
அக்டோபர் 1-ஆம் தேதி தினமணி சென்னைப் பதிப்பில் வெளியாகி இருந்த அந்த விளம்பரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அகவை நூறு முடிந்து, 101-ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் 'தியாகி' என்.தேவநாதனை வாழ்த்தி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தார்கள்.
காந்தி ஜெயந்தி நாளன்று தனது நூறாவது வயது நிறைவைக் கொண்டாடுகிறார் தியாகி தேவநாதன் என்பதே, ஏதோ ஒரு விதத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தினுடனான அவரது முன்பிறவித் தொடர்பை வெளிப்படுத்துகிறது. அக்டோபர் 2 என்பது காந்தி ஜெயந்தி மட்டுமல்லாமல், மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும்கூட. காமராஜரின் நினைவு நாளும் அதுதான்.
எட்டு வயது முதல் தினமணி வாசகர் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தியாகி என்பது மட்டுமல்ல, தான் ஒரு தினமணி வாசகர் என்பதும் தனது வாழ்நாள் பெருமிதம் என்று கருதும் அந்த நாட்டுப்பற்றாளரின் உணர்வைப் பார்த்து நான் வியப்பில் சமைந்தேன்.
விளம்பரத்திலேயே 89396 68960 என்று தொடர்பு எண் குறிப்பிடப்பட்டிருந்ததால் உடனடியாக அந்த எண்ணில் தொடர்பு கொண்டேன். '18' ஆண்டுகள் மட்டுமே தினமணி நாளிதழின் ஆசிரியராக இருக்கும் நான், அந்த 84 ஆண்டு வாசகருக்கு முன்னால் ஒன்றுமே இல்லையே... கோடம்பாக்கம் சிவன் கோயில் தெருவில் இருக்கும் அவரது வீடு நோக்கி விரைந்தேன்.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தனது படிப்பைத் துறந்து போராடியதற்காக சிறை சென்ற தேசபக்தர்; காந்திய வழியில் இன்றுவரை கதராடை மட்டுமே உடுத்தும் காங்கிரஸ்காரர். அவருக்கு 101 வயது என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. 'தாமிரப் பட்டயம்' வழங்கப்பட்டிருக்கும் அந்தத் தியாகியை அரசு வாழ்த்திப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. தொடர்பு எண் தரப்பட்டிருந்ததால் மாணவர் பருவத்தில் இருந்து அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் வாழ்த்த வந்திருப்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.
நண்பர்கள் என்று சொல்ல அவரது வயதொட்டியவர்கள் இருக்க வழியில்லை. உறவினர்கள் ஒருங்கிணைந்து அவரது நூற்றாண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாடியதாகச் சொன்னார்கள். அவரது வீட்டுக்குள் நான் நுழைந்ததும், படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து விட்டார் பெரியவர் தேவநாதன். அவருக்குப் பக்கத்திலேயே 'தினமணி' நாளிதழ். என்னை அறியாமல் எனது விழிகள் குளமாகின.
காங்கிரஸ்காரர்கள் யாரும் வாழ்த்த வரவில்லையா? என்கிற அபத்தமான கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதுதான். கேட்டு விட்டேன். தனது கோபத்தையும், ஆத்திரத்தையும் காந்தியவாதியான அவர் அடக்கிக்கொண்டு, ''இப்போது இருப்பவர்களுக்கும் காங்கிரஸூக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கூறி ஏளனப் புன்னகையை உதிர்த்தார்.
திண்டிவனத்தைச் சேர்ந்த தியாகி தேவநாதன் 84 ஆண்டுகளாகத் தொடர்ந்து 'தினமணி' நாளிதழ் படித்து வருவது குறித்து, இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரெஞ்சு பாதிரியார் தன்னை மூவண்ணக் கொடியை ஏற்றச் சொன்னது குறித்து, காங்கிரஸ் கட்சியிலும், அதன் தலைவர்களுடனும் அவருக்கிருந்த தொடர்புகள் குறித்து என்று சுமார் அரை மணி நேரம் பகிர்ந்து கொண்டார்.
அகவை 101-ஐ எட்டியும் நாள்தோறும் 'தினமணி' படிப்பதை விட்டுவிடாத அந்த தேசபக்தரை, அலிப்பூர் சிறையில் விடுதலைக்காக அடைக்கப்பட்ட தியாகியை வணங்கி வாழ்த்துப் பெற்றேன். வெளியில் வந்து காரில் ஏறியபோது எனது இதயம் எழுப்பிய கேள்வி என்ன தெரியுமா? சுதந்திர இந்தியா தியாகிகளுக்குத் தரும் மரியாதை வெறும் தாமிரப் பட்டயமும் சொற்ப ஓய்வூதியமும் மட்டும்தானா?
பெரியவர் தேவநாதனைப் பார்த்துவிட்டு வந்ததுமுதல் எனக்கு மனதே சரியில்லை. எனது நினைவெல்லாம், நான் பல மாதங்களுக்கு முன்பு படித்துப் பாதுகாப்பாக வைத்திருந்த இந்தியப் பிரிவினை குறித்த புத்தகம் குறித்ததாகவே இருந்தது. ஒரு வழியாக அடுக்கிவைத்திருந்த புத்தகக் குவியலில் இருந்து அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்து இன்னொரு முறை படித்த பிறகுதான் அமைதியானேன்.
இலந்தை சு.இராமசாமி எழுதிய 'பிரிவினையின் பெருந்துயரம்' என்கிற அந்தப் புத்தகத்தை தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டும். அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்றால் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்தப் புத்தகத்தை நான் மீள் வாசிப்புக்கு உள்படுத்துவது இது மூன்றாவது முறையோ, நான்காவது முறையோ தெரியவில்லை.
இந்தியப் பிரிவினையின் முழுமையான வரலாற்றை இந்தப் புத்தகம் ஆதாரங்களோடு விளக்குகிறது. பிரிவினையின் தொடக்கம், அதில் தலைவர்களின் பங்கு, அவர்களுக்கு இடையேயான கருத்து மோதல்கள், பிரிவினைக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகள் என்று இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்கிறது.
''ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட மத, மொழி ஜாதிப் பிரிவினைகளைக் கடந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பலரது தியாகத்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், பாகிஸ்தானின் சுதந்திரம் என்பது, இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம் சொந்த மக்களின் உயிர்ப்பலிகளின் மேல் கட்டி எழுப்பப் பட்டது'' என்கிற இலந்தை சு.இராமசாமியின் வார்த்தைகளை யார் மறுத்துவிட முடியும்?
கிலாபத் இயக்கம், மாப்ளா கிளர்ச்சி, 1935 அரசியல் சட்டம், பாகிஸ்தான் தீர்மானம், கிரிப்ஸ் கமிஷன், வெள்ளையனே வெளியேறு போராட்டம், இராஜாஜி திட்டம், காந்தி-ஜின்னா சந்திப்பு, சிம்லா மாநாடு, கப்பல் படைப் புரட்சி, இடைக்கால அரசு, பாகிஸ்தான் பிறந்தது, இந்தியா சுதந்திரம் பெற்றது என்று எந்தவொரு நிகழ்வையும் விட்டுவிடாமல் தெளிவாகவும், மனதில் பதியும் விதத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
எந்தத் தொகுப்பில், எப்போது படித்தேன் என்பதைக் குறிப்பிடாமல், வல்லம் தாஜுபால் எழுதிய கவிதை என்று மட்டும் எனது நாள்குறிப்பில் குறித்து வைத்திருந்தேன். அதுதான் இந்த வாரத்தின் எனது தேர்வு.
என் தாய் வீட்டுச் சீதனம்
கட்டில், பீரோ, டிவி
செழுமையாக்கியதும்,
என் கன்னம் சிவந்து வீங்க
சிறுமையாக்கியதும்
உன் 'அறை' தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.