
இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?' என்னும் ஒரு குறளில், மனைவியின் முக்கியத்துவத்தை விளக்கிவிடுகிறான் வள்ளுவன். திருமண வாழ்க்கையில், ஆண்- பெண் இருவரின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றிணைந்து இருக்கவேண்டும் என்பது உண்மைதான்.
ஆனாலும், குடும்பத்தின் வெற்றி தொடங்கி, ஓர் ஆணின் தனிப்பட்ட வெற்றிவரை, பெண்ணின் பங்களிப்பு பெரிதாகவே இருக்கிறது. கணவனின் அலுவலகப் பணி தொடங்கி, அவனது நட்பு வட்டம்வரை, மனைவியின் பார்வைக்கு உட்பட்டு இருக்கும்போதே நன்றாக இருக்கின்றன.
வரும் வருமானத்தைவிட வேலை அழுத்தம் அதிகமாக இருப்பதையும், புதிதாக வந்த மேலாளர் திட்டிக்கொண்டே இருப்பதையும், மனைவியுடன் மனம்விட்டுப் பேசும் இனிய சூழலில் குடும்பம் அமைவது மிகச் சிறப்பானது.
ஒருவேளை வருமானத்தைவிட வசதியாக வாழத் தொடங்கினால் எப்படி உங்களுக்குக் கூடுதலாக இவ்வளவு பணம் கிடைக்கிறது?' என்று கேட்கவும், நமக்கு வரும் வருமானத்தில் வாழ்ந்தால் போதுங்க...' என்று சொல்லும் மனைவி அமைந்துவிட்டாலே, ஆண்களின் தவறுகளுக்குக் கடிவாளம் விழுந்துவிடும்.
எதிர் வீட்டுக்காரி எவ்வளவு வசதியுடன் வாழ்கிறாள் தெரியுமா...?' என்று கேட்கத்தொடங்கினாலே, குடும்பத்தில் அமைதி குலையத் தொடங்குகிறது என்பது பொருள். மனைவியின் உயர்வினை, ஓரிடத்தில் சிறப்பாகப் பதிவு செய்கிறான்கம்பன்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கும் வயதினைத் தான் அடைந்துவிட்டதாக எண்ணிய தயரதன், ஆட்சியை இராமனுக்கு வழங்கிவிட்டு, தவ வாழ்க்கை மேற்கொள்ள முடிவு செய்தான். அதைப் பற்றி முடிவு செய்வதற்காக அமைச்சரவையைக் கூட்டினான்.
அமைச்சர்களும், வசிட்டன் உள்ளிட்ட பெரியோர்களும் தயரதன் மாளிகைக்கு வந்து அமர்ந்தார்கள். அவர்களிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்தான் தயரதன். அவர்களுக்கு, ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் தோன்றின.
இராமன் அரசனாகப் போகிறான் என்னும் செய்தி மகிழ்ச்சியைத் தந்தது; தயரதன் ஆட்சியில் இருந்து வெளியேறுகிறான் என்னும் செய்தி வருத்தத்தைத் தந்தது.
இரு கன்றுகள் ஈன்றெடுத்த ஒரு பசுவுக்கு, ஒரு கன்றுக்குப் பால் கொடுத்து மகிழும் நிலை; மற்றொரு கன்றுக்கு, ஏதோ ஒரு காரணத்தால், பால் கொடுக்கமுடியாத, வருத்தமான நிலை. ஒரு கன்றினை எண்ணி இரக்கப்படவும், மறு கன்றினை எண்ணி மகிழவுமான நிலையில் உள்ள பசுவின் நிலையில் அந்த அவையினர் இருந்ததாகக் கம்பன் எழுதினான்.
ஆனால், எல்லோரும் இராமனை அரசனாக்கும் முடிவுக்கு ஒப்புக்கொண்டார்கள். சிறு மாற்றுச் சிந்தனையும் எவரும் தெரிவிக்கவில்லை. இராமன் அரசனாவதை மகிழ்வுடன் ஏற்றுகொள்வதாக, குலகுருவான வசிட்டன், எல்லா அமைச்சர்களின் சார்பில் பேசத் தொடங்கினான். அவன் சொன்ன கருத்துகளில் மிக முக்கியமானது, இராமனுக்கு வாய்த்திருக்கும் மனைவி நல்லவள்.' பாடலைப் பார்த்துவிடலாம்.
மண்ணினும் நல்லள்; மலர்மகள்,
கலைமகள், கலை ஊர்
பெண்ணினும் நல்லள்; பெரும் புகழ்ச்
சனகியோ நல்லள்}
கண்ணினும் நல்லன்; கற்றவர் கற்றிலா
தவரும்,
உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே
உவப்பார்.
இராமனை அரசனாக்குவதில் குலகுரு வசிட்டன் தொடங்கி, அமைச்சர்கள்வரை அனைவருக்கும் மகிழ்ச்சி.
இராமனின் அன்பு, ஆற்றல், எளியோரிடம் இரக்கம் என்று பல காரணங்களைச் சொல்லி, அரசனாவதற்கு இராமன் முழுத் தகுதியும் உடையவன் என்று சொன்ன வசிட்டன், தொடர்ந்து சொன்னதாகக்
கம்பன் எழுதினான்: இராமனின் மனைவியாகிய சீதை, பொறுமையில் நிலமகளைவிடச் சிறந்தவள்; செல்வத்துக்குத் தலைவியான திருமகள்; கல்விக்குத் தலைவியான கலைமகள்; மலைமகள் ஆகியோரைவிட நல்லவள்; மிகப் பெரும் புகழ் பெற்றிருக்கும் சீதை மிக நல்லவள்'. ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்குத் தேவையான தகுதிகளுள் மிக முக்கியமாக, இராமன் நல்ல மனைவியைப் பெற்றிருந்தான் என்று வலியுறுத்திச் சொல்லி, நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியைக் குறிப்பால் உணர்த்துகிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.