சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?

மலர்மகள் துயிலும் மார்பனே! ஒருவன் தேடிய பொருள் பலவெற்றியை உண்டாக்கும்; மதிப்பை உண்டாக்கும்; கல்வியையும் அழகையும் உண்டாக்கும்.
சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?
Published on
Updated on
1 min read

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. எனவேதான், "பொருள் செயல்வகை' என்னும் அதிகாரத்தில்,

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகு அதனிற் கூரியது இல். (759)

என்றார் திருவள்ளுவர். அப்படி ஒருவன் செய்த (ஈட்டிய) பொருள் அவனுக்கு என்னென்ன நன்மைகள்

செய்யும் என்பதை சீவக சிந்தாமணியில் இரண்டு

செய்யுள்களில் விளக்குகிறார் திருத்தக்கதேவர்.

வென்றி ஆக்கலும் மேதகவு ஆக்கலும்

அன்றியும் கல்வி யோடு அழகாக்கலும்

குன்றி னார்களைக் குன்றென ஆக்கலும்

பொன் துஞ்சு ஆகத்தினாய் பொருள் செய்யுமே!

பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை

தன்னின் ஆகும் தரணி; தரணியின்

பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள்

துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (1922-1923)

மலர்மகள் துயிலும் மார்பனே! ஒருவன் தேடிய பொருள் பலவெற்றியை உண்டாக்கும்; மதிப்பை உண்டாக்கும்; கல்வியையும் அழகையும் உண்டாக்கும்; குறைந்தவரை உயர்ந்தவர்களாக்கும். இப்பொருளாலே படை உண்டாகும்; அப்படையால் பெரிய தரணியும் தனக்கு உரியதாகும். அதன் பயனாய்ப் பின்னையும் பெரும் பொருள் கைகூடும். அது கை கூடுமளவில் அடைய முடியாத பொருள் ஒன்றும் இல்லை. கூடவே வீடு பேறும் கிடைக்கும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

இந்தியச் சிந்தனை மரபில் செல்வத்துக்குரிய தெய்வமாகக் கூறப்படுபவள் தாமரையாளாகிய திருமகள்.

மடிஉளாள் மாமுகடி என்ப; மடிஇலான்

தாள்உளாள் தாமரையி னாள். (617)

என்கிறார் திருவள்ளுவர். சோம்பேறியின் மடியில் இருப்பாள் மூதேவி; உழைப்பவன் காலடியில் காத்திருப்பாள் சீதேவி என்பது இதன் பொருள்.

இத்தகைய செல்வமாகிய திருமகள் மட்டும் ஒருவனிடம் வந்து சேர்ந்து விட்டால் பின் அவனை வந்து அடையாதன ஒன்றுமில்லை என்கிறது சடகோபரந்தாதி. கம்பர் பாடியதாகக் கருதப்பெறும் இந்நூலுள் இடம் பெறும் அச்செய்யும் வருமாறு:

சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?

வேதஞ் செப்பும்

பேராயிரம் திண் பெரும்புய மாயிரம் பெய்துளவத்

தாரார் முடியாயிரம் குருகூர்ச் சடகோபன் சொன்ன

ஆரா அமுதக் கவியாயிரம் அவ் அரியினுக்கே! (45)

அரியாகிய அந்த திருமாலுக்கு வேதங்கள் கூறிய திருநாமங்கள் ஆயிரமாம்; வலிய பெரிய தோள்கள் ஆயிரமாம்; சாத்திய திருத்துழாய் மாலைபொருந்திய திருமுடிகள் ஆயிரமாம்; இப்படி எல்லாம் ஆயிரமாகவே அமையப் பெற்றுள்ள எம்பெருமானுக்குத் திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார் பாடிய தெவிட்டாத அமுதம் போன்ற பாசுரங்களும் ஆயிரமாகவே அமைந்தன.

மிக்க செல்வம் உடையார்க்கு மற்றும் சேராத பொருள்களும் உண்டோ? என்பது பாடலின் கருத்தாம்.

பேர், புயம், முடி என்பவற்றை ஆயிரம் ஆயிரமாகவுடைய திருமாலுக்கு ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழிப் பாசுரம் ஆயிரமும் வாய்த்தன என்ற சிறப்புப் பொருளை, பெருஞ்செல்வர்க்கே மேன்மேற்பொருள் சேருமென்ற பொதுப் பொருள் கொண்டு விளக்கியதனால் வேற்றுப் பொருள் வைப்பணி.

இங்கு "ஆயிரம்' என்பது அளவில்லாத என்னும் பொருளுடையதாகும். அங்ஙனம் கொள்ளாவிடின் புயமாயிரம், முடியாயிரம் என்பன பொருந்தாவாம். ஆகவே, அளவற்ற கை முதலிய சகல அங்கங்களையும் உடையவன் என்பதாம். அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகா ஞானமும் மகா சக்தியுமுள்ளவன் எம்பெருமான் என்பது தேர்ந்த பொருள்... இது திவ்வியாத்ம ஸ்வரூபம் கூறியபடி என்பர் தமிழ் மூதறிஞர் வை.மு.கோபால கிருஷ்ணமாசாரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com