
சீனி.விசுவநாதன்
இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் மகாகவி பாரதி எவ்வாறு சிறப்புற்று விளங்கினாரோ, அதேபோதில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் தன்னிகரற்று விளங்கினார்.
கடையத்தில் வாழ்ந்தபோது பாரதி 1919-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் சென்னைக்கு வந்தார். சென்னையில் 2-3-1919 அன்று மஹான் மணி ஐயர் என்று சிறப்பித்து அழைக்கப்பெற்ற நீதிபதி சர் எஸ்.சுப்பிரமணிய ஐயர் தலைமையில் 'விக்டோரியா பப்ளிக் ஹால்' என்று அந்த நாளில் பிரசித்தி பெற்று விளங்கிய வி.பி. ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் ஆங்கிலத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஐந்து தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றப் பாரதி திட்டமிட்டதாக தெரிய வருகிறது.
ஆனால், 'தி கல்ட் ஆஃப் த எட்டர்னல்' என்ற சொற்பொழிவுதான் பார்வைக்குக் கிடைக்கின்றது. 17-3-1919 அன்று கோகலே ஹாலில் பாரதி 'நானே கடவுள்' என்ற தலைப்பில் மிகச் சிறந்த சொற்பொழிவை ஆற்றினார்.
அந்தச் சொற்பொழிவின்போது சகல ஜீவராசிகளையும், சகல வஸ்துக்களையும் கடவுளாகப் பாவித்து நடப்பதினாலேயே மனிதன் 'நானே கடவுள்' என்று உணரக்கூடிய நிலைக்கு வரமுடியும் என்றும் குறிப்பிட்டார்.
மற்றும், பாரதி தம் சொற்பொழிவில் 'ஸ்ர்வ ஜீவ பக்தி மதம்' என்று ஒரு புதிய மதத்தை உலகத்திலுள்ள சகல ஜனங்களும் தழுவ வேண்டும் என்றும், அதனால்தான் உலகம் ஷேமமடைய வேண்டும் என்றும், இப் புதிய மதத்தைக் குறித்து தாம் இன்னும் பல பிரசங்கங்கள் இந் நகரில் செய்யப் போவதாகவும், சகல மதஸ்தர்களும் அங்கீகரிக்கக் கூடிய விஷயங்களையே தாம் அப் பிரசங்கங்களில் சித்தாந்தம் செய்யப் போவதாகவும்' சொன்னார்.
பாரதி தாம் குறிப்பிட்ட சொற்பொழிவுகளை ஆற்றினாரா என்பதைத் தெரிந்துகொள்ள இயலவில்லை. இந்தக் கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பாரதி தம் மனைவி ஊரான கடையத்துக்குத் திரும்பினார்.
பாரதி கடையத்தில் வாசம் செய்த காலப் பகுதியில், அவருடைய ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு முஸ்லிம் நண்பர்களில் சிலர் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க பாரதியும் ஆன்மிகச் சொற்பொழிவுகளை ஆற்றினார்.
கடையத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தினால், நபிகள் நாயகம் குறித்தும் பேச முற்பட்டார். ரவண சமுத்திரம் என்னும் ஊரில் 7-3-1920 அன்று பாரதி முதற்கட்டமாகத் தம்முடைய சொற்பொழிவை நிகழ்த்தினார்.
ரவண சமுத்திரத்தில் ஆற்றிய சொற்பொழிவில், நபிகள் நாயகத்தின் சரித்திரத்தைச் சற்று விளக்கமாகப் பேசிய பாரதி, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், வேறு பல விஷயங்களைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
'எல்லாருக்கும் பொதுவாகிய கடவுளின் பக்தியில் உண்மையான 'தீன்' கொண்டு, அதனின்றும் நோவு, சாவு, துன்பம், கவலை முதலிய அரக்கர்களை வென்று மக்கள் தேவர்களைப்போல வாழும்படி கிருபை செய்ய வேண்டும் என்று நான் அல்லா ஹூத்த ஆலாவை மிகவும் வணக்கத்துடனும், உண்மையுடனும் வேண்டிக் கொள்கிறேன். ஆமின்'.
பாரதி சொற்பொழிவு ஆற்றியதன் பின்னர் கூட்டத்தின் தலைவர் ஜனாப் ஹாஜி மகமது மீரான் சஹாப், 'இன்று நமக்கும் ஸ்ரீமான் பாரதியார் மிகவும் அருமையான உபதேசங்கள் செய்தார். மதக் கொள்கை விஷயமாக அவர் பேசியதில் இஸ்லாம் மார்க்கத்தின் உண்மையான தத்துவத்தை எடுத்துக்காட்டினார். நீங்கள் எல்லோரும் அவருடைய உபதேசத்தின்படி நடந்து அல்லாவின் அருள் பெற்று நித்திய வாழ்வு எய்துவீர்களாகுக' என்று முடிவுரை ஆற்றினார்.
சிறிது கால இடைவெளிக்குப் பின்னர், பொட்டல்புதூர் முஸ்லிம் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாரதியும் 20-6-1920 அன்று 'இஸ்லாம் மதத்தின் மஹிமை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் அரபி மொழியில் 'பாத்திஹா' (ஜபம்) ஓதி முடித்தவும், அதற்கு அனுசரணையாகப் பாரதி தாம் 'அல்லா' பேரில் இயற்றிய 'அல்லா அல்லா அல்லா' என்ற பாடலை ராக-தாளத்துடன் பாடிக் காட்டி முஸ்லிம் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
பாரதி தம்முடைய சொற்பொழிவின் தொடக்கத்தில் தமக்கு முதன்முதலாக இஸ்லாம் மார்க்கத்தின் பேரில் அன்பு உண்டானதன் காரணத்தை விளக்கிப் பேசினார்.
'முஹம்மது நபி மஹா ஸூந்தர புருஷர்; மஹா சூரர்; மஹா ஞானி; மஹா பண்டிதர்; மஹா பக்தர்; மஹா லெளகிக தந்திரி; வியாபாரமானாலும், யுத்தமானாலும் முஹம்மது நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி; ஆதலால், அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்' இஸ்லாம் மார்க்கத்தின் வேதம் குரான் என்பதாகும்.
இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாக எட்டியது என்றும், தாம் அதை ஒரு கருவிபோல் நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.
இந்த விதமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியதுடன், நபிகள் நாயகத்தின் வரலாற்றையும் பாரதி மிக விரிவாகவே எடுத்துரைத்தார்.
பாரதியின் அழுத்தமான-ஆழமான சொற்பொழிவைக் கேட்டு முஸ்லிம் அன்பர்கள் பரவசமடைந்தனர்.
நாள் செல்லச் செல்ல பாரதிக்கு கடையம் வாழ்க்கை அலுப்பை ஊட்டியது. எனவே, மீண்டும் சென்னை சென்று நிரந்தரமாகச் சென்னையிலேயே தங்கிவிடவும் முடிவு செய்தார். இந்த நிகழ்ச்சி நடந்தது அனேகமாக 1920-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடலாம்.
சென்னைக்கு பாரதி வந்த தருணத்தில், மீண்டும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பத்திரிகைப் பணி போக எஞ்சிய நேரத்தில் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். உள்ளூர்-வெளியூர் பிரமுகர்கள் தம்மைப் பேசும்படி அழைத்த காரணத்தால், தவறாமல் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
பாரதியின் சொற்பொழிவுகளைக் கேட்ட மக்கள் உற்சாகமடைந்தனர். அன்பர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பாரதி அவ்வப்போது, மாலை நேரங்களில் சென்னைக் கடற்கரையில் நடைபெறும் கூட்டங்களிலும் கலந்துகொண்டார்; தாம் இயற்றிய பாடல்களையும் பாடிக் காட்டி மக்களை மகிழ்விக்கவும் செய்தார்.
22-2-1921 அன்று பாரதி விழுப்புரத்தையடுத்த வெங்கத்தூரில் ஸ்வராஜ்ய சபையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'ஹிந்து மதம்' என்ற விஷயம் குறித்துப் பேசினார்.
தமக்கு மிகவும் வேண்டப்பட்டவரான ஈரோடு தங்கப்பெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், தமது உடல்நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல், கருங்கல்பாளைய வாசகசாலையின் ஆண்டு விழாவில் பாரதி 31-7-1921 அன்று கலந்து கொண்டார். இந்த விழாவில் பாரதி 'மனிதனுக்கு மரணம் இல்லை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
கருங்கல்பாளைய நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாரதி வழக்கம்போல் தம் பணிகளைச் செய்து வந்தார்.
39-ஆம் வயதளவில் பாரதி மரணத்தைக் கடந்தார். அதாவது, தம்முடைய பூத உடலை நீத்துப் புகழுடம்பு பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.