பகை, நோய், சோர்வு தணிக...

தணி என்பது முன்னிலை ஏவல் பகுதி. தணிக என்பது வியங்கோள். 'தணிதல்' என்பது தொழில் பெயர். இவையெல்லாம் 'தண்' என்னும் அடிச்சொல்லின் பெருக்கமாகும்.
பகை, நோய், சோர்வு தணிக...
Updated on
3 min read

தணி என்பது முன்னிலை ஏவல் பகுதி. தணிக என்பது வியங்கோள். 'தணிதல்' என்பது தொழில் பெயர். இவையெல்லாம் 'தண்' என்னும் அடிச்சொல்லின் பெருக்கமாகும்.

சீற்றம் தணிந்தது

வெறுப்புத் தணிந்தது

விருப்புத் தணிந்தது

எனப் பண்புகளின் இறங்கு நிலையைக் குறிக்கும் நுண்பொருள் வினைமுற்றுகளாக வரக் காணலாம். விருப்பு வெறுப்புப் போன்ற பண்புகளை முருகி வளரும் தீயாக உருவகித்த நிலையில் அவை குறையும்போது தணிந்தது என்னும் வினைமுற்றைப் பெற்றது. வேகம், நோய் ஆகியவையும் வலிமை குன்றும் போது தணிந்தது என்னும் முற்றைப் பெறக் காணலாம்.

முருகன் அசுரர்களின் மீது படையெடுத்துச் சினத்துடன் போரிட்டு அவர்களை அழித்தபின் சினந்தணிந்து நின்ற இடம் 'திருத்தணிகை' எனப் பெயர்பெற்றது. முருகன் சீற்றம் மிகக் கொள்ளும் இயல்பினன். ஆயினும், அவன் சினம் நிலைத்து நிற்கவில்லை. தமிழகத்தின் வடக்கு எல்லைக்கண் அமைந்த குன்றை அணுகியபோது அச்சினம் தணிந்தது.

'நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர

நெடியகுன்றில் நிற்கு முருகோனே'

எனத் திருத்தணிகை முருகனைப் போற்றுவர் அருணகிரியார். சினம் தணிந்த திருத்தணி ஒரு குறியீடாகும். வாழ்வில் சினத்துக்கு இடம் கொடாமை என்பது அரிது. சினம் வரக்கூடும். ஆனால், அது நெடிது நில்லாது உடனே மறைதல் வேண்டும். தீமையை அழிக்க உண்டாகும் சினம், தீமை ஒழிந்தபின் சாந்தமாக உருவெடுக்கும்.

மனித வாழ்வில் சினத்துக்குச் சில நொடிகளே உரியன. 'நீரில் கிழித்த வடுப்போல மறையுமே சீரொழுகு சான்றோர் சினம்' என்று கூறுவது கருதப்பெற வேண்டும்.

சங்க இலக்கியத்தில் 'தணிதல்' என்னும் சொல் இடம்பெறக் காணலாம். குறுந்தொகையில் காமம் தணிதலைப் பற்றி மிளைப் பெருங்கந்தனார் சித்திரம் செய்வர். காமமும் ஒரு நெருப்புத் தான். திருவள்ளுவர் 'இவளை விட்டு நீங்கினால் காமத்தீ சுடுகிறது; நெருங்கினால் குளிர்கிறது. இப்படி ஒரு தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்? (குறள்:1104) என்று வியந்து பேசுகிறார். இந்தக் காமத் தீ உள்ளத்தின் உள்ளே மற்றவர்க்குத் தெரியாதவாறு மறைந்து கிடக்கும். காதலுக்கு உரியவரைக் கண்டால் உடனே உடம்பெங்கும் மின்தாக்கம் போலத் தன் இருப்பைப் புலப்படுத்தும்.

மிளைப்பெருங்கந்தனார் இதை ஓர் அழகிய உவமையில் பொருத்திக் கூறுவர்.

காமம் காமம் என்று உலகினர் அதைக் குறை கூறுவர். காமம் என்பது புதிதாக வந்து வருத்தம் செய்வதும் இல்லை; பிணியும் இல்லை.

அவ்வுணர்வு மிகுதலும் தணிதலும் இல்லை. அது நெஞ்சில் அப்படியே உறையும். யானை தழையுணவை உண்டு அதனால் மதம் பெருக

நிற்பது போலக் காமமும் தனக்குரியாரைக் காணும் போது, வெளிப்படும் தன்மை உடையது (குறுந்: 136) என்று கூறுகிறார்.

காதல் உணர்வு இளைய உள்ளங்களில் கருக்கொண்டு அயலார் அறியாதவாறு அமைந்து கிடந்து தமக்கொத்த உள்ளம் உடையவரைக் காணும்போது கண்வழி வெளிப்படும். காதல் தோன்றுமிடம் உள்ளம் எனின் அது வெளிப்படும் வாயில் கண்கள்தாம். 'கண்களே! கண்களே! கன்னியரைக் காணாதீர்; காணினும் காதல் கொள்ளாதீர்' என்கிறது திரைப்பாட்டு. அகநானூற்றில் வெறிபாடிய காமக்கண்ணியார், காதலால் உண்டான வருத்தம் எப்படித் தீரும் என்பதைக் கூறக் காணலாம்.

