
'தினமணி' தீபாவளி மலருக்காக அயோத்தி சென்று, அங்கிருந்து தில்லி, ஹைதராபாத், கோவை என்று பயணித்து, நான் இரண்டு நாள்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினேன். அதனால், எழுத்தாளர் சிவசங்கரியின் 'சிவசங்கரி சந்திரசேகரன்' அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வழங்கும் 'சூர்ய மற்றும் அக்ஷர' விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
நான் கலந்து கொள்ளாதது குறித்து விசாரிக்க அழைத்திருந்தார் சிவசங் கரி.
அகவை 85-ஐ எட்டியுள்ள நிலையிலும், தனது உடல்நிலை குறித்துக் கவலைப்படாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவரது உற்சாகத்துக்கு முதலில் திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். துர்கா ஸ்டாலினின் 'அவரும் நானும்' இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா, ராணிமைந்தனின் புத்தக வெளியீட்டு விழா,
'துக்ளக்' நிறுவன ஆசிரியர் 'சோ' குறித்து இன்றைய ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி உரையாற்றிய 'அழியாத உறவுகள்' நிகழ்ச்சி என்று அவர் கலந்து கொள்கிறார்.
வரும் அக்டோபர் 25-ஆம் தேதி சனிக்கிழமை, சென்னை ஆழ்வார்பேட்டை நாரதகான சபா அரங்கில், சிவசங்கரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளை, நாடகங்களாக்கி அரங்கேற்ற இருக்கிறது கோமல் தியேட்டர்ஸ் என்கிற தகவலை சிவசங்கரி பகிர்ந்து கொண்டார். சிவசங்கரியின் கதைகள் பல திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவை. இப்போது, அவரது சிறுகதைகள் நாடக வடிவம் பெறுகின்றன.
எங்களது உரையாடலின்போது, எழுத்தாளர் சிவசங்கரி சொன்ன தகவல் இது. எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பதும், பணமுடிப்பு வழங்குவதும் என்று நின்றுவிடவில்லை சிவசங்கரி. தனது எழுத்தின் மூலமும், தான் வாங்கி வைத்திருந்த அசையாச் சொத்துகளை விற்றதன் மூலமும் அவர் ஈட்டிய செல்வத்திலிருந்து, தன்னுடன் பயணித்த, தனக்கு உதவியாக இருந்த சக ஸ்நேகர்களுக்கு ரூபாய் மூன்று கோடியைப் பகிர்ந்து கொடுப்பது என்று முடிவெடுத்ததை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?
உதவியாளர், காரோட்டி, பணிப்பெண் என்று 60 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் வீதம் உதவுவது என்று முடிவெடுத்திருப்பதாகச் சொன்னார் அவர். அது மட்டுமல்லாமல், தனக்கு மன நிம்மதி தரும் ஆறு கோயில்களுக்குத் தேவையான உதவியை வழங்கவும் தீர்மானித்திருக்கிறார். சென்னை பெசன்ட் நகர் விநாயகர் கோயிலில் கலைவாணிக்கு ஒரு சந்நிதி வரப்போகிறது. உபயம் எழுத்தாளர் சிவசங்கரி.
''ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'' என்பார் வள்ளுவப் பேராசான். அதைப் புரிந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் சிவசங்கரி!
சென்னை ரெஸிடென்ஸி டவர்ஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தார் கவிஞர் டாக்டர் இரா.உமா பாரதி. மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி என்பது மட்டுமல்ல, பரிதிமாற்கலைஞரின் வம்சாவளித் தொடர்பும் உடையவர்.
விழா முடிந்ததும் அவர் தமிழாக்கம் செய்திருந்த 'இஸ்ரேலில் இந்திய வீரம்' என்கிற புத்தகத்தை என்னிடம் அளித்தார். இஸ்ரேலுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் அப்படி என்னதான் தொடர்பு இருந்திருக்க முடியும் என்று புருவம் உயர்த்த வைத்தது தலைப்பு.
வரலாற்று ஆய்வாளர் வி.ரவிக்குமார் எழுதிய 'இண்டியன் ஹீரோயிசம் இன் இஸ்ரேல்' என்கிற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம்தான் இந்தப் புத்தகம். மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் முனைவர் வீ.பா.ரதியுடன் இணைந்து அந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் கவிஞர் இரா.உமா பாரதி.
இந்தப் புத்தகம் மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையே இப்போது நடக்கும் (நடந்த) போருடன் தொடர்புடையது என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு, 1918-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி அன்றைய ஓட்டோமான் ஆட்சியில் இருந்து பாலஸ்தீன துறைமுகமான ஹைஃபாவை விடுவித்தது தொடர்பான புத்தகம் இது.
அப்போது இஸ்ரேல் என்கிற தனிநாடு உருவாகி இருக்கவில்லை. ஆனால், அந்தப் பகுதி இஸ்ரேல் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது.
ஹைஃபா போர் தனித்துவமான பெரிய போர்களில் ஒன்று என்று வரலாறு பதிவு செய்கிறது.
பீரங்கி, துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் இருந்த துருக்கியர், ஜெர்மானியர், ஆஸ்திரியர் ஆகியோரின் படைகளை எதிர்கொண்டனர் இந்திய வீரர்கள் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு. ஜோத்பூர், மைசூர், பாவ்நகர்,
கத்தியவார், காஷ்மீர் அரசர்களால் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உதவியாக அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், ஹைஃபா அருகில் உள்ள கார்மேல் மலை உச்சியில் இருந்து தாக்குதல் நடத்திய வீரர்களை வெறும் வாள், ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எதிர்கொண்ட வீர வரலாறு வெளியில் தெரியாமல் போயிற்று.
முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படைகளுக்கு உதவினால் பாரதத்துக்கு விடுதலை வழங்குவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது. ஹைஃபாவை மீட்பதற்காக அந்த வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடியது, உண்மையில் இந்தியாவின் விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டம் என்பதை நாம் உணர வேண்டும்.
துறைமுக நகரமான ஹைஃபா விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் போரில் உயிர்நீத்த துணிச்சலான 900 இந்திய வீரர்களின் உச்சபட்ச தியாகத்தை இப்போதும் இஸ்ரேல் அரசு அங்கீகரித்துப் பாராட்டுகிறது. அவர்களின் கல்லறைகள் அந்த அரசால் பராமரிக்கப்படுகின்றன.
நமது இந்திய வீரர்களின் நினைவைப் போற்றும் விதத்தில், புதுதில்லி தீன் மூர்த்தி செளக், ஹைஃபா செளக் என்று பிரதமர் நரேந்திர மோடியால் 2016-இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்தப் போர் குறித்த விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. தொலைதூர நாட்டில் நடந்த அந்த வரலாற்றுப் போர் எதனால், எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த முழுமையான படங்களுடன் கூடிய விவரங்கள் அடங்கிய ஆவணப் பதிவும் இந்தப் புத்தகம்.
கவிஞர் ஆரிசனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது கவிதைகளில் ஒன்று இது-பால் புட்டியின்
ரப்பர் முனையை
தாயின் மார்பென்று
பால் குடிக்கும் மழலை;
குழந்தையில் இருந்தே
ஊட்டி வளர்க்கப்படுகிறது
போலியின் வல்லமை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.