

எனது எழுத்துப் பயணத்தின் தொடக்கக் காலத்தில் திரை உலகச் செய்திகளை எழுதி வந்தபோது மிகப் பெரிய அளவில் புகைப்படங்களைத் தந்துதவி ஆதரவளித்தவர் 'பிலிம்நியூஸ்' ஆனந்தன்.
தமிழ்த் திரையுலகில் 'பத்திரிகைத் தொடர்பாளர்' என்கிற பிரிவு உருவாவதற்குக் காரணமானவர் அவர்தான். 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில்தான் முதல்முறையாக அப்படியொரு துறை குறிப்பிடப்பட்டு, 'பிலிம்நியூஸ்' ஆனந்தனின் பெயர் வெளியானது.
வசதியான குடும்பத்தில் பிறந்த அனந்த கிருஷ்ணன், 'பிலிம்நியூஸ்' ஆனந்தனான வரலாறு சுவாரஸ்யமானது. ஒய்.ஜி.பி., எம்.ஜி.ஆர். உள்ளிட்டவர்களின் நாடகக் குழுக்களுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவரைக் கலைத் துறைக்குள் இழுத்து வந்தது. ஆரம்பத்தில் சில நாடகங்களுக்கு வசனங்கள்கூட எழுதியிருக்கிறார் ஆனந்தன். புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் புகைப்படங்களும் எடுத்திருக்கிறார்.
நாடோடி மன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்திரிகைத் தொடர்பாளராக மாறிய 'பிலிம்நியூஸ்' ஆனந்தன், நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு பத்திரிகைகளில் விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறார். தன்னைப் போலவே பலரையும் உருவாக்கவும் செய்திருக்கிறார்.
ஏறத்தாழ 60 ஆண்டு திரைத் தொடர்பில் பிலிம்நியூஸ் ஆனந்தன் சேகரித்த 93,836 புகைப்படங்களை, எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்திடம் ஒப்படைத்தார் அவர். ஒப்படைப்பதற்கு முன்பு அனைத்து புகைப்படங்கள் குறித்த குறிப்புகளையும் தனது கையால் எழுதி இணைத்திருந்தார். இப்போதுபோல கணினிப் பயன்பாடோ, ஸ்கேனிங் வசதியோ இல்லாத நேரமது. திரைப்பட ஸ்டில்கள், நடிக, நடிகையரின் புகைப்படங்கள், ஆக்டிங் ஸ்டில்கள் என்று திரைத் துறை தொடர்பான தகவல் களஞ்சியம் அந்தப் புகைப்படங்கள்தான்.
அதிகாரிகள் மேற்பார்வையில் செயல்படும் அரசுத் துறையினருக்கு அந்தப் புகைப்படங்களின் அருமை-பெருமை தெரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. மொத்தத்தில் அந்தப் புகைப்படங்கள் இப்போது எங்கே இருக்கின்றன அல்லது என்னவாயின என்பது குறித்த எந்தத் தடயமும் இல்லாமல் மாயமாய் அவை மறைந்து விட்டன.
என்னை நேற்று சந்திக்க வந்திருந்த பிலிம்நியூஸ் ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு, அந்தப் புகைப்படங்கள் மாயமான விவரத்தைச் சொல்லி ஆதங்கப்பட்டார். அது குறித்து கேட்கும்போது, நமக்கே ஆத்திரம் வருகிறது.
அவருக்குக் குறைந்தபட்சம் ஆதங்கம்கூட வராவிட்டால் எப்படி?
பிலிம்நியூஸ் ஆனந்தன் குறித்த புத்தகம் ஒன்று வெளிவர வேண்டும். அவரைத் தெரிந்த, அவருடன் பழகியவர்கள் பலர் இன்று நம்மிடையே இல்லை. எஞ்சி இருப்பவர்களையாவது தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி புத்தகம் வெளிக்கொணர வேண்டும் என்கிற எனது கருத்தை டைமண்ட் பாபுவும் ஆமோதித்து வழிமொழிந்தார்.
புகைப்படங்கள் புகையான கதை ஒருபுறம் இருக்கட்டும். பிலிம்நியூஸ் ஆனந்தன் வரலாறையாவது நாம் வணப்படுத்தியாக வேண்டும்.
புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது 'பத்மன்' எழுதிய 'நம்புங்கள் உண்மைதான்' என்கிற புத்தகம். எழுதியிருந்தது பத்மன் என்பதைப் பார்த்ததுமே அதைப் படித்துப் பார்க்க நான் விழைந்ததில் வியப்பொன்றும் இல்லை.
பத்மன் என்கிற அனந்த பத்மநாபன் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவர். காட்சி ஊடகத்திலும், அச்சு ஊடகத்திலும் தனித்துவம் பெற்ற ஆற்றலாளர். 'தினமணி' நாளிதழில் துணை செய்தி ஆசிரியராக இருந்தவர். அவரது
திறமையை, சில தவறான புரிதல் காரணமாக, பயன்படுத்திக் கொள்ளாமல் போனது 'தினமணி' நாளிதழுக்கு இழப்பு என்பதை நான் நன்றாகவே அறிவேன்.
ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் தொடங்கி, அரசியல், நாட்டு நடப்பு, வர்த்தகம் என்று பத்மனின் பார்வை சுற்றிச் சுழலும் என்பதற்கு எடுத்துக்காட்டு 'நம்புங்கள் உண்மைதான்' என்கிற அவரது படைப்பு. அவரது முன்னுரை 'வியந்தேன்...விவரித்தேன்' என்பதைப் புத்தகத்துக்குத் தலைப்பாகவே வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
'புதிதாக ஒன்றை அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் வியப்புதான். புதிதாக ஒன்றின் புரியாத தன்மையும் வியப்புதான். அறிந்த ஒன்றில் அறியாத வகையில் ஏற்படும் திருப்பமும் வியப்புதான். அறியாத ஒன்றை அறிந்துகொள்ள நேரிடும்போது தோன்றும் ஆச்சரியமும் வியப்புதான். இயற்கை வெளிப்படுத்தும் இயல்பான மாற்றங்களும் வியப்புதான். செயற்கையில் வெளிப்படும் மானுட மேன்மையும் வியப்புதான். செயற்கறிய செயல்களால் தோன்றும்
பிரமிப்பும் வியப்புதான். செய்யத் தகாத கொடிய செயல்களால் ஏற்படும் திகைப்பும் வியப்புதான்' என்பது அவரது முன்னுரையின் பதிவு.
மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றுக்கும் சாட்சியம் கூறும்வகையில் அமைந்திருக்கும் 90 அடையாளங்களை, அவற்றின் பின்னணியுடனும், அதனுடன் இணைந்திருக்கும் சுவாரஸ்யமான செவிவழிச் செய்திகளுடனும், புகைப்படங்களுடனும் மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்புதான் 'நம்புங்கள் உண்மைதான்'.
ஒரு சிறிய கிராமத்தில் திரும்பிய இடமெல்லாம் இரட்டையர்கள் தென்பட்டால் எப்படி இருக்கும்? அமாவாசை நாள்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்ளும் இடம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருமணமான ஆண்கள் கருவறைக்குள் நுழையக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்ட ஆலயம் இருப்பது தெரியுமா?
ஹிந்து கலாசாரத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய நாடு இருப்பதையும், இராக்கில் வாழும் 'யாஜிதி' முருக பக்தர்கள் குறித்தும், அடிப்பாகம் மட்டும் கோணல் மாணலாக வளைந்த நெட்டை மரங்களுடான வித்தியாசமான காடு பற்றியும் கடலடியில் சிலைகள் இருக்கும் தகவலும், மனிதர்களைவிட பூனைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் இரண்டு தீவுகளின் விவரமும், மர்மமும் இந்தப் புத்தகத்தில் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படியும் இருக்குமா என்று வியந்து ஆச்சரியப்பட வைக்கும் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட உலக விநோதங்களை, சிறுகதையின் சுவாரஸ்யத்துடன் படைத்திருக்கிறார் பத்மன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அவரது இதழியல் அனுபவத்தைப் பறைசாற்றுகிறது 'நம்புங்கள் உண்மைதான்' ! படிக்க எடுத்தால், முடிக்காமல் வைக்க முடியவில்லை. அதற்குமேல் வேறென்ன சொல்ல?
மருத்துவர்கள் பலர் இலக்கிய ஆர்வமுள்ளவர்களாக இருப்பது புதிதல்ல. அவர்களில் சிலர் நல்ல கவிஞர்களாகவும் தடம் பதித்திருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இணைகிறார் வாணியம்பாடி மருத்துவர் ப.விசாகப்பெருமாள். 'பாவடித் தோப்பு', 'கவிராட்டினம்' தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு 'கவித் தூரிகை'. அதிலிருந்து எடுக்கப்பட்டது இந்தக் கவிதை-
ஆனந்தமோ வருத்தமோ
வெங்காயமோ புகையோ
அவள் கண்ணில் நீர் வழிந்தால்
அவன் கண்ணில் நீர் முட்டும்...
அவன் அவளின் அப்பா...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.