

அறம் எவ்வாறு உருவானது...? மனிதர்கள் தோன்றிய போதே அவருடன் ஒட்டிப் பிறந்ததா அறம்? அன்று. வாழ்வியல் சூழல்களால், மனிதர்களின் மனத்தில் தோன்றிய உயர்வான சிந்தனையே அறம். இந்த சமூகத்தை முன்னோக்கிச் செலுத்துகிற கால சக்கரம் அறம்.
புறநானூற்றுப் பாடல்களில் அறக் கருத்துகள் பொதிந்திருப்பதைப் பார்க்கிறோம்.
மனித துன்பங்களிலிருந்து, வாழ்வியலில் இருந்து, ஊற்றெடுக்கிற ஜீவநதியாக அறம் பாய்ந்தோடுகிறது. அறமின்றி வாழ்தல் தகாது. அறம் மனித வாழ்வியலில் தொடர் நடவடிக்கை. 'அறம் பாடுதல்' தமிழில் ஒரு மரபு.
'...எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின்...' (புற. 7).
பகையரசர்களின் நகரங்களை நெருப்புவைத்து அழிப்பதன் மூலம் அடையும் வெற்றியைக் கூறுகிறது.
அந்த அழுகுரல்களுக்கிடையே ஊர்களைக் கொள்ளையிடும் செய்தியும், இவ்வாறு செய்வது அறமன்று என்றும் சொல்லப்படுகிறது. பெரும்பாலான சங்க இலக்கியப் பாடல்கள், போர் அறமற்ற செயல் என்றே கூறுகிறது.
'பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா ஆகப் பிறர்மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?'
பாணர்களுக்கு, பரிசு பெறுவோர்க்கு நீ நல்லவை செய்து, மறுபுறம் உன் பகைவரை வென்று துன்பம் நேரும்படி செய்து, அவர்கள் நாட்டை வெற்றி கொள்வது அறமான செயலா? என்று முதுகுடுமிப் பெருவழுதியிடம் கேட்கிறார் புலவர் நெட்டிமையார். இதில் உள்ள ஆழமான பொருள், அடுத்தவர் நாட்டை அழித்தல் அறமில்லை
என்பதுதானே?
'...கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய
கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய
புகல்மறவருமென
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்கே அரசின் கொற்றம்'
(புற.55).
கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப் படை, விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப் படை, உயர்ந்த கொடிகளுடைய தேர்ப் படை, நெஞ்சில் வலிமையுடைய, போரை விரும்பும் காலாட் படை என நான்கு படைகள் இருந்தாலும், அற நெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை என்கிறது இந்தப் புறப்பாடல்.
'...நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே'
(புற.195).
வாழ்வின் பயணத்தில் நல்லவை செய்தல் என்பது மனிதரின் கடன். நல்லவை செய்ய முடியாவிட்டாலும் தவறில்லை. நல்லவை செய்தல் தம் கைகளில் இல்லாமற்போகலாம். ஆனால், தீமை விளைவித்தல் அவரவர் மனமறிந்தே செய்வது; ஆதலின், தீமை செய்யாமல் ஓம்பும் வாழ்வே சிறந்தது. தீமையே தொழிலாகக் கொண்டவர்க்கு காலன் இரங்குவதே இல்லை.
'... உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தம்புந பலவே.'
(புற.189).
உண்பது வயிறு கொள்ளும் அளவே, உடுத்தும் உடையோ மேலாடையும் இடையாடையும்; மற்றவை தேவைகேற்பவே. ஒருவர் செல்வத்தை மிகுதியாகப் பெற்றிருப்பதன் பயன், அடுத்தவர்க்கு ஈந்து அதனால் மகிழ்வதேயாகும். நானே அனுபவிப்பேன் என்று முயன்றால், துய்க்க இயலாமல் இழக்க நேரும் இன்பங்கள் பலவாகும். இந்தப் பெரும் வாழ்வில் அறத்தை உரைத்தவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.