சித்தமெல்லாம் சிவமயமே!
கர்நாடக தேசத்தைச் சேர்ந்த அந்த அந்தணச் சிறுவனின் பெயர் சுப்பிரமணியன். பள்ளிப் படிப்பில் அவன் ஆர்வம் காட்டவில்லை; ஆன்மீக வாழ்வையே அவன் மனம் நாடியது. தன்னுடைய ஊரான மங்களபுரியிலிருந்து கிளம்பி கால்நடையாக


கர்நாடக தேசத்தைச் சேர்ந்த அந்த அந்தணச் சிறுவனின் பெயர் சுப்பிரமணியன். பள்ளிப் படிப்பில் அவன் ஆர்வம் காட்டவில்லை; ஆன்மீக வாழ்வையே அவன் மனம் நாடியது. தன்னுடைய ஊரான மங்களபுரியிலிருந்து கிளம்பி கால்நடையாக, மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் வந்தடைந்தான் சுப்பிரமணியன். தினசரி அங்கிருந்த சந்திரபாகா நதியில் நீராடி, விட்டல நாதனை மனமுருகி தரிசித்துக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தான் அந்தப் பாலகன். நாட்கள் நகர்ந்தன.
ஒரு நாள் அவன் அயர்ந்து உறங்கும்போது முன்பின் தெரியாத ஒரு அந்தணர் அவனை எழுப்பினார்; குருநாதர் அழைப்பதாகத் தெரிவித்து மறைந்தார். திகைப்படைந்த சிறுவன் ஒன்றும் புரியாமல் உடனே ஓடிச் சென்று சந்திரபாகாவில் நீராடிவிