

நான் அதிர்ந்துதான் போனேன். தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், கட்செவி அஞ்சல் கேள்விகள், நேரில் வந்தவர்கள், 'தினமணி' பதிப்பு அலுவலகங்களையும், நிருபர்களையும் அழைத்து நலம் விசாரித்தவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
வேறு வழியே தெரியாமல்தான் கடந்த வாரம் நான் எழுத வேண்டிய 'இந்த வாரம்' பகுதியை எழுதிக் கொடுக்க இயலாமல் போனது. தில்லி குளிரில் இருந்துவிட்டு சென்னை திரும்பி, இங்கிருக்கும் பனியை எதிர்கொண்டதுதான் காரணமோ என்னவோ தெரியவில்லை. இடைவிடாத வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனேன். நான் சோர்ந்து விட்டது மட்டுமல்ல, எழுதக்கூட முடியாத அளவுக்கு ஒருவித பலவீனம் தொற்றிக் கொண்டது.
அப்படி இருந்தும், எனது நண்பரும் தமிழகத்தில் 24 மணிநேர மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு காரணமானவருமான மருத்துவர் அன்பரசிடம் எழுதுவதற்கு என்னைத் தயாராக்குங்கள் என்கிற வேண்டுகோளுடன்தான் அவரது அயனாவரம் மருத்துவமனைக்கே சென்றேன்.
பேனாவைப் பிடித்தால் கை நடுங்கும் அளவுக்கு பலவீனம். ஒலிப்பதிவீடு செய்யலாம் என்றால், ஏனோ எனது உணர்வுகள் அந்த நேரத்தில் அதற்கு ஒத்துழைக்கவில்லை. 'இந்த வாரம்' பத்தியானாலும், அன்றாட ஆசிரியர் உரையானாலும் பேனாவால் காகிதத்தில் எழுதுவதுதான் எனக்கு இயல்பானதாக இருக்கிறது.
அடுத்த நாள் நாளிதழ் அச்சு ஏற வேண்டிய காலக்கெடு நெருங்க நெருங்க எனது மன உறுதி குறைந்து கொண்டே வந்தது. வேறு வழியில்லாமல் சிறுகுறிப்புடன் சென்ற வார 'இந்த வாரம்' அச்சு ஏறாமல் போனது.
அடுத்த நாள் அதிகாலையிலிருந்து அழைப்புகள் வரத் தொடங்கி விட்டன. வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குக் காரணம் இருந்தது. கடந்த பல ஆண்டுகளில் இது போல் 'இந்த வாரம்' காரணமே இல்லாமல் தடைபட்டதில்லை. தமிழ் இதழியல் வரலாற்றில் ஓர் இலக்கிய பத்தி இதுபோலத் தொடர்ந்து பல ஆண்டுகள் எழுதப்பட்டதில்லை என்பதும் உண்மை. அது ஏன் தடைபட்டது என்கிற வியப்பு எழுவது நியாயம் தானே?
ஒட்டுமொத்த உலகமும் முடங்கிக் கிடந்த கொவைட்19 கொள்ளை நோய்த் தொற்று காலத்திலேகூட 'இந்த வாரம்' தடைபட்டதில்லை. சொல்லப்போனால் பல புத்தகங்களைப் படிக்கவும், அவை குறித்து எழுதவும், பல ஆளுமைகள் குறித்த இரங்கல் பதிவுகளைச் செய்யவும் அப்போது முடிந்தது. மருத்துவமனையில் 74% நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையிலும்கூட, எனது எழுத்து ஓய்வெடுத்ததில்லை. இதைச் சுட்டிக்காட்டி கடந்த வாரம் பதிவிடாமல் போனதன் காரணம் கேட்டவர்கள் பலர்.
தாயாரின் மறைவால் உணர்வுபூர்வமாகத் தளர்ந்து நடைப்பிணமாகிவிட்ட நேரத்தில்கூட உங்களால் 'இந்த வாரம்' எழுத முடிந்தபோது, இந்த வாரம் கலாரசிகனால் ஏன் 'இந்த வாரம்' எழுத முடியவில்லை என்று அக்கறையுடனும், என் மீதுள்ள அளவு கடந்த பாசத்துடனும் கேட்டவர்கள் ஏராளம்.
