர்த்த நல்கி எய்தினாள்

இழுக்குற் றாளோ?

மந்திரம் இல்லை, வேறோர் மருந்தில்லை

மையல் நோய்க்குச்

சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுதலால்;

அமுதச் சொல்லீர்! (7647)

இப்படியெல்லாம் சிங்காதனத்து இருந்த நிலையில் பேசிய இராவணன் அடுத்துச் சீதையின் முன் நிலத்தில் விழுந்து வணங்கினானாம். இதனை,

என்று உரைத்து எழுந்து சென்று

அங்கு இருபது என்று உரைக்கும் நீலக்

குன்று உரைத்தாலும் நேராக்

குவவுத்தோள் நிலத்தைக் கூட (7448)

என்று காட்சிப் படுத்துகிறது கம்பசித்திரம்.

இங்கு முதலில் காட்டிய நோக்கறவு' எனத் தொடங்கும் பாடலில், ஏக்கழுத்தத்துடன் நடக்கமாட்டாமல் அவன் தரைபார்த்து நடக்க நேர்ந்த அவலத்தைப் பின்னரும் பேசுவான் கவிச்சக்கரவர்த்தி.

இராமனுடன் இராவணன் செய்த முதற்போரில் தோற்று, வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு' இலங்கை மாநகருக்குள் நுழைகிறான் (7272). அப்போது அவன் மனம்நொந்து நடைதளர்ந்து தரைபார்த்துத் தனி

ஒருவனாய் வந்த நிலையை,

மாதிரம் எவையும் நோக்கான்;

வளநகர் நோக்கான்; வந்த

காதலர் தம்மை நோக்கான்;

கடற்பெருஞ் சேனை நோக்கான்;

தாதவிழ் கூந்தல் மாதர்

தனித்தனி நோக்கத் தான்அப்

பூதலம் என்னும் நங்கை

தன்னையே நோக்கிப் புக்கான் (7274)

என்னும் பாடல் புலப்படுத்தும்.

அப்படி அவன் வரும் போது அவன் மனம் நாணத்தால் சாம்புகின்றதாம். எதன்பொருட்டு? இக்கேள்விக்குக் கம்பன் தரும் பதில் இதோ!

வான்நகும் மண்ணும் எல்லாம்

நகும்; நெடு வயிரத் தோளான்

தான்நகு பகைவர் எல்லாம்

நகுவர் என்று அதற்கு நாணான்;

வேல்நகு நெடுங்கண் செவ் வாய்

மெல்லியல் மிதிலை வந்த

சானகி நகுவள் என்றே

நாணத்தால் சாம்பு கின்றான்

ஆக, இராவணன் நோக்கறவும்' என்ற வருந்தியதற்கான விடையும் இப்பாடல்களில் கிடைத்து விடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com