
வள்ளுவர் கருத்துகளில் முரண்பாடுகள் இருப்பதாக, வாதம் வைக்கப்படுவது உண்டு. பொதுவான உதாரணமாக, 'ஊழ்' பற்றிய குறள்தான் விவாதத்துக்கு வரும். 'ஊழினைவிடச் சக்தி வாய்ந்தது எதுவுமே இல்லை; அதனைவிட வலிமை வாய்ந்தது என்று ஒன்றினைக் கருதினாலும், அங்கும் ஊழ்தான் முன்னால் வந்து நிற்கும்' என்று சொல்லும் குறளும் உண்டு.
'தளர்ச்சி அடையாமல் தொடர்ந்து முயற்சி செய்பவர்கள், ஊழினைப் புறமுதுகிட்டு ஓட வைப்பார்கள்' என்று சொல்லும் குறளும் உண்டு. ஆனால், முரண் இல்லை என்பதற்கு அழுத்தமான எதிர்வாதமும் உண்டு. 'நீங்கள் வயிற்றுச் சிக்கலுக்கு மருந்து வாங்க கடைக்குப் போனால், அதே கடைக்கு, வேறு மாதிரியான வயிற்றுச் சிக்கலுக்கு மருந்து வாங்க மற்றொருவர் வருவார்.
எல்லா உடல் சிக்கல்களுக்கான மருந்துகளும், ஒரே மருந்துக் கடையில் கிடைக்கும். அப்படி மனித சமுதாயத்தில் நிலவும் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும் ஒரே இடம் திருக்குறள். சிக்கல்களுக்கேற்ற தீர்வுகளே தவிர, இது முரண் அல்ல' என்பதே அதற்குப் பதில்.
விதியை நம்புவதும் நம்பாததும் அவரவர் நம்பிக்கையையும் மனநிலையையும் பொருத்தது. எடுத்த எல்லா செயல்களிலும் வெற்றியே அடைந்துகொண்டிருக்கும் ஒருவன், 'நமது முயற்சிதான் வெற்றியைத் தரும்... விதி என்ற ஒன்று இல்லை' என்று பேசக்கூடும்.
தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருப்பவன், 'எல்லாம் விதி' என்று சலித்துக்கொள்ளத்தான் செய்கிறான். கவலைகளில் இருப்பவர்கள், 'விதி' என்னும் குடையின் கீழ் ஆறுதல் பெற்றுக்கொள்கிறார்கள். மிகப் பொருத்தமான சூழலில் இந்த உளவியலைக் கம்பன் பயன்படுத்துகிறான்.
இராவணனை விட்டுப் பிரிந்த வீடணன் இராமனுடன் இணைந்தான். தனது அண்ணன் செயல்களில், கும்பகருணனும் முழுவதுமாக மாற்றுக் கருத்து கொண்டிருந்தான். 'இரண்டு செய்திகள் நடக்க வாய்ப்பே இல்லை அண்ணா... ஒன்று நீ இராமனை வெல்வது; மற்றொன்று நீ சீதையுடன் வாழ்வது.
அவளைத் திருப்பி அனுப்புவதே சிறந்தது' என்று இராவணனிடம் கும்பகருணன் சொன்னான். 'எப்போதும்போல் நன்றாக சாப்பிட்டுவிட்டுப் போய் நீ தூங்கு....' என்று அவன் மனம் புண்படப் பேசினான் இராவணன். குலமானம் கருதி, அண்ணனுக்காகப் போரிட போர்க்களத்துக்குள் நுழைந்தான் கும்ப
கருணன். அவனது ஆற்றலை வீடணன் சொன்னதும், 'கும்பகருணனை நம்முடன் இணைத்துக் கொள்ளலாம்' என்றான் சுக்கிரீவன். இராமனின் அனுமதியுடன், அவனை அழைத்துவர,போர்க்களத்தில் நின்றிருந்த கும்பகருணனை நோக்கிச் சென்றான் வீடணன்.
இராவணனின் தவறுகளையெல்லாம் உணர்ந்திருந்த கும்பகருணன், மானிடர்கள் கையால் இறப்போம் என்று தெரிந்தும் போரிட வந்திருந்தான். போர்க்களத்தில் தன்னைப் பார்க்க வந்த வீடணனிடம், 'இங்கு ஏன் வந்தாய்' என்று கேட்டான் கும்பகருணன். 'இராவணனை விட்டுப் பிரிந்து வந்து, இராமனுடன் இணைந்துகொள்' என்று பலவிதமான வாதங்களைச் சொல்லி அவனை அழைத்தான் வீடணன்.
உறுதியாக மறுத்துவிட்டான் கும்பகருணன். இருவரின் சந்திப்பும், துக்கமும், கவலையும், பாசமும் நிறைந்ததாக இருந்தது. சொற்களில் விவரிக்க முடியாத உணர்ச்சிகள் இருவர் மனத்திலும் அலைமோதிக் கொண்டிருந்தன. இருவர் கண்களிலும் நீர் வழிந்தது; தம்பி மீது கொண்ட பாசத்தில், அவனுக்கு கும்பகருணன்
ஆறுதல் சொன்னதைக் கம்பன் இப்படி எழுதினான்;
ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்.
சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர்? வருத்தம் செய்யாது
ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை, என்றும் உள்ளாய்!
'என்றும் வாழ்பவனே! உனக்குத் தெரியாததா...?' என்று தம்பியிடம் கேட்டுவிட்டு, வீடணனுக்கு கும்பகருணன் சொன்னான்; 'எது எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது அந்தக் காலத்தில் நடந்துதான் தீரும்.
அழிய வேண்டுவது, அழிந்துதான் தீரும். அதனைப் பக்கத்திலேயே நின்று காப்பாற்ற முயற்சி செய்தாலும், காப்பாற்ற முடியாது'. கதைப்போக்குடன் கம்பன் சொன்ன கருத்துகள்தான் என்றாலும், துன்பத்திலும் குழப்பத்திலும் இருக்கும் எவருக்கும் இந்த சொற்கள் ஆறுதலைத் தரவே செய்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.