'நம் காதலர் பிரிந்து சென்றதால் உண்டான இவ்வருத்தத்தை எப்படித் தணியப் பெறலாம்? அணுகியவரைத் தீண்டி வருத்தும் தெய்வம் உறைகின்ற மலைநாட்டவராகிய நம் தலைவன் மார்பில் நாம் சேர்ந்தால் நம் பிரிவு வருத்தமும் தணிதல் கூடும்' (அகம்: 98) என்று தோழி கூற்றாகக் கூறுகிறார் புலவர். காதலென்னும் நோய் உண்டாகும் உள்ளம் அது தணிவதற்கு மருந்தாகப் பெறுவது காதலர் தம் கூட்டுறவிலேயே ஆகும். நோயும்

அவளே; அது தணிக்கும் மருந்தும் அவளே'

என்றார் திருவள்ளுவர்.

புறநானூற்றில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

என்று உலகப் பொதுமை பாடிய கணியன்

பூங்குன்றனார் அடுத்த அடிகளில்,

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவ தன்றே (புறம்:192)

என்று கூறுவர். நமக்குத் துன்பமாகி வருத்துவதும், அத்துன்பம் தணிதலும் பிறரால் வருவன அல்ல என்று கூறுகிறார்.

துன்பத்துக்கு வெளியே ஒருவரைக் காரண

மாக்க வேண்டா; தாமே காரணம் என்பது

உளவியல் அறிந்து கூறுவதாகும். ஒருவரின் உள்ளம் இடுக்கண் வருங்கால் நகுவோம் என்றிருப்பின் துன்பம் எப்படி வரும்? அப்படியே துன்பம் வரினும் 'இடும்பைக்கு இடும்பை படுப்போம்' என்றிருப்பவரிடம் அத்துன்பம் தணிந்து விடும். மருந்து தணிக்க வேண்டுவதில்லை. மனத்தின் திண்மை தணிக்கும்! சுரம் தானே விட்டுப் போயிற்று; வெள்ளம் தானே வடிந்து போயிற்று என்றாற்போலத் தணிதலும் தானே நிகழும். அதுவே சான்றோர் இயல்பாகும்.

பகற்காலக் கதிர் நிலத்தைச் சூடாக்கும்; அந்திப் பொழுதின் இளங்காற்று நிலத்தின் வெப்பத்தைத் தணிக்க முயலும். எனினும், மழையே நிலத்தை முழுவதும் வெப்பம் தணிக்க இயலும், முகில்கள் கடலில் நீரை முகந்து வானேறி மழைபெய்ய நிலத்தின் வெப்பம் ஆவியாகும். இதனை நற்றிணை அழகுறக் கூறுகின்றது.

'கீழைக்கடலிலே நீரை முகந்த மேகங்கள் மேலைத் திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணியவாய் மழைபெய்ய நிலத்தின் வெப்பம் தணியும்' (நற்:346) என எயினந்தை மகனார் இளங்கீரனார் கூறுவர். இதில் உள்ள அறிவியல் கருத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட வருகின்றன. நீராடி நீர்சுமந்து கனத்து விண்ணேறுகின்றன; மழையைப் பொழிவிக்கின்றன. நிலம் தணி

கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

தமிழில் இடம்பெற்றது.

இந்தச் சிந்தனை பிற மொழிகளில் இல்லை. வருணன் என்னும் கடவுளின் செயலாகவே மழை பிறமொழிகளில் கூறப்பட்டது. மழைபெய்வதால் நிலம் குளிர்கிறது என்னும் கருத்தும்

இவ்வாறே. மழையால் பெறும் நீரே நிலத்தின் உட்புகுந்து தேங்குகிறது என்ற கருத்து கிரேக்க அறிஞர்களாலும் சொல்லப்படவில்லை. மழைநீர் வேறு, நிலத்தடி நீர்வேறு என்பது அரிஸ்டாடில், பிளேட்டோ போன்றவர்களின் கருத்தாக இருந்தது. மழைநீர் நிலத்தின் வெப்பம் தணிவிப்பது என்பது பண்டைத் தமிழிலக்கியங்களில் இயல்பாகப் பெறப்படும் கருத்தாகும்.

புலவர்களும் மக்களும் பண்டைக் காலத்தில், சினத்தை வலிமைக்குரிய பொருளெனக் கருதவில்லை. சான்றோர் பகை வேண்டாமென்னும் கருத்தினர்.

பகை தணிக (ஐங்:6)

நோய் தணிக (கலி:147)

சோர்வு தணிக (புறம்:70)

என்னும் பகையும் நோயும் சோர்வும் தணிக என வாழ்த்துவது தமிழ் மரபாக இருந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com