
'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்று மு.வ. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். தமிழரின் இயற்கை குறித்த புரிதல், அறிவு, ரசனை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகம் தமிழ்ச் சமூகத்தின் சூழலியல் குறித்த அறிவைப் பறைசாற்றுவதற்குப் போதுமானது.
சங்கப் பாடல்களில் அகப் பாடல்கள் இருபத்தாறு, புறப்பாடல்கள் முப்பத்து மூன்று என மொத்தம் ஐம்பத்தொன்பது பாடல்களை ஒளவைப் பாட்டி பாடியிருக்கிறாள். இந்தப் பாடல்களுக்குள் ஐந்து வகை நிலங்கள் குறித்த தகவல்களும் இருக்கின்றன.
இயற்கையின் காலநிலை மாற்றங்களை மனிதரின் வாழ்வோடு பொருத்தும் ஒளவையாரின் பாடல்களில் மலையும் மலை சார்ந்த பகுதியும் எனக் குறிஞ்சிக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. நான்கு பாடல்கள் அகநானூற்றில் பாலைத் திணையில் இடம்பெற்றிருக்கின்றன. சுட்டெரிக்கும் சூரியனை, பாலையின் கடுமையைச் சொல்ல வருபவள்,
'வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்' (அகம் -11)
பிரிவின் துயரைச் சொல்ல பாலை நிலக் கானகத்தின் வர்ணனையைப் பயன்படுத்துகிறார். அதே நேரத்தில், சூரியன் பூமியில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வெளிச்சத்தைத் தருகிறது என்றும் பொருள்படப் பாடுகிறார்.
விசும்பு விசைத் தெறித்த கூதளங் கோதையின்
பசுங்கால் வெண்குருகு-(அகம் 273:1-2)
கூதள மலர்களைக் கொண்டு கட்டிய ஒரு மாலையை வானில் வீசி எறிந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது பறக்கும் நாரைகளின் கூட்டம் என்று பாடி தமிழ் மண்ணின் அரியவகை மலர், பறவையை பதிவு செய்கிறார்.
நீர் வளமும் நில வளமும் நிறைந்த வயல் சூழ்ந்த இடங்களையும் தம் பாடல்களுக்குப் பின்னணியாகவும் உவமையாகவும் வைக்கிறாள் ஒளவை.
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் (குறுந்-91)
என்று நீர்நிலைகள் அமைந்திருந்த விதத்தைக் காட்சியாக்குகிறார்.
நெருங்கியும் பிணங்கியும் உள்ள பிரம்பங் கொடியில் விளைந்த பழத்தைக் குளத்து மீன்கள் கொத்துகின்றன. குளத்தின் அடியில் தன் தண்டினை ஊன்றியிருப்பதால் குவளை மலர் கொடிய கோடை வெயில் வாட்டினாலும் வாடாது என்கிறார். இதில் மனித மனதை வெளிப்படுத்தும் உளவியல் பொதிந்துள்ளது.
இயற்கை வர்ணனைகள் மிகுந்து காணப்படுதல் பழந்தமிழ் இலக்கியத்தின் தன்மை என்றோ அது வெறும் அழகியல் சார்ந்தது என்றோ விலகிப் போய்விட முடியாது.
சங்க இலக்கியங்களில் குறிப்பாக ஒளவையாரின் பாடல்களில் இயற்கை உளவியலோடு தொடர்புடையது என்ற ஆழ்ந்த சிந்தனை அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.