

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன. இவை பஞ்ச பூதங்கள் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் நீரும், நெருப்பும் நேர் எதிரே வைத்துப் பார்க்கப்படுபவை அல்லது பேசப்படுபவை என்பதை நாம் அறிவோம்.
அறிவியலாளர்கள் இந்த மூலப் பொருள்களின் தன்மையை, உலக இயக்கத்துக்கான அதன் அமைப்புகளை பெரிதும் விவரித்துள்ளனர். ஆனால், கவிஞர்களும், எழுத்துப் படைப்பாளிகளும் பஞ்ச பூதங்களை அவரவரின் கற்பனை சக்திக்கு ஏற்ப ஒன்றில் ஒன்று அல்லது ஒன்றை ஒன்று தழுவிச் செல்வதாகத் தத்தமது படைப்புகளில் அழகுபடச் சித்தரித்துக் காட்டுகிறார்கள்.
மண்ணும் காற்றும் ஒன்றை ஒன்று ஒட்டி உறவாடலாம்; மண்ணால் ஆகிய உலகம் ஆகாயத்தைத் தழுவி இயங்கி வரலாம்; ஆனால், நீரும் நெருப்பும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை;
அவை ஒன்றுடன் ஒன்று உறவாட வாய்ப்பிலை. ஆனால், கவிஞர்களும், இலக்கியப் படைப்பாளிகளும் அது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. இலக்கியச் சுவை கருதி அல்லது அழகியல் பண்புகளின் மீது காதல் கொண்டு நீருக்குள் இருந்து நெருப்பு எழும்புவதாகவும், நெருப்பு நீரின் மீது விழுந்து பரவுவதாகவும் பாடல்கள் இயற்றி நம்மை மகிழ்வித்து வந்திருக்கிறார்கள்.
இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ்மொழியில் சொல்லவே வேண்டாம்; நீருள் நெருப்பு அல்லது நெருப்பு தழுவிய நீர் என்றவாறு காலங்காலமாகப் பாங்குறப் பாடி வந்துள்ளனர். தெய்வப் புலவர் திருவள்ளுவர் தமது சில குறட்பாக்களில் நீரையும் நெருப்பையும் ஒன்றாக்கியும் வேறுபடுத்தியும் காட்டுவதைக் காண்கிறோம்.
கள்ளுண்ணாமை அதிகாரம் ஒன்பதாவது குறட்பாவில், 'கள்ளுண்டு போதையில் மயங்கிய ஒருவனைக் காரணங்கூறி தெளிவித்தல் என்பது, நீருள் முழ்கிய ஒருவனை நெருப்பாலாகிய விளக்கு கொண்டு தேடுவதற்கு ஒப்பானது' என்கிறார்.
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானை தீத்துரீஇ யற்று (குறள் - 929)
என்ற குறட்பாவில் நீருக்கும் நெருப்புக்கும் உள்ள எதிர் எதிர் நிலைகளை விளக்குகிறார்.
இந்நிலையில், தமிழின் ஆகச் சிறந்த இலக்கியப் பனுவல்களுள் ஒன்றான முத்தொள்ளாயிரம் மிகச் சிறந்த அழகியல் காட்சியாக நீருள் விழுந்த நெருப்பு அணைய செய்தி ஒன்றை காட்சிச் சித்திரமாக வடித்துக் காட்டுகிறது. உயரிய சிந்தனைப் போக்குடன் எழுதப்பட்ட அந்தப் பாடலின் (பாடல் எண் - 3 ) காட்சி இவ்வாறு விரிவடைகிறது - 'நீரும், சேறும் நிறைந்த வயல்களுடன் கூடிய நீர்நிலை.
அதிகாலையில் சுறுசுறுப்படைந்த நீர்ப் பறவை இரை தேடி சுற்றி வருகிறது; அதன் குஞ்சுகள் அங்கும் இங்கும் தாவித் திரிகின்றன. கீழ் வானிலிருந்து காலைக் கதிரவன் உதித்தெழுகிறான்; அதே கணத்தில் சேற்றிலே வளர்ந்த அரக்கு நிற ஆம்பல் ஒன்றின் இதழ்கள் விரிந்து அவிழ்கின்றன.
ஒருசேர நடந்த காலைக் கதிரின் எழுச்சியும், அரக்கு ஆம்பல் மலரின் மலர்ச்சியும் கண்ட தாய்ப் பறவை, கானகமே கனல் பட்டதோ, நீர்ப்பரப்பில் நெருப்பு விழுந்ததோ என்று அஞ்சி படபடத்து ஓடி, கை போன்ற தனது சிறகுகளால் குஞ்சுகளை மூடிக் கொண்டு, அச்சத்தால் ஆரவாரம் செய்கிறது.
'பகைவர்களுக்கு நஞ்சினைப் போன்று அச்சத்தைத் தரும் வேலினை கையிலே கொண்ட சேரன் மாகோதை நாட்டில் இது போன்ற பறவைகளின் ஓசையைத் தவிர வேறு பதற்றமான ஓசைகள் கிடையாது. மக்கள் அமைதியாக வாழ்ந்தனர்' என்கிறது இந்தப் பாடல்
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளம் தீப்பட்டது எனவெரீஇப்
புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை
உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு
(முத்தொள்ளாயிரம் )
ஒரே ஒரு வெண்பாவின் வழியே இயற்கைத் தெளிவின் அழகியலையும், தாய்ப் பறவையின் பாசப் பிணைப்பையும் இப்பாடல் பாங்குற சித்தரிப்பதை உணர்ந்து நாம் மகிழ்கிறோம்.
இப்பாடலில் 'அரக்காம்பல் வாய் அவிழ' என்ற சொற்றொடர் வருகிறது. அரக்காம்பல் என்பது அரக்குபோல அடர்சிவப்பு நிறம் கொண்ட ஆம்பல் மலராகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.