
ஒரு பேருந்து அல்லது மகிழுந்து, சாலைகளில் வேகமாகச் செல்கிறபோது தெருவில் கிடக்கும் குப்பைகள், காகிதங்கள் போன்றவை அந்த வண்டிகளின் பின்னர் பறந்து செல்லும். ஆனால், சற்றுத் தொலைவு பறந்ததும், தாம் செல்லும் வேகத்தை இழந்து அவை மீண்டும் சாலையில் விழுந்துவிடும்.
சாதாரணமாக, தெருவில் செல்லும் எவரும் பார்க்கக்கூடிய காட்சிகள்தான் இவை. காற்றின் வேகத்திலும் அழுத்தத்திலும் ஏற்படும் மாறுபாடுகளால் இப்படி நிகழ்கின்றன என்று அறிவியல் இதனை விளக்குகிறது.
மிகப் பொருத்தமான ஓர் இடத்தில், இப்படி ஒரு காட்சியினை வைத்திருக்கிறான் கம்பன். சீதையைத் தேடி தெற்கு நோக்கி வந்த அனுமனும் மற்றவர்களும், கடைசியாகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். இராவணன்தான் சீதையைக் கொண்டு சென்றவன் என்பது உறுதியானதால், அனுமன் இலங்கைக்குச் செல்வது என்பது முடிவாகியது.
'தமிழ்நாட்டில் இருக்கும் மயேந்திர மலையில் இருந்து அனுமன் புறப்பட்டான்' என்று பதிவு செய்கிறான் கம்பன். இந்த மகேந்திரகிரி மலை தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உள்பட்ட காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் இப்போது செயல்படுகிறது. இந்த மலையின் மீதிருந்து அனுமன் புறப்பட்டுச் சென்றதாகப் பதிவு.
மலையில் கால் பதித்து அனுமன் விண்ணில் எழுந்த வேகத்தில், சுற்றியிருந்த சிறு குன்றுகள், பசுமையான மரங்கள், யானை போன்ற விலங்குகள், பல வகையான உயிரினங்கள், காற்றின் வேகத்தால், அவனுடன் பறந்தன. ஆனால், சற்று நேரத்தில் வேகம் இழந்த அவை, சற்றுத் தள்ளிப்போய் விழுந்தன என்று காட்சிப்படுத்தினான் கம்பன். இதற்கான பாடலைப் பார்த்துவிடலாம்.
இசையுடை அண்ணல் சென்ற வேகத்தால்,
எழுந்த குன்றும்,
பசையுடை மரனும், மாவும், பல் உயிர்க்
குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று, செறி கடல்
இலங்கை சேரும்
விசை இலவாக, தள்ளி வீழ்ந்தன என்ன வீழ்ந்த.
விண்ணில் அனுமன் பறந்து சென்றது, புட்பக விமானம் பறப்பது போன்று இருந்தது என்று சொன்ன கம்பன், காப்பியத்தில் அடுத்ததாக வைத்திருக்கும் காட்சி வியப்பானது. கடல் மீது பறந்து சென்றான் அனுமன். அப்போது, தேவர்கள் பயணித்த விமானங்கள் பல, அந்தக் கடல்
பகுதியில் பறந்துகொண்டிருந்தன. மிகப் பெரும் உருவத்துடன் அனுமன் பறந்து சென்ற வேகத்தில், சுற்றிலும் காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தக் காற்றுக் கொந்தளிப்பின் காரணமாக, பறந்துகொண்டிருந்த விமானங்கள் நிலையாகப் பறக்க முடியாமல் தள்ளாடின. அதன் விளைவாக ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் வீழ்ந்தன. இதனைச் சொல்லும் கம்பனின் பாடல்:
குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத்தோள்
குரக்குச் சீயம்,
சென்றுறு வேகத்திண்கால் எறிதர, தேவர் வைகும்
மின்தொடர்வானத்து ஆன விமானங்கள்,
விசையின் தம்மின்
ஒன்றொடு ஒன்றுஉடையத் தாக்கி, மாக்
கடல்உற்ற மாதோ.
விமானப் பயணம் செய்பவர்களுக்குக் கண்டிப்பாக அறிமுகமான ஓர் ஆங்கிலச் சொல் டர்புலன்ஸ் . தமிழில் காற்றுக் கொந்தளிப்பு. வானில் இப்படிக் காற்று மாறுபாடு ஏற்பட்டால், பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் 'பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) அணிந்துகொண்டு அமர்ந்திருக்கவும். காற்றுக் கொந்தளிப்பை விமானம் எதிர்நோக்குகிறது' என்று அறிவிப்பார்கள்.
அந்தக் கொந்தளிப்புக்குள் விமானம் நுழைந்து வெளியேறும்வரை, விமானம் வேகமாகக் குலுங்கியபடிதான் பறக்கும். பணியாளர் உள்பட எவரும் அப்போது விமானத்துக்குள் நிற்கவோ நடக்கவோ கூடாது.
இந்தச் சூழல்கள் கம்பன் காலத்தில் கிடையாது. ஆனால், காற்றின் வேகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டால், விமானங்கள் பறப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்று அவன் சிந்தித்தது வியப்பாகத்தான் இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.