பழந்தமிழரின் காலநிலை அறிவு!

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களின் இயக்கங்களால் உலகம் இயங்கி வருகிறது.
Published on
Updated on
1 min read

ஆ.பாண்டி செல்வி

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களின் இயக்கங்களால் உலகம் இயங்கி வருகிறது. அவற்றுள், நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்க இயலாது. அதனால்தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து, வான் சிறப்பு என்ற அதிகாரத்தை திருவள்ளுவர் படைத்துள்ளார்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

(குறள்: 16)

அதாவது, சிறிய புல் உயிர் வாழ்வதற்குக்கூட மழை இன்றியமையாது என்று மழையின் அவசியத்தை அறிய முடிகிறது.

ஐங்குறுநூற்றில் முல்லைத் திணையில் மழைப்பொழிவு பல்வேறு முறைகளில் ஏற்படுவதாக சுட்டப்படுகிறது. புவியியலில் ஒரு துறையான காலநிலையியலில் மழைப்பொழிவின் முறைமைகளை மூன்று விதங்களில் எடுத்துரைக்கின்றனர். 1.வெப்பச்

சலன மழைப்பொழிவு 2.மழைத்தடை மழைப்பொழிவு 3.சூறாவளி (அ) வளிமுக மழைப்பொழிவு.

வெப்பச்சலன மழைப்பொழிவு என்பது சூரியக் கதிர்வீச்சால் காற்று வெப்பமடைந்து வெப்பச்சலனம் காரணமாக மேலெழுந்து குளிர்ந்து, மேகமாகி மழையைத் தருவது ஆகும். ஐங்குறுநூற்றில் இடியின் முழக்கத்தோடு மேகங்கள் திரண்டு வந்து மழைபொழிவதை,

வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக் கறங்குர லெழிலி கார்செய் தன்றே.

(ஐங். 452:1-2)

எனும் ஐங்குறுநூற்றுப் பாடல் தொடர்கள் குறிப்பிடுகின்றன. கோடை வெப்பம்

நீங்கக் கார்மழை பெய்ததை,

'வேனில் நீங்கக் கார்மழை தலைஇ'

(ஐங். 484:1)

என்ற தொடர் குறிப்பிடுகிறது. அதாவது, ஐங்குறுநூற்றில் இடம்பெற்றிருக்கும் மழைப்பொழிவானது, காலநிலையியலில் குறிப்பிடும் புவியியலாளரின் வெப்பச்சலன மழைப் பொழிவோடு ஒத்துள்ளது எனலாம்.

வெப்பச்சலன மழையால்தான் நிலத்தின் வெப்பம் தணிகிறது என்பதும், வாழ்விடத்தின் வெப்பநிலையை மழையே நிர்வகிக்கிறது என்பதை உறுதிப்படும் வகையில்

நற்றிணை, அகநானூறு பாடல்களில்

பல்வேறு சான்றுகள் உள்ளன.

காலநிலையியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லும் பல செய்திகளை, தமிழ் இலக்கியங்களில் முன்பே கூறியிருப்பது

மிகவும் வியப்பானதாகும்.

ஆகவேதான் மழையின் சிறப்பைச் சிலப்பதிகாரம், 'மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்' என உரைக்கிறது போலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com