இந்த வாரம் கலாரசிகன் - 08-02-2026

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் சிரஞ்சீவியின் மகன் ரித்தீஷின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வியாழன் அன்று மதுரை சென்றிருந்தேன்.
இந்த வாரம் கலாரசிகன் - 08-02-2026
Updated on
2 min read

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் சிரஞ்சீவியின் மகன் ரித்தீஷின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வியாழன் அன்று மதுரை சென்றிருந்தேன்.

அப்போது, நண்பர் வி.ஜி.ராமதாஸூடன் 'தினமணி' நாளிதழின் தலைமை நிருபராகப் பணியாற்றிய பெரியவர் வி.என்.சாமியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். 'தினமணி'யில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்தபோது இணைந்து, ஐராவதம் மகாதேவன் காலத்தில் பணி ஓய்வு பெற்றவர். அகவை 96 என்றாலும்கூட இப்போதும் எழுத்து, படிப்பு என்று இயங்கிக் கொண்டிருப்பவர் அவர்.

அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். பெரியார் ஈ.வெ.ரா.வின் உதவியாளராகத் தனது வாழ்க்கை தொடங்கியது என்றும், அதிக ஊதியத்தில் பெரியார் அவருக்கு வேறு வேலை வாங்கித் தந்தும்கூட,அதை ஏற்றுக் கொள்ளாமல்

பெரியாரின் உதவியாளராகவே தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.

பெரியாருடனான அவரது அனுபவங்களை ஏன் பதிவு செய்யவில்லை என்று நான் கேட்டபோது, அவரது பதில்-'அதையெல்லாம் நான் எழுது

வதாக இருந்தால் பலரது மனம்

புண்படக்கூடும். மறைந்துவிட்ட

பலரின் பெயருக்குக் களங்கம்

ஏற்படுத்துவதில் என்ன லாபம்?'

'தினமணி' நாளிதழில் அவர் முழு நேரப் பத்திரிகையாளராக இணைந்த நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமானது. அப்போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் 'தினமணி' நாளிதழுக்குத் தனியாக நிருபர்கள் இருக்கவில்லை.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிருபர் ஆங்கிலத்தில் தரும் செய்தியை 'தினமணி' நாளிதழில் தமிழ்ப்படுத்தி வெளியிடுவார்கள்.

'திமுக ஆட்சி அமைந்து, முதல்வர் அண்ணா பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுவதைக் கேட்க நானும் சென்றிருந்தேன். பத்திரிகையாளர்கள் அறையில் இருந்த 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலைமை நிருபர் வி.எஸ்.கணபதி சர்மா அந்த உரையை தினமணிக்கு செய்தியாகக் கொடுக்கும்படி என்னைப் பணித்தார். சுருக்கெழுத்தும், தட்டச்சும் தெரிந்திருந்த எனக்கு

அண்ணாவின் உரையைப் பதிவு செய்வதில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை.

முதல்வர் அண்ணா தமிழில் பேசியதை ஆங்கிலத்தில் எடுத்துத் தமிழாக்கம் செய்வதைவிட, நேரிடையாகத் தமிழில் பதிவு செய்திருந்தது, ஆசிரியர் ஏ.என்.சிவராமனுக்குப் பிடித்து விட்டது. அப்படித்தான் தொடங்கியது எனது 'தினமணி' வாழ்க்கை' என்று விவரித்தார் வி.என்.சாமி.

இந்திய விடுதலை இயக்க வரலாறு, புகழ்பெற்ற கடற்போர்கள் உள்ளிட்ட 16 புத்தகங்களை எழுதி இருக்கும் வி.என்.சாமி தற்போது தொகுத்துக்கொண்டிருக்கும் இரண்டு புத்தகங்கள்- தமிழகத்தின் நீராதாரங்கள், விடுதலைப்போரில் உயிர் நீத்த பிராமணர்கள்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவருடன் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு மனதில்லா மனதுடன்தான் விடைபெற்றுப் பிரிந்தோம். 'அகவை நூறுக்கு வாழ்த்துப்பெற வருகிறோம்' என்றபோது வி.என்.சாமி சிரித்துக்கொண்டே சொன்னார்- 'தீர்க்காயுசு என்பது 100 வயது; பூரண ஆயுசு என்பது 120 வயது!'

பெரியார், பெரியவர் ஏ.என்.சிவராமன் ஆகியோரிடம் பணியாற்றிய, எழுத்தைத் தவமாக மேற்கொண்டிருக்கும் 'தினமணி' நாளிதழின் மேனாள் தலைமை நிருபரைச் சந்தித்து ஆசிபெற முடிந்தது, இந்நாள் 'தினமணி' ஆசிரியராக நான் பெற்ற பேறு என்பதல்லால் வேறென்ன?

தினமணி நாளிதழ் வாசகர்களுக்கு நன்றாகவே அறிமுகமான பெயர் இரா.கற்பகம். அவரது நடுப்பக்க கட்டுரைகள் பல்வேறு சமூகப் பிரச்னைகளையும், சமுதாயத்தைப் பண்படுத்தும் கருத்துகளையும் பதிவு செய்பவை. இரா.கற்பகத்துக்குக் கட்டுரையாளர், கல்வியாளர் என்பது மட்டுமல்லாமல் சிறுகதை எழுத்தாளர் என்கிற இன்னொரு முகமும் உண்டு.

ஆரம்பத்தில் 'பாக்யா', 'கல்கி' உள்ளிட்ட பருவ இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த இரா.கற்பகம், 'தினமணி' நடுப்பக்கக் கட்டுரையாளராக ஒரு கட்டத்தில் தன்னை மாற்றிக்கொண்டார். ஆனாலும், அவருக்குள் கனன்று கொண்டிருந்த புனைவின் தாக்கம் அணைந்து விடவில்லை.

'தினமணி-சிவசங்கரி' இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி புனைவு எழுத்தாளர் என்கிற அவரது பரிமாணத்தை மீண்டும் உயிர்ப்பித்தது எனலாம். அதன் விளைவுதான் அவர் அண்மையில் வெளிக்கொணர்ந்திருக்கும் 'அந்தக் கருப்புநிறக் கண்கள்' என்கிற சிறுகதைத் தொகுப்பு.

'தினமணி-சிவசங்கரி' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'உயிர்' சிறுகதையில் தொடங்கி 11 கதைகளை உள்ளடக்கியது அவரது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைக்கு என்று சில அடிப்படை இலக்கணங்கள் உண்டு. இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் பலர் சிறுகதைகளைக் கட்டுரையாக்கி விடுகிறார்கள்; அல்லது குறுநாவலாக்கி விடுகிறார்கள். அந்தத் தடம் புரள்வுகளுக்கு இரையாகாமல் தனது சிறுகதைப் புனைவுகளைப் படைத்திருப்பதுதான் இரா.கற்பகத்தின் பாராட்டுக்குரிய அம்சம்.

'நாம் தினம் தினம் சந்திக்கும் நபர்கள், நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சாதாரண சம்பவங்கள், நாம் பார்க்கும் பாசப் போராட்டங்கள், கொள்கை மோதல்கள்- இவையெல்லாம் பல சிறுகதைகளுக்கு அடிப்படைகளாக அமைகின்றன. நம்மைச் சுற்றிலும் நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்தால் எத்தனையெத்தனை கதைகள் கிடைக்கின்றன என்பதை எண்ணும்போது ஆச்சரியம் உண்டாகிறது. நான் கண்டு, கேட்டு, அனுபவித்த நிகழ்வுகளைக் கற்பனை கலந்து சிறுகதை

களாக இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறேன்' என்று தன்னுரை விளக்கம் தருகிறார் இரா. கற்பகம்.

நல்ல புனைவு எழுத்தாளர்கள்தான், சிறந்த கட்டுரையாளராக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது இரா.கற்பகத்தின் 'அந்தக் கருப்புநிறக் கண்கள்' என்கிற சிறுகதைத் தொகுப்பு.

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அனுப்பி தந்திருந்த கவிதை இது. இனிவரும் தலைமுறைக்கு கொழுக்கட்டையும் தெரியாது; தமிழும் தெரியாது என்பதை நாசுக்காக

உணர்த்துகிறது கவிதாயினி புதிய மாதவியின் படைப்பு.

பாட்டி பனை ஓலையில்

கொழுக்கட்டை செய்தாள்

அம்மா இட்லி சட்டியில்

கொழுக்கட்டை அவித்தாள்

நான் கொழுக்கட்டையை

கடை வீதியில் வாங்கினேன்

மகள் அமேசானில்

ஆர்டர் செய்கிறாள்

பேத்தி கேட்கிறாள்

'வாட் ஈஸ் கொழுக்கட்டை?'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com