வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

இந்த வாரம் கலாரசிகன் - 22-11-2026

இந்த வாரம் கலாரசிகன்.

Updated On :

வியாழக்கிழமை ஈரோடு சென்றபோது சக்தி மசாலா நிறுவனத்துக்கு சென்றிருந்தேன். 'சக்தி மசாலா' நிறுவனர்கள் துரைசாமி தம்பதியினரைப் பல நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். பரஸ்பரம் வணக்கம் சொல்லி, நலம் விசாரித்ததுடன் சரி. துரைசாமி ஐயாவை ஓரிரு முறை வானூர்திப் பயணத்தின்போது சந்தித்து வணக்கம் பரிமாறிக் கொண்டதுடன் சரி.

சாதனையாளர்களில் எத்தனைபேர், தங்களது வெற்றியின் பலனை சமுதாய நலனுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டால், லட்சத்தில் ஒருவர் கூடத் தேறமாட்டார்கள்.

மகான் அரவிந்தர் பெரும் செல்வந்தர். தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் வீட்டு ஹாலில் ஒரு மேஜையின் மீது சாதாரணமாக வைத்திருப்பாராம். 'பணத்தை பத்திரமாக அலமாரியில் பூட்டி வைக்கக் கூடாதா?' என்று கேட்டால்,

'அப்படிச் செய்தால் என் வீடு தேடிவரும் நண்பர்களை நான் சந்தேகப்

படுவதாக அல்லவா அர்த்தம்?' என்று சொல்வாராம் அரவிந்தர். 'யாராவது இங்கிருந்து பணத்தை எடுத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டால், 'எடுத்துச் செல்லட்டுமே; தேவை இருப்பவர்கள் செலவழிக்கத்தானே பணம்...' என்று அரவிந்தரிடமிருந்து பதில் வருமாம்.

அரவிந்தரின் அந்த செயல்பாடு துரைசாமி தம்பதியினரின் மனதில் ஆழமாகப் பதிந்ததன் விளைவுதான், தங்களது நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தின் கணிசமான பகுதியை சமுதாயப் பணிகளுக்காக செலவழிக்கும் அவர்களது தாராள மனதுக்குக் காரணம்.

'எதிர்பார்ப்பின்றிப் பிறருக்கு உதவி செய்தல் என்கிற பண்பு மனிதகுலத்தின் அடிப்படை. ஒருவருக்கு மற்றவர் உதவி செய்து வரப் பழகியபோதுதான் நாகரிகம் பிறந்தது' என்று கூறும் அவர்கள், 'நாம் செய்கிற சிறு உதவிகூட, பிறருடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் சக்தி உடையது' என்பதை தங்களது செயலால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனை, மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளி, ஆட்டிசத்துக்கான சிறப்புப்

பள்ளியும், பயிற்சிப் பள்ளியும், தொழில் பயிற்சிப் பிரிவு, முதியோர் நலன் மற்றும் பக்கவாதப் பிசியோதெரப்பி பயிற்சி மையம் உள்ளிட்டவை மட்டுமல்ல;

வழிகாட்டித் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் நூல் நிலையங்கள் என்று அவர்கள் சக்திதேவி அறக்கட்டளை மூலம் செய்துவரும் சமூக நலப் பணிகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன.

காவல் துறைப் பணியில் சேர விழைந்து கிடைக்காததால், வெறும் ரூ. 5,000 முதலீட்டுடன் தொடங்கிய 'சக்தி மசாலா' இப்போது கடல் கடந்து பல நாடுகளில் வாழும் இந்தியர்களின் இல்லங்களில்கூட இன்றியமையாத சமையலறைப் பொருளாகி இருக்கிறது. திருமதி சாந்தி துரைசாமி திருமணமாகி வந்த சில மாதங்களில் தொழில் தொடங்குவதற்கு சற்றும் முகம் கோணாமல் தனது நகைகளை கணவரிடம் அளித்த தகவல் என்னை நெகிழ வைத்தது.

இளம் தலைமுறையினரின் வழிகாட்டிகளாக, எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் புரவலர்களாக, ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆபத்பாந்தவர்களாகத் திகழும் துரைசாமி தம்பதியினர், தங்களது வழிகாட்டியாகக் கருதுவது நடிகர் சிவகுமாரை.

ஏறத்தாழ அரை மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அந்த ஒவ்வொரு நொடியும், என் மனதில் துரைசாமி தம்பதியர் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது உயர் அதிகாரிகளை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். அத்துணை செயல்நேர்த்தி (பர்ஃபெக்ஷன்) இவர்களது அணுகு

முறையில். செயல் நேர்த்தியுடன், இறையுணர்வும், மனிதாபிமானமும், ஈகைக் குணமும் கலந்தால் எப்படி இருக்கும்? துரைசாமி-சாந்தி துரைசாமி தம்பதியினர்போல இருக்கும்.

--------------------------------

ஈரோடு சென்றிருந்தபோது நான் சந்தித்த இன்னொரு ஆளுமை யூ.ஆர்.சி. கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான சி. தேவராஜன். துரைசாமி தம்பதியர் போலவே இவரும் தீவிர 'தினமணி' வாசகர் என்பதால், முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள் நீண்ட நாள் உறவு நொடிப் பொழுதில் ஏற்பட்டு விட்டது. தேவராஜன் குறித்து நான் இன்னொரு முறை விரிவாக எழுதுகிறேன்.

எங்கள் சந்திப்பின் நினைவாக அவர் எனக்கு ஓர் அற்புதமான புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். 'தமிழ் மறை திருக்குறள்' என்கிற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் படைப்பில், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி இரண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பைபிள் காகிதத்தில் அச்சிடப்பட்ட அந்த நேர்த்தியான புத்தகத்தின் ஒரு பகுதிதான் தமிழண்ணல் உரையுடன் கூடிய திருக்குறள்.

முதல் தொகுப்பின் தலைமைத் தொகுப்பாசிரியர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் (நினைவில் வாழும்)

அழகப்பா ராம் மோகன். ஹூஸ்டன் நகர கணேசனும், பெரியண்ணன் குப்புசாமியும் தொகுப்பாசிரியர் குழுவில் இருப்பவர்கள். மணி. கு. மணிகண்டனைத் தலைமைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் என்னிடம் தரப்பட்ட மூன்றாவது பதிப்பின் நிர்வாக இயக்குநர் மீனாட்சி ராம்மோகன். இந்தப் பதிப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு பி.எஸ். சுந்தரம்; ஓவியங்கள் மணியம் செல்வன்.

திருக்குறள் பெருமை குறித்து வா.செ. குழந்தைசாமி, என். மகாராசன், ஆல்பர்ட் ஸ்வைட்சர், 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர், ஜஸ்டிஸ் மகாராஜன் உள்ளிட்டோரின் கட்டுரைகளுடன் தொடங்குகிறது அந்தப் புத்தகம். அந்தக் கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அதிகாரமும் படத்துடனும், ஆங்கில மொழியாக்கத்துடனும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

கம்பன் அடிப்பொடியின், தமிழ்ச் சான்றோர் வாழ்த்துடன் தொடங்குகிறது தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு. டாக்டர் சுப. திண்ணப்பன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், அழகப்பா ராம்மோகன் ஆகியோரின் விரிவான கட்டுரைகளும், தமிழர் வரலாறு, கலாசாரம், கலைகள் உள்ளிட்டவை குறித்த தரவுகளும் தொடர்கின்றன.

ஒரு புதையலைப் புத்தகமாக்கித் தொகுத்த உலகத் தமிழ்மொழி அறக்கட்டளைக்கும், அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்த யூ.ஆர்.சி. மேலாண்மை இயக்குநர் சி.தேவராஜனுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

--------------------------------

கவிஞர் யுகபாரதி எப்போதோ எழுதிய கவிதை இது. அனுப்பித் தந்திருக்கிறார் கவிஞர் பொருநை வளவன்.

விருப்பம்போல ஆணியடிக்க

விடிய விடிய விளக்கெரிக்க

விருந்தினரை உபசரிக்க முடியாத

வாடகை வீட்டில்

வசிக்கலாம்;

வாழ முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.