
பெரிய புராணம் சிவனடியார் பெருமையைப் பாடும் சிறப்பினைப் படிக்கும் பிற சமயத்தினர் 'இப்படி நம் சமயத்தில் அடியார்களின் பெருமையைப் பாடும் அழகிய நூல் ஒன்று இல்லையே!' என்று ஏங்குகின்றனர். பெரிய புராணத்திற்கு முதல் நூல் திருத்தொண்டத் தொகை; வகை நூல் திருத்தொண்டர் திருவந்தாதி. இவ்விரு நூலாசிரியர்களையும் விஞ்சும் வகையில் சேக்கிழார் அடியார்கள் மீது காட்டும் மரியாதை அமைந்துள்ளது.
திருத்தொண்டத் தொகை அறுபது தனியடியார்களையும் ஒன்பது தொகை அடியார்களையும் பாடியுள்ளது. சுந்தரர் தனியடியார்களுள் இருபதின்மர்களைக் குறிக்கும்போது 'அன்' விகுதியிட்டு
ஒருமையில் குறித்துள்ளார். சான்றாக,
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும்
அடியேன்,
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும்
அடியேன்,
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும்
அடியேன்,
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும்
அடியேன்,
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும்
அடியேன்
என்று வருவது காணலாம்.
'அன்' விகுதி பெறாத பெயர்களை,
'மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும்
அடியேன்'
'மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்'
என்று ஒருமையில் சுட்டும் வகையில் அடைமொழிகளில் 'அன்' விகுதியினைச் சேர்த்துள்ளார்.
ஏனைய அடியார்களை, 'விறன்மிண்டர்க் கடியேன்', 'எறிபத்தர்க் கடியேன்', 'கண்ணப்பர்க் கடியேன்' 'ஆனாயர்க் கடியேன்', என்று பன்மையில் பாடியுள்ளதாகத் திருத்தொண்டத்தொகைப் பதிப்புகள் பலவற்றில் காணப்படுகின்றன.
தருமை ஆதீனப் பதிப்பில், தனியடியார்களில் திருநீலகண்டக் குயவர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், காரைக்காலம்மையார் ஆகிய மூவரைத் தவிர மற்றவர் பெயர்கள், 'விறன்மிண்டற் கடியேன்', என்பது போல ஒருமையில் அச்சிடப்பட்டுள்ளன. இதற்குரிய காரணத்தை, சி.அருணை வடிவேல் முதலியார், ''இதன்கண் தனியடியாரை, 'தொகையடியாரோ' என்று ஐயுறாமைப் பொருட்டு ஒருமைச் சொல்லாலே குறித்தருளினார். 'திருநீலகண்டத்துக் குயவனார்', திருநீலகண்டத்துப் பாணனார்', என்றாற் போலும் இடங்களிலும் உயர்வுபற்றி வந்த பன்மையே என்பது இனிது விளங்க அருளினார்.
காரைக்காலம்மையார் பெண்பாலராகலானும் அவர் தம்மை, 'பேய்' என்றே குறித்தமையானும், 'பேய்' எனின், இனிது விளங்காமை பற்றி அவர் ஒருவரையே 'பேயார்' என்று பன்மையாற் குறித்தருளினார். இதனை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் கொண்ட
உண்மைப் பாடம் நோக்கி அறிந்து கொள்க'' என்று தெரிவித்துள்ளார்.
நம்பியாண்டார் நம்பிகளோ எல்லாத் தனியடியார்களையும் அவர்கள் யாராயினும் ஒருமையிலேயே குறித்துள்ளார்.
சுந்தரர் பன்மை விகுதியிட்டுக் கூறிய குயவனார், காரைக்கால் அம்மையார்,
பாணனார் ஆகிய மூவரையும்கூட,
'தில்லைத் திருநீல கண்டக் குயவனாம்
செய்தவனே'
'செம்பொன் உருவன்என் அம்மை
எனப்பெற் றவள்'
சண்பையர்கோன் செந்தமிழொடு இசை
புனையப் பரன்அருள் பெற்றவன்
என்பர்இப் பூதலத்தே'
என்று ஒருமையில் பாடியுள்ளார்.
தனியடியார்களின் எண்ணிக்கையைச் சுந்தரரோடு அவர்தம் பெற்றோர்களையும் சேர்த்து அறுபத்துமூன்றாக்கியவர் நம்பியாண்டார் நம்பி. அவர் சுந்தரரின் தாய் தந்தையரைக்கூட ஒருமையிலேயே 'நாவலூர் தன்னில் சடையன் என்னும் குலம் விளங்கும் புகழோன்' என்றும், 'அரன் திருத்தாள் நயந்தாள்' என்றும் குறித்துள்ளார்.
சிலர் எல்லோரையும் உரிமையோடு ஒருமையில் குறித்துத் தங்கள் அன்பினைப் புலப்படுத்துவர். வேறு சிலர் எவரையும் மதிப்போடு பன்மையில் குறித்துத் தங்கள் மரியாதையை வெளிப்
படுத்துவர். சுந்தரரும் நம்பியாண்டார்
நம்பியும் முதற்பிரிவினைச் சார்ந்தவர்கள். ஆனால், சேக்கிழார் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்தவர். அவர் சிவனடியார்கள் அனைவரையும் பன்மையிலேயே குறித்துள்ளார்.
சான்றாகத் திருநீல கண்டர், இளையான்குடி மாறர், அமர்நீதி, காரைக்
காலம்மையார் ஆகியோரை,
'வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர்
குலத்து வந்தார்'
'இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்
குடிப் பதி மாறனார்'
'அந்நிலைக்கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார்'
'பொங்கிய பேரழகு மிகப் புனிதவதியார்
பிறந்தார்'
என்று குறித்தலைக் காணலாம்.
இதனோடு அமையாது அறுபத்து மூவரில் இடம்பெறாத, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்ஆகியோரின் பெற்றோரைக் குறிக்கும்போதும் 'புகழனார்' 'மாதினியார்', சிவபாத இருதயர், பகவதியார் என்று மிகுந்த மரியாதையோடு
குறித்துள்ளார். திருநாவுக்கரசரின் தமக்கையாரை, திலகவதியார், தூண்டுதவ விளக்கு அனையார், தபோதினியார், மாதவம் செய் சீறடியார், தாபதியார் என்று குறித்துப் போற்றுகிறார்.
இப் பண்பு தாம் பாடியுள்ள அடியார்களிடத்தும் இருப்பதாகச் சேக்கிழார் காட்டியுள்ளார். மெய்ப்பொருள் நாயனார் தம்மை வஞ்சனையால் கொன்றமுத்தநாதனைத் திருநீறு பூசியவன் என்பதால் 'அர்' விகுதியிட்டு, 'தத்தா நமர்' என்று குறிக்கிறார். ஏனாதிநாதர்
தம்மைப் போருக்கு அழைத்த அதிசூரனை, 'வெவ்வாள் உரவோன் வருக' என்று ஒருமையில் அழைக்கிறார். ஆனால், அவன் நெற்றியில் திருநீறு கண்டபோது, 'இவர்தம் கொள்கைக் குறிவழிநிற்பேன்' என்று மரியாதையோடு குறிக்கிறார்.
இத்தகைய பணிவு வேறு எந்தத் தமிழ்க் கவிஞரிடத்தும் காணப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.