
கவிஞர் பூவை செங்குட்டுவன் அதிக அளவில் திரைப்படப் பாடல்களை எழுதாவிட்டாலும் கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் கொடிகட்டிப் பறந்த காலத்தில் தனது தமிழ்ப் புலமையைக் கடைவிரித்து தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். தனது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'வாழ்க்கை என்பது நேர்கோடு...' என்கிற பெயரில் வெளியிட்ட புத்தகத்தை அவரது திருமகனார் அனுப்பித் தந்திருந்தார்.
பூவை செங்குட்டுவனுக்கு சில தனிச் சிறப்புகள் உண்டு. கச்சேரியில் பாடுவதற்காக, குன்னக்குடி வைத்தியநாதனின் வற்புறுத்தலின் பேரில் பூவை எழுதிய பாடல்தான் 'கந்தன் கருணை' திரைப்படத்தில் இடம் பெற்ற 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்கிற பாடல். அந்தப் பாடலும், 'ராஜ ராஜசோழன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏடு தந்தானடி தில்லையிலே' பாடலும் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் இசைத் தட்டுகளாக வெளியாகின.
ஒரு நிகழ்ச்சியில் 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடலை சூலமங்கலம் சகோதரிகள் இறைவணக்கப்பாடலாக பாடியதைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன் 'கந்தன் கருணை' திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடமும், இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடமும் பரிந்துரைக்க அது திரைப்படத்தில் இடம் பெற்றது. அந்தத் திரைப்படத்தின் மூலம்தான் குன்னக்குடி வைத்தியநாதன் திரை இசையமைப்பாளராகவும், பூவை செங்குட்டுவன் பாடலாசிரியராகவும் அறிமுகமானார்கள்.
தான் பிறந்து வளர்ந்தது முதல், சென்னைக்கு வந்தது, நாடகத்துக்கு கதை வசனம் எழுதியது திரையுலகில் நுழைந்தது என்று தனது வாழ்க்கையின் மறக்கமுடியாத முக்கியத் தருணங்களை தனது மனம்போன போக்கில் அவர் எழுதிச் சென்றதுதான் 'வாழ்க்கை என்பது நேர்கோடு' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடனும், திரைப் பிரபலங்களுடனும் அவருக்கு இருந்த தொடர்பு குறித்துப் பதிவு செய்கிறார் கவிஞர் பூவை. அது மட்டுமல்ல, தான் பார்த்துப் பழகிய நண்பர்கள் குறித்தும், அவர்களது சிறப்புகள் குறித்தும் தனது தனி வரலாற்றுப் பதிவில் சிலாகித்துப் பதிவு செய்யப்பட்டிருப்பது, எந்த அளவுக்கு வெளிப்படையான மனிதராக வாழ்ந்தார் என்பதன் வெளிப்பாடு.
'நெஞ்சத்தால் ஒரு மனிதன்', சொல்லால் ஒரு மனிதன், செயலால் ஒரு மனிதன் என ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவம் எடுக்கிறான். ஆனால், கவிஞர் பூவை செங்குட்டுவன் மட்டும்தான் ஒரே மனிதனாக வாழ்ந்து வருகிறார்' என்கிற நடிகர் ராஜேஷின் கருத்தை வழிமொழிகிறது 'வாழ்க்கை என்பது நேர்கோடு' என்கிற கவிஞர் பூவையின் சுய சரிதைப் பதிவு.
தீபாவளி மலர் கட்டுரைக்காக அயோத்திக்குச் சென்ற கையோடு, தில்லிக் கம்பன் கழகத்தின் தொடக்க விழாவுக்குத் தலைநகர் வந்துவிட்டேன். நேற்று நடந்த தில்லிக் கம்பன் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டதில் அத்துணை மகிழ்ச்சி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் கே.வி.கே. பெருமாள் இந்த அமைப்பைத் தொடங்குவதற்கு எத்தனை சிரமப்பட்டார், முயற்சி எடுத்தார், அலைந்தார் என்பதை நினைத்துப் பார்த்தபோது, அவரது உழைப்பும், முனைப்பும் வீணாகிவிடவில்லை என்பது பெரிய ஆறுதல். இன்றைய சூழலில் புரவலர்களைத் தேடி அலைந்துதான் எந்தவொரு இலக்கிய நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும் என்பதுதான் நிலைமை.
ஆனால் பாருங்கள் கம்பன் பெயர் சொன்னால், புரவலர்கள் தாராளமாக உதவ முன்வருவது கம்பனுக்கு மட்டும்தான். கம்பன் கழகங்கள் மட்டும்தான் தொய்வில்லாமல் தொடர்ந்து தலை
முறைகள் தாண்டியும் துடிப்புடன் செயல்படுகின்றன. கம்ப காதை குறித்துப் பேச புதிது புதிதாக பேச்சாளர்கள் உருவாகிறார்கள்.
தலைநகர் தில்லியின் முக்கியமான இலக்கிய அமைப்புகள் மூன்று - தில்லித் தமிழ்ச் சங்கம், முத்தமிழ் பேரவை, தில்லிக் கம்பன் கழகம். இவற்றின் நிர்வாகிகளுக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் உண்டுதான். ஆனால், எந்தவொரு அமைப்பின் நிகழ்ச்சியானாலும் ஏனைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் கலந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு அதிகாரியாக இருந்து பணிஓய்வு பெற்ற கே.வி.கே.பெருமாளுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. அவர் ஒரு கவிஞர், 'தினமணி' நடுப்பக்க கட்டுரையாளர், கம்பராமாயண பட்டிமன்றப் பேச்சாளர், தீவிர இலக்கியவாதி, இப்போது தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் தலைவர். அவரது திட்டமிடல், நேர்த்தி, சுறுசுறுப்பான இயக்கத்துக்கு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவரது நேர்முக உதவியாளராக இருந்ததுதான் காரணமாக இருக்குமோ?
தில்லிக் கம்பன் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டபோது, இதையும் குறிப்பிடத் தோன்றுகிறது. சென்னைக் கம்பன் கழகத்தைக் கட்டிக்காத்து வளர்த்ததில் பெரும் பங்காற்றியவர் 'கம்பன் அடிசூடி' பழ.பழநியப்பன். இன்றைய முன்னணி கம்பன் கழகப் பேச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
'கம்பன் விசுவரூபம்', 'கம்பனிடம் கற்போம்' 'கம்பன் என்றொரு நிர்வாகி'-உள்ளிட்ட பல நூல்களை ஆக்கித்தந்த 'கம்பன் அடிசூடி' பழ.பழநியப்பனின் இன்னொரு படைப்பு 'கம்ப ராமாயணம்'.
தான் ரசித்த, படித்து வியந்த 116 பாடல்களைத் தேடிப்பிடித்து, தனது பாணியில் விளக்கி இருக்கும் படைப்பு. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகுப்பு மறு பதிப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
பழ. பழநியப்பன் தேர்ந்தெடுத்த பாடல்களின் மூலமும், உரையும்
கம்பனை நேசிப்பவர்களும், வாசிப்பவர்களும் வைத்திருக்க வேண்டிய விருந்து!
எப்போதோ கவிஞர் ரவி சுப்பிரமணியன் எனக்கு அனுப்பித் தந்திருந்த கவிதை வரிகள் இவை,
இன்று பிறந்த ஊருக்கு வந்தேன்
எங்கள் வீடிருந்த இடத்தில் வங்கி,
விடுதியிருந்த இடத்தில் நகைக்கடை
அங்காடியிருந்த இடத்தில் டாஸ்மாக்
ஊர்ப் பலகை முன்னால் நின்று
தற்படம் எடுத்துக்கொண்டேன்
எனக்கென யாருமற்ற ஊரில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.