ஓர் அரசு இயங்கப் பொருள் வருவாய் மிக மிக இன்றியமையாததாகும். இதனை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் என்ற குறள் (385) சிறப்பாகக் கூறுகிறது.
வருவாய்க்குரிய வாயில்களுள் வரிமூலம் சேரும் பொருளும் ஒருகூறாகும். அந்த வரிப் பொருள், உள்நாட்டு வெளிநாட்டு வாணிபத் தொடர்போடு வரக்கூடியதாக இலக்கியங்கள் கூறுகின்றன. அதுவும் அப்பொருள் அருளோடும் அன்போடும் தரப் பெறுதலாக அமைய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதனை
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் (755)
என்ற குறள், அருளோடும் அன்போடும் வாராத பொருள் அரசுக்குத் தீமை விளைவிக்கும் எனக் கூறினாலும், பொருளாக்கம் என்ற சொல்லுக்கு அரசுக்குத் தரும் ஆறில் ஒன்றான வரிப்பொருள் எனச் சுட்டுகிறது.
பொதுவான இவ்வரிப் பொருள் வருவாய் உள்நாட்டு அளவினதானாலும் சிறப்பாக வெளிநாட்டளவான ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவதை உல்கு பொருள் (756) என்கிறார் திருவள்ளுவர். இந்தக் குறிப்பின் தொனிப்பை இன்னிலை என்ற சிற்றிலக்கியப் பாடல் (17) கால்கலத்தால் சேர் பொருளும் ...அரசிற்குரியாமே என்கிறது.
கால் என்பது தரை வழியான உள்நாட்டு வாணிபப் பொருள். மரக்கலம் என்பது மரக்கல வழியான ஏற்றுமதி இறக்குமதி வாணிப வரி
(கஸ்டம்ஸ் டூட்டி); இந்தக் கடல் வாணிப வரி விதிப்பு பற்றி பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சிறப்பாகக் கூறுகிறார்.
வான்முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்தநீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தி னின்றும் நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறி யாமை வந்து ஈண்டு
அருங்கடிப் பெருங் காப்பின்
வலியுடை வல் அணங்கினோன்
புலிபொறித்துப புறம் போக்கி
மதி நிறைந்த மலிபண்டம் (126- 136)
மரக்கலத்தின் பொருள் கரைக்கும் (இறக்குமதி) கரையின் பொருள் மரக்கலத்துக்கும்
(ஏற்றுமதி) பரிமாறப்பட்டதைக் கூறுகையில் மேகநீர் பூமியில் ஓடலும் ஆற்றுநீர் கடலில் கலப்பதுமான உவமையால் கூறியதால் பண்டைத் தமிழர் வாணிபம் பெருக்கத்தை உணர முடிகிறது.
இங்ஙனம் குவிந்து கிடக்கும் ஏற்றுமதி இறக்குமதிக்கான பொருளுக்கு ஆயத்தீர்வையாய் வாங்கும் சுங்க வரியை யாரும் ஏமாற்றிவிடாதபடிக் கட்டுக்காவலுடையவர்கள் இரவிலும் பகலிலும் மாறி மாறி வாங்குவார்களாம். இவ்வாறு வாங்கப்படும் சுங்கம் உல்கு செயக் குறைபடாது (125) வாங்கப்பட்டதாகப் புலவர் கூறுகிறார்.
ஈண்டுக் குறைபடாது என்பதற்கு உரை காணும் பெருமழைப் புலவர் மிகையாக உல்கு (வரி) விதிக்கப்படின் பண்டம் குறைபடும் என்பதால் அளவான சுங்கம் (வரி) விதிக்கப் பெற்றதால்தான் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் பண்டகச்சாலையில் வளம் தலை மயங்கியதாக (193) கிடந்ததாய்- கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறினார் என்றார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் நாம் எதையும் எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும் வள்ளுவ அறிவான நெம்புகோலால் பாரத நாடு, சுதந்திரப் போராட்டக் காலத் துணிவைப் பெற்றுள்ளது எனலாம். அதன் ஒரு கூறுதான் பிரதமர் நரேந்திர மோடி கூறிய சுதேசிப் பொருளை வாங்குவோம் என்ற சூளுரையாகும். அத்துடன் வள்ளுவ
அறிவென்பது,
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண் (421)
என்ற குறட்பொருள் தரும் துணிவுமாம்
எனலாம்.
அறிவு என்பது அழிவு வாராமல் பாதுகாக்கும் கருவி என்பதால் அந்த அறிவு ஓர் அரசுக்கு மிகமிக இன்றியமையாததாகும்.
குறிப்பாக, எதிரி நாட்டால் நாட்டுக்குத் துன்பம், வந்து விட்டால் அதைப் போரால் எதிர்கொள்வதைத் தவிர்த்து, கடுமையான உழைப்பால் வரும் உற்பத்திப் பெருக்கத்தால் உலக வாணிபச் சந்தையில் முன்னணி நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முந்துவதாகக் காட்டுவதென்பதே கூர்த்த அறிவுடைமை ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.