திராவிட மொழியியல் சிற்பி

இந்தோ - ஐரோப்பிய மற்றும் திராவிட மொழிகள் பெருவாரியாகப் பேசப்படும் நம் இந்தியாவில் எல்லா மொழிகளுமே காலத்துக்கேற்ப உயரிய சிந்தனைகளை முன்வைப்பதோடு உயிர்ப்புடன் திகழ்கின்றன.
திராவிட மொழியியல் சிற்பி
Updated on
2 min read

த. விஷ்ணு குமாரன்

இந்தோ - ஐரோப்பிய மற்றும் திராவிட மொழிகள் பெருவாரியாகப் பேசப்படும் நம் இந்தியாவில் எல்லா மொழிகளுமே காலத்துக்கேற்ப உயரிய சிந்தனைகளை முன்வைப்பதோடு உயிர்ப்புடன் திகழ்கின்றன. ஆனாலும், அவை உயிர்ப்புடன் நிலைத்து நிற்பதில் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் மொழி ஆய்வாளர்களுக்கும் தனிப்பெரும் பங்குண்டு. அத்தகையவர்களுள் ஒருவர்தான் திராவிட மொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம்.

நூற்றாண்டு காணும் அவரது பிறந்த நாளில் (18-02-1926) அவர் திராவிட மொழியியலுக்கு ஆற்றிய பணியை அடையாளப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிறது.

தமிழோடு மட்டுமல்லாமல் நிலம் மற்றும் அரசியல் கடந்து அனைத்துத் திராவிட மொழிகளையும் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வில் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் 1977-ஆம் ஆண்டு பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத்தைத் திருவனந்தபுரத்தில் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் நிறுவினார். அவரது உயர்ந்த நோக்கத்தைப் புரிந்துகொண்ட கேரள அரசு 30 ஏக்கர் நிலத்தை அதற்காக அளித்ததுடன் சரியான கட்டமைப்பை ஏற்படுத்தவும் உறுதுணையாக நின்றது.

அவர் உருவாக்கிய நிறுவனம் இன்றுவரை எல்லா திராவிட மொழிகளுக்கும் (இப்போதுவரை 27 மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன) முக்கியத்துவம் தந்து, பல்வேறு ஆய்வுகள் மூலம் புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்த வண்ணம் இருக்கிறது. இதை ஒரு மகத்தான சாதனை என்றே குறிப்பிட முடிகிறது. மத்திய அரசு வடமொழிக்கும், ஹிந்திக்கும் மட்டுமே முதன்மை கொடுத்து வந்த நிலையில், அண்மையில்தான் தமிழ் உள்ளிட்ட சில செம்மொழிகளுக்கும் உதவி செய்து வருகிறது.

ஆனால், ஒரு தனி நிறுவனமாக அனைத்துத் திராவிட மொழிகளுக்குமான பொது நிறுவனமாகச் செயல்படுவது பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம் மட்டுமே! திராவிடவியல் ஆய்வாளர்களையும் மக்களையும் அறிவுத் தளத்தில் ஒன்றாக இயங்கச் செய்வதில் வெற்றி பெற்று விட்டது இந்த நிறுவனம்.

கால்டுவெல் திராவிடமாகக் குறிப்பிட்டிருந்த பிராகுயி மொழி குறித்த உண்மைகள் எந்த அளவுக்கு உண்மை என்பதைக் கண்டறிய நேரடியாகவே ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், பலூசிஸ்தான் பகுதிகளுக்கு 1980-களில் ஜோசப், கோபிநாத நாயர் ஆகிய ஆய்வாளர்களை அனுப்பியவர் வ.ஐ.சுப்பிரமணியம். அந்த ஆய்வுகளுக்குப் பிறகு, பிராகுயி திராவிடக் குடும்பம் என்பது உறுதியானது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பல்கலைக்கழகம் ஏதேனும் ஒன்றில் திராவிடவியல் கருத்தரங்குகளை நடத்தி புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவர் தொடங்கிய 'ஐஎஸ்ஜேடிஎல்' என்னும் பன்னாட்டு ஆய்விதழ் உலகப் புகழ் பெற்றது. திராவிட மொழியியல் நிறுவனம் இதுவரை 177-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது. அனைத்துமே அந்தத் துறையில் ஆழங்காற்பட்டவர்கள் உருவாக்கியவை.

அந்த வகையில், தொல்காப்பியத்துக்கு அகராதி உருவாக்க என்னை நியமித்தார்.

அதுபோலவே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் பிற திருந்தாத திராவிட மொழிகளுக்கும் கருவி நூல்களை உருவாக்கச் செய்தார். பல்வேறு கலைக்களஞ்சியங்கள் அவரது மேற்பார்வையில் வெளிவந்துள்ளன.

தமிழ் ஆய்வுக்குப் பல்வேறு மொழிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பேராசிரியர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1980-களில் முதல் துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் ஆய்வு மாணவர்களை சம்ஸ்கிருதம், சிங்களம், மராத்தி, பாலி போன்றவற்றை முறைப்படி படிக்க ஏற்பாடுகள் செய்தார்.

தமிழகத்துக்கு வெளியே திராவிட மொழியினரையும் ஆய்வையும் அறிவுத் தளத்தில் ஒன்றிணைப்பதே சிறப்பு என்ற நோக்கில் திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கப் பாடுபட்டார். அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் உதவியையும், ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் உதவியையும் நாடினார். அதன் விளைவாக 1997- குப்பம் நகரில் திராவிடப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பேராசிரியரை முதல் இணை வேந்தராக ஆந்திர அரசு பணியமர்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்று திராவிடம் சார் ஆய்வுகளைத் தமிழ், கன்னடம், தெலுங்கு, துளு மற்றும் ஆங்கில மொழிகளில் முன்னெடுத்துச் செல்கிறது இந்தப் பல்கலைக்கழகம்! இந்த மொழிகளில் பல்வேறு நூல்களையும் வெளியிட்டு வருவதோடு மொழிபெயர்ப்புகளையும் நிகழ்த்தி வருகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திராவிடப் பல்கலைக்கழகத்துக்கு அனுசரணையாக இயங்கி வருவது மகிழ்ச்சியான செய்தி. தற்போது பொறியியல் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயில தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநில மக்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது ஆந்திர அரசு. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களும் தங்கள் பங்களிப்பை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு அளித்து வருவது கூடுதல் செய்தி.

திராவிடமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் நிறுவனம் தற்போது பெங்களூரில் தோன்றியுள்ளது. கேரளப் பல்கலைக்கழகம் மனோன்மணீயனார் திராவிட ஆய்விருக்கையை 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உருவாக்கம், முதல் உலகத் தமிழ் மாநாடு ஆகியவற்றில் பேராசிரியரின் பங்கு முக்கியமானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1926, பிப்ரவரி 18-இல் பிறந்த அவர் 1946 - 57 வரை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிறகு 1958 முதல் 1967 வரை கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையிலும், 1967 முதல் மொழியியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

கடமையையே கண்ணென கருதி வாழ்ந்த இந்த மாமனிதர் பெயரில் தமிழக அரசு பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவரது பெயரில் நூலகமும், நினைவு மண்டபமும் அமைப்பது அவருக்கு நாம் தரும் மரியாதையாக இருக்கும்.

(பிப்.18 பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com