''என்னவாயிற்று ஆசிரியருக்கு? ஏதாவது விபத்து நேர்ந்து விட்டதா?'' என்றெல்லாம் பதறிப்போய் தொலைபேசி மூலமும், நேரிலும் விசாரித்த அந்த வாசக அன்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லத் தமிழில் எனக்கு வார்த்தைகள் இல்லை.
முதலில் சொன்னதுபோல வாசகர்களின் அன்பையும் அக்கறையையும் பார்த்து நெகிழ்ந்துதான் போனேன்; நன்றாக இருக்கிறேன்; முழுமையாகக் குணமடைந்து விட்டேன். இந்த வாரம்முதல் 'இந்தவாரம்' தடைபடாமல் வெளிவரும்.
நண்பர், கவிஞர், தோழர் ஜீவபாரதிக்கு அறிமுகம் தேவையில்லை. இடதுசாரி சிந்தனாவாதிகள் யாராக இருந்தாலும் (இன்றைய) அவர்களுடைய பேச்சிலும் எழுத்திலும் எடுத்துக்காட்ட தோழர் ஜீவபாரதியிடமிருந்து தகவல்களைக் கடன் வாங்கியவர்களாகத்தான் இருப்பார்கள்.
தோழர் கே.ஜீவபாரதி வெளிக்கொணர்ந்திருக்கும் கடந்த ஆண்டுப் படைப்பு 'சரித்திரம் பேசுகிறது'.139 ஆளுமைகள் குறித்த சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகள், அடுத்த தலைமுறைக்கான பதிவுகளாக எழுத்தாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 'ஜனசக்தி' இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இது. அந்த இதழைப் பார்க்கவும், படிக்கவும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, வரலாற்றின் சில முக்கியமான நிகழ்வுகளை இந்தத் தொகுப்பின் மூலம் எடுத்துச் சென்றிருக்கிறார் ஜீவபாரதி.
தீரன் சின்னமலைக்கு ஒவ்வோர்ஆண்டும் ஆடிப்பெருக்கு தினத்தில் மக்கள் ஏன் விழா எடுக்கிறார்கள்? உலகம் சந்தித்த எத்தனையோ தலைவர்களில் இருந்து ரஷியாவின் லெனின் ஏன் வித்தியாசப்படுகிறார்? கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணனை சிறுவனாக இருந்தபோதே அடையாளம் கண்டு டி.கே.சண்முகம் அண்ணாச்சி பாராட்டியது ஏன்? 'தமிழ்ச் செம்மல்' திரு.வி.க. ஏன் கடைசிவரை எந்த உதவியையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து மறைந்தார்?
மாவீரனாக சத்திரபதி சிவாஜி உயர்ந்தது எதனால்? மகாகவி பாரதியின் கவிதையால் கவரப்பட்டு அவருக்கு பாதுகாவலராக அவரைத் தொடர்ந்த ரெளடி ஒருவர் பற்றித் தெரியுமா? ஜாதகம் சரியில்லை என்று உறவுகளால் உதறப்பட்ட ஒருவர், பிற்காலத்தில் எழுத்தால் தனது தலையெழுத்தை மாற்றிக்காட்டிய வரலாறு குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இப்படி எத்தனை எத்தனையோ புதுப்புதுத் தகவல்கள், சம்பவங்கள், வாழ்க்கை வரலாறுகள் இந்தப் புத்தகத்தில் பேசுகின்றன. ஏனென்றால் அவை சரித்திரங்கள்.
புத்தாண்டு பிறப்பதற்கு முன்னால் கடைசி வாரத்தில் பதிவு செய்வதற்காக நான் சில வாரங்களுக்கு முன்பே எடுத்துக் கொடுத்திருந்த கவிதை இது. புத்தாண்டின் முதல் வாரத்தில் பதிவு செய்வதற்கும் பொருத்தமானதுதான். கவிஞர் அதிரனின் 'நாட்குறிப்பு' என்கிற கவிதை, அநேகமாகப் பலருக்கும் உண்மை அனுபவமாக இருக்கும்.
புரட்டிப்பார்க்கிறேன்
கடந்த வருட நாட்குறிப்பின்
முதல் பக்கத்தை...
பளிச்சிடுகின்றன
எழுதி வைத்திருந்த
பத்துக் கட்டளைகள்...
ஒன்றையேனும்
கடைப்பிடித்திருந்தால்
சற்றேனும் உயர்ந்திருப்பேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.