இந்த வாரம் கலாரசிகன் - 21-09-2025

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார் கொழும்பில் இருந்து வெளிவரும் 'தமிழன்' நாளிதழின் முதன்மை ஆசிரியரான சிவராஜா என்று அழைக்கப்படும் சிவ.ராமசாமி.
இந்த வாரம் கலாரசிகன் - 21-09-2025
Published on
Updated on
2 min read

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார் கொழும்பில் இருந்து வெளிவரும் 'தமிழன்' நாளிதழின் முதன்மை ஆசிரியரான சிவராஜா என்று அழைக்கப்படும் சிவ.ராமசாமி. நிமிஷங்கள் அல்ல, சில மணிநேரம் நாங்கள் நேற்றைய, இன்றைய இலங்கை அரசியல் குறித்தும், யாழ்ப்பாணத் தமிழர்களின் துயரங்கள், சவால்கள் குறித்தும், இலங்கைத் தமிழ் எழுத்துலகம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.

எங்கள் சந்திப்பின் நினைவாக 'தமிழன்' இதழின் ஆசிரியர் கையொப்பமிட்டு எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகம் த.சபாரத்தினம் எழுதிய 'தந்தை செல்வா'. இலங்கை வரலாற்றில் முன்னணித் தமிழ்த் தலைவராகக் கருதப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் அரசியல் குறித்த வரலாறுதான் 'தந்தை செல்வா'. அவரது 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையால் மீள்பதிவு செய்யப்பட்டிருக்கிறது த.சபாரத்தினம் எழுதிய அந்தப் புத்தகம்.

'எனக்கும் தந்தை செல்வாவுக்கும் உள்ள தொடர்பு ஓர் அரசியல் தலைவருக்கும், ஒரு பத்திரிகையாளனுக்கும் உள்ள தொடர்பு மட்டுமே. ஒரு நல்ல பத்திரிகையாளரின் பணியாக, தான் நெருங்கியும், அதே நேரத்தில் விலகியும் நின்று அவதானித்தவற்றையும், அறிந்தவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளேன்' என்று தமது முன்னுரையிலேயே தெளிவுபடுத்தியிருக்கிறார் த.சபாரத்தினம்.

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் அணிந்துரையுடன் வெளிக் கொணரப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம்தான் தந்தை செல்வாவின் அனைத்துப் பரிமாணங்களையும், நிலைப்பாடுகளையும் பதிவு செய்யும் ஆவணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அத்தனை விவரங்கள், தகவல்கள், நிகழ்வுகள்... மலைப்பை ஏற்படுத்துகின்றன!

கடந்த நூற்றாண்டு இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிந்தனைக்கு அடித்தளம் இட்டவர் தந்தை செல்வாதான். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அரசியல் முடிவை எதிர்த்து, இலங்கையில் தமிழர் அரசியல் உரிமைக்கான இயக்கத்தைத் தொடங்கியவரும் அவர்தான். இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் மக்களின் பிரதேச பிரஜா உரிமையை (குடியுரிமையை) இலங்கைத் தமிழர் போராட்டத்தின் ஓர் அங்க

மாகப் பிரகடனப்படுத்தியதும், இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைக்கான தளத்தை வடக்கு- கிழக்கு என்கிற புவியியல் வரையறைக்குள் கொண்டு வந்ததும் அவர்தான்.

1965 மார்ச் 24-ஆம் தேதி தந்தை செல்வா முன்வைத்த கோரிக்கைகள்தான் இன்றுவரை இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளாகத் தொடர்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழ்; நீதிமன்றங்கள் தமிழில் இயங்க வேண்டும்; அதிகாரங்கள் கொண்ட மாவட்ட சபைகள் நிறுவப்பட வேண்டும்; தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகள் சிங்களவர் மயமாக்கப்படலாகாது-இவைதான் அவை. தமிழர் பிரதேசங்களில் இனிமேல் சிங்களக் குடியேற்றம் இடம்பெற அனுமதியோம் என்பது வாக்குறுதியாகவே தொடர்கிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் பிரவேசத்துக்கு முந்தைய இலங்கை அரசியல் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் படித்திருக்க வேண்டிய 'தந்தை செல்வா' என்கிற இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்து எனது புரிதலை விரிவுபடுத்திய 'தமிழன்' முதன்மை ஆசிரியர் சிவராஜாவுக்கு எத்துணை நன்றி சொன்னாலும் போதாது.

