கதைப்போக்கு எப்படி இருந்தாலும், ஆங்காங்கே பொதுக் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் பதித்துக்கொண்டே செல்வான் கம்பன். மூல நூலான வான்மீகத்தில் இல்லாத காட்சிகளையும் உருவாக்குவான். அப்படி ஒரு காட்சிதான் இது. இராமன் மிதிலையில் வில் முறித்த பின்னர், சீதைக்கும் இராமனுக்கும் திருமணம் உறுதியானது. அயோத்தியில் இருந்து மிக நீண்ட ஊர்வலம், திருமணத்தில் கலந்துகொள்ள புறப்பட்டது.
பொதுமக்களும், யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை உள்ளிட்ட படைவீரர்களும், அரச குடும்பத்தினரும் ஊர்வலமாகக் கிளம்பினர். இரவு கவிந்தது. வழியில் இருந்த சந்திரசயிலம் என்னும் மலை அடிவாரத்தில் எல்லோரும் தங்கினர். அந்த நாட்டின் இளைஞர்கள் கொண்டு
வந்திருந்த குதிரைகள், இரவுக்காக அங்கு கட்டி வைக்கப்பட்டன. அந்தக் குதிரைகள் அமுதம் போன்ற உணவு கொடுத்து வளர்க்கப்பட்டவை. கர்ஜிப்பதைப்போல் கனைக்க வல்லவை. அவையெல்லாம், துருக்கி நாட்டில் இறந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
'உண் அமுதம் ஊட்டி, இளையோர் நகர் கொணர்ந்த; துண்ணெனும் முழக்கின; துருக்கர் தர வந்த;' என்று எழுதிச் செல்கிறான் கம்பன். துருக்கி நாட்டுடன் தமிழ்நாட்டுக்கு வணிகப் போக்குவரத்து, கம்பன் காலத்திலேயே நிகழ்ந்தது என்பதற்கான வரலாற்றுப் பதிவு இது!
நிறைய தேர்களும் அந்த ஊர்வலத்தில் வந்தன. அந்தத் தேர்கள் உருண்டோடும் சக்கரங்களின் சுற்று வட்டம் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. அயோத்தி நகர் தொடங்கி, மிதிலை நகரில் தங்கும் இடம் வரையிலான சாலைகள் மண் சாலைகள் அல்ல. இருண்ட கல்லாக இருந்த, கருங்கல் பதிக்கப்பட்ட சாலைகள் அவை. வரிசையாகத் தேர்கள் அந்த கருங்கல் சாலைகளில் பயணித்து வந்திருந்தன.
அந்த கருங்கல் சாலைகள் இப்போது நிறம் மாறி இருந்தன. தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த் தேர்ச் சக்கரங்களின் சுற்று வட்டம் கருங்கல்லில் உரசி உரசி, சாலைகளின் கரிய நிறம் மாறி, தங்கத்தால் அமைக்கப்பட்ட சாலைகள்போல் அவை மின்னின. சாலைகளின் கரிய நிறம், தங்க நிறமாக மாறிய இந்தத் தன்மைக்குக் கம்பன் சொன்ன உவமைதான் அபாரம். அந்த அழகை ரசிக்க, நாம் கொஞ்சம் வள்ளுவனுக்குள் போய்வர வேண்டும்.
'அறிவு மனத்தில் இருந்து வருவதுபோலத்தான் தோன்றும். ஆனால், எப்படிப்பட்டவர்களுடன் ஒருவன் பழகுகிறானோ, அவர்களின் அறிவுதான் அவனுக்கு இருக்கும்' என்கிறான் வள்ளுவன்.
'மனத்து உளதுபோலக் காட்டி, ஒருவற்கு இனத்து உளதாகும் அறிவு' என்பது குறள். உயர்ந்தவர்களுடன் பழகினால், அவர்களது குணம் அப்படியே உடன் பழகுபவர்களுக்கு இறங்கிவிடும். இதன் எதிர்மறையும் உண்மைதான். இந்தக் குறளின் பொருளை அப்படியே கொண்டுவந்து தனது கவிதையில் இணைத்துக்கொண்டிருக்கிறான் கம்பன். அந்தப் பாடலைப் பார்த்துவிடலாம்;
'தெருண்ட மேலவர், சிறியவர்ச் சேரினும், அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்' எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும், பொன்உருள் உரைத்து உரைத்து ஓடி.
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய - இரதம்.
தெளிந்த அறிவுடைய பெரியவர்கள், தம்மைவிட அறிவில் குறைந்த சிறியோரிடம் பழக நேர்ந்தாலும் தங்களது தெளிந்த சிந்தனையை சிறியவர்களுக்குக் கற்றுத் தருவார்களே அல்லாமல், அவர்கள் குணம் மாறிவிடாது.
அதைப்போலவே, 'தங்கத்தினால் அமைக்கப்பட்டிருந்த தேர்ச் சக்கரத்தின் சுற்றுவட்டம், கருங்கல் சாலைகளில் உருண்டு செல்லச் செல்ல, அந்த உராய்வினால் கருங்கல் சாலைகள், பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன...' என்பது பொருள்.
'எப்போதும் உயர்ந்தவர்களுடன் பழகுவதே நன்மை தரும். அவர்கள், மிகச் சாதாரணமான மக்களுடனும் பழகி, அவர்களையும் உயர்த்துவார்கள்' என்னும் சிந்தனையை, இயல்பாக நடைபெறும் ஒரு நிகழ்வினில், இணைத்துச் சொல்கிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.