பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

வெளவால் கண்ட கனவு

வெளவால் கனவு காணுமா?- காணும் என்று சங்க இலக்கியத் தலைவி மூலம் நக்கண்ணையார் சொல்கிறார்.

வெளவால்.

Updated On :

- முனைவர் சொ. ஏழுமலை

வெளவால் கனவு காணுமா?- காணும் என்று சங்க இலக்கியத் தலைவி மூலம் நக்கண்ணையார் சொல்கிறார்.

குறுநில மன்னனாகிய சோழன் அழிசி, நெல்லி மரத்தில் காய்த்து இருக்கும் ஒரு நெல்லிக் கனியை தினமும் காலையில் உண்டு சிறப்புற்று வாழ்ந்து வந்தான். அதனால், நெல்லி மரத்துக்கு மிகுதியான காவல் போடப்பட்டு இருந்தது. அதையும் மீறி யாராவது அதைப் பறித்து விட்டால் அவரை உயிர்ச்சேதம் செய்து விடுவர். அப்படி, காவல் நிறைந்த அரிய நெல்லிக் கனியை உண்பது போல வெளவாலானது பகற் கனவு கண்டது.

பகல் கனவு கண்டால் பலிக்காது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. இது போலச் சங்க இலக்கியத் தலைவி ஒருத்தி, திருமணத்தை முன்னிறுத்திப் பொருள் ஈட்டச் சென்ற தலைமகனின் பிரிவு ஆற்றாமல், பகலிலே, 'தலைவனது நாட்டில் பெரிய அடி உடைய புன்னையில் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்திருந்தன. அவற்றில் இருந்த தாதுக்கள் அக்கடல் துறையில் மேய்கின்ற சிப்பியின் மீது விழுந்து மூடிக் கொண்டன. அங்குள்ள சிறுகுடிசையில் உள்ள பரதவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு உப்பங்கழிக் கரையில் உள்ள சோலை அழகைக் கொடுத்தது. அதை நினைத்துத் தலைவனுடன் சேர்ந்து மகிழ்ந்தது போலக் கனவு கண்டாள்'. பகல் கனவு பலிக்காது என்பதால், தான் கண்ட கனவும் வெளவால் கண்ட கனவு போலப் பலிக்காது போய் விடுமோ என்று தோழிக்குத் தான் கண்ட கனவை உரைத்து அஞ்சுகிறாள்.

தலைவி பசலை உற்றாள் என்பதை உணர்ந்த நக்கண்ணையார், கடற்கரையில் சிப்பியின் மீது படர்ந்திருக்கும் புன்னைத் தாதுக்களைப் போலத் தலைவி உடலும் நிறம் மாறி அடையாளம் தெரியாமல் இருக்கிறது என்று பின்வரும் பாடலில் படம் பிடித்துக் காட்டுகிறார்.

'உள் ஊர் மாஅத்த முள் எயிற்று

வாவல்

ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில்

பொழுதின்

வெல் போர்ச் சோழர் அழிசிஅம்

பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவி

யாஅங்கு,

அது கழிந்தன்றே- தோழி! அவர்

நாட்டுப்

பனி அரும்பு உடைந்த பெருந்

தாட் புன்னை

துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து

உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்

பெருந் தண் கானலும், நினைந்த

அப் பகலே'

(நற்றிணை 87)

கனவு பயனற்றுப் போய் விடுமோ என்ற தலைவியின் அச்சத்தை ஓர் அஃறிணையின் மீது ஏற்றி நக்கண்ணையார் உரைப்பது, காதலின் மேன்மையும், அஃறிணையும் நம்மைப் போன்றதுதான் என்பதையும் உணர வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.