முனைவர் ப.சுடலைமணி
சங்க இலக்கியப் பாடல்களைப் பாடியவர்களுள் ஓரம்போகியார் மட்டுமே மருதப்புலவார் என்று பாராட்டப்படுபவர். இவர் பாடிய 109 அகச்செய்யுட்களுள் குறுந்தொகை 70, 122 ஆகிய இரு செய்யுட்கள் தவிர ஏனையவை மருதத்திணைக்குரியன.
குறிப்பாக, ஐங்குறுநூற்றில் முதல் பகுதியாக அமைந்துள்ள மருதத்திணையின் நூறு பாடல்களையும் ஓரம்போகியாரே பாடியுள்ளார். நீர் வளம் மிகுந்த கழனிக்காடுகளை மருதத்திணைப் பாடல்களில் நுட்பமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளார்.
இவர் எழுதிய பாடல்களில் காணப்படும்வழக்காறு குறித்த செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
முக்கிய வேளாண்மைத் தொழிலாக நெல் சாகுபடி திகழ்கிறது. நெல் விளையும் பூமியைத் தென்மாவட்டங்களில் பத்துக்காடு' என்று அழைக்கின்றனர். மழைப்பொழிவின் தன்மைக்கேற்றாற் போல நெல் விளைவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நெல் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.
இதைக் குறிப்பிட இரண்டு பூ விளைச்சல்' என்று பேச்சு வழக்கில் கூறுகின்றனர். இரண்டாவது பருவத்தில் நெல் அறுவடை நடைபெறும் தறுவாயில் பயிர்களை அறுப்பதற்கு முன்பாக உளுந்து அல்லது பச்சைப்பயறு விதைகளைக் கழனியில் விதைத்து விடுகிறார்கள். அறுவடை நடக்கும்போது விதைக்கப்பட்ட விதைகள் உழவர்களின் கால் பாதங்களில் மிதிபட்டு ஈரநிலத்தில் புதைந்துவிடுகின்றன.
நெல் அறுவடை முடிந்த பின்பு ஓரிரு முறைகள் தண்ணீர் பாய்ச்சுவார்கள். இந்த ஈரத்தில் விதைகள் முளைத்துவிடும். அறுவடைக்குப் பின்பு எஞ்சியிருக்கும் நெல் தாள்களின் இடையில் பயிர்கள் முளைத்து செழித்து வளர்ந்துவிடும். இந்தப் பயிர்களுக்குத் தனியாக உரமிடும் வழக்கம் இல்லை. இவ்வாறு வளர்க்கப்படும் உளுந்துப் பயறை மிதி உளுந்து' என்று அழைக்கின்றனர். மிதி உளுந்து பயிரிடும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஓரம்போகியாரின் ஐங்குறுநூறு 47ஆவது பாடலுக்கு உரை எழுதிய பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார், நெல்லறியுமுன்னர்ப் பயறு உளுந்து முதலிய விதைத்து நெல்லரிந்த பின் அவற்றைப் பேணிப் பயன்கோடல் மருதநிலத்தோர் வழக்கமாகும். அவ்வழக்கம் இன்றுமுளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருமழைப்புலவர் குறிப்பிடும் இந்த வழக்கத்தை நெல் அறுவடைக்கு முன்பாகவே பயறு வகைகள் விதைக்கப்படும் முறை பண்டுதொட்டு இருந்துள்ளது என்பதற்குச் சான்றாகக் கருதலாம்.
முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும்}நின்
பாணன் போலப் பல பொய்த்தல்லே.
(ஐங்குறுநூறு பாடல்-47)
முள்போல் கூரிய பற்களையுடைய பாணர்குடிப் பெண்ணின் இனிய கெடிற்று மீனைக் கொட்டிய அகன்ற பெரிய கடகம் நிறையுமாறு, மனைக்குரியவள் அரிகாலிடத்தில் விதைத்துப் பெற்ற பெரும் பயற்றினைப் போலவே நீயும் பல பொய்களைக் கூற வல்லவன் என்பதனை நானன்றி மாண்புடைய அணிகனையணிந்த தோழியரும் நன்கறிவர் என்பது பாடலின் பொருளாகும்.
மேற்கண்ட பாடலில் இடம்பெற்றுள்ள அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர' என்ற வரி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வரிதான் அறுவடைக்குப் பிறகு விதைக்கப்பட்டிருந்த பயறு வகைகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.