பா.நூருல்லாஹ்
தன்னை மதிப்பது என்பது வேறு, தன்னை வியத்தல் என்பது வேறு. பல மேடையேறிய ஒருவன் செருக்கோடு யாருக்கும் மரியாதை தராமல் என்னால்தான் பேச முடியும் என்று இருப்பான் என்றால் அவன் அவமானப்படுவான் அல்லது அழிந்து விடுவான். இல்லையேல், அவமானப்பட்டு அழிந்து போவான். இதையே திருவள்ளுவர்
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (குறள் -439)
தான் நன்மையே செய்யினும் தன்னைத்தானே ஒருவன் வியந்துரைத்தல் கூடாது. அதுபோல் மற்றவர் செய்யும் நன்மையற்ற செயல்களை என்ன பயன் கருதியும் பாராட்டிச் சொல்லவும் கூடாது.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (குறள் -978)
பெருமைக்குரியவர்கள் பெருஞ்சிறப்புக்கு தகுதியுள்ளவர்கள் ஆயினும், மற்றவர்களைப் பணிந்தே நடந்துகொள்வார்கள்.
சிறுமைக்குரியவர்கள் சிறப்பேதும் தமக்கு இல்லையாயினும், தம்மைத் தாமே வியந்து தாம் கட்டிய மாலையைத் தாமே அணிந்து கொள்வார்கள் என்று திருக்குறள் கூறுகிறது.
நீதிநெறி விளக்கத்தில் தன்னைத்தானே புகழ்ந்துகொள்வது தவறு என்று குமரகுருபரர் கூறுகிறார்.
தன்னை வியப்பிப்பான் தன்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை
வியவாமை அன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை அன்றே நலம். (பாடல் -18)
தன்னைப் பிறர் புகழ்ந்து போற்றும் வகையில் தானே தன்னுடைய பெருமைகளைப் பற்றிக் கூறிக்கொள்பவர்களைப் பற்றி சொல்லும்போது, அது எரியும் நெருப்பில் நல்ல தண்ணீரைக் கொட்டி அதை வளர்ப்பது போன்றது.
அதாவது, தற்புகழ்ச்சி நெருப்பை மேலும் வளர்க்கும் செயலாக அமையும் என்று பாடலில் வலியுறுத்துகிறார்.
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்,
தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
(மத்தேயு 23-12)
என்பது இயேசு கிறிஸ்து கூறிய ஒரு முக்கியமான போதனையாகும். இந்த வாக்கியம் சுயலநலமாகவும் அகந்தையுடனும் செயல்படுவோர் இறுதியில் தாழ்மையடைவர் என்றும், அதே நேரத்தில் தாழ்மையுடனும் தன்னடக்கத்துடனும் இருப்பவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்துகிறது.
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் தன்னைத்தானே பெரிதாக பேசாமல் இருந்தால் அவன் செய்யும் செயல்களுக்கு நன்மையும், புகழும் தானாக தேடி வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.