சிறுவர் இலக்கியம் என்பது அநேகமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலைமை. யூடியூபில் வரும் அந்நியத்தனமான அனிமேஷன் கார்ட்டூன்கள் படக்கதைகளைக்கூடக் குழந்தைகளிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டன.

கண்ணன், கோகுலம், அம்புலிமாமா என்று சிறுவர்களுக்கான இதழ்கள் வெளிவந்த காலம் மறந்தே விட்டது. ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில் முதன்மை பெற்ற பிறகு, படிப்பதாக இருந்தாலும்கூடக் குழந்தைகள் ஆங்கிலப் புத்தகங்களையும், கதைகளையும்தான் நாடுகின்றனர்.

பெரியவர்கள்கூட ரசித்துப் படிக்கும் அளவில் சிறார் கதைகள் தமிழில் வெளிவந்தன, வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கதைகளை தங்களது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் சொல்லித் தூங்கவைப்பதும், அவர்களை எழுத்துக்கூட்டி படிக்கவைத்துத் தமிழ் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் இன்று கனவாய் பழங்கதையாய் மாறிவிட்டன என்றே தோன்றுகிறது.

அப்படிப்பட்ட சூழலில் எழுத்தாளர் சுகுமாரன் துணிந்து ஒரு பாராட்டுக்குரிய பணியைச் செய்திருக்கிறார்.

குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், குழந்தைகளே எழுதிய படைப்புகள், குழந்தைகளுக்கான படைப்புகள் என சிறார் இலக்கியம் மூன்று வகைப்பாட்டில் அமைந்தது. அந்த வகையில், சுகுமாரன் தொகுத்திருக்கும் புத்தகத்தில் உள்ள 60 கதைகள் சிறார்களுக்கானவை என்றால், 40 கதைகள் சிறார்கள் பற்றியவை.

மகாகவி பாரதியார்தான் தமிழில் சிறார் இலக்கிய முன்னோடி எனலாம். (ஒளவைப் பாட்டியைப் பட்டியலில் சேர்க்காவிட்டால்...) ராஜாஜி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, அழ. வள்ளியப்பா, பெரியசாமி தூரன், வாண்டுமாமா, வை.கோவிந்தன், தி.ஜ.ர. என்று பிரபல எழுத்தாளர்கள் பலர் சிறார்களுக்காகவும் எழுதி இருக்கிறார்கள். அவர்களது படைப்புகளை தனது புத்தகத்தில் இணைத்திருக்கிறார் சுகுமாரன். அழ.வள்ளியப்பாவின் மறைவுக்குப் பிறகான எழுத்தாளர்களின் படைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் வெளிவந்த தேர்ந்தெடுத்த சிறார் கதைகளைத் தொகுத்து '100 சிறந்த சிறார் கதைகள்' என்று தலைப்பிட்டு வெளிக்கொணர்ந்திருப்பதற்காக அவரை விருது வழங்கிப் பாராட்ட வேண்டும். அவரது இந்தத் தொகுப்பை ஒவ்வொரு பள்ளிக்கூட நூலகத்திலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

2015-ஆம் ஆண்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் திருவண்ணாமலையில் 'டிஸ்கவரி' பதிப்பகம் மூன்று நாள் சிறுவர் இலக்கிய முகாமை நடத்தியது. அதை நான் தவற விட்டுவிட்டேன். அடுத்த முகாம் எப்போது? நான் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல குழந்தைகளும்கூட ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கவிஞர் அரிமதி இளம்பரிதியின் கவிதைத் தொகுப்பு 'கனல்' 'கலைமாமணி' விருது பெற்றவர் என்பதால் தனது தொகுப்பில் தன் விவரக் குறிப்போ, முன்னுரையோ, பிரபலங்களின் அணிந்துரையோ வேண்டாம் என்று கருதிவிட்டார் எனத் தோன்றுகிறது.

பனியனில்

மாவீரன் பிரபாகரன்

படத்தோடு

பயணித்தவரை

உணர்வைக்

கட்டுப்படுத்த முடியாமல்

'பெருமையாக உள்ளது' என்றேன்

அவன்

'க்கியா...?' என்றான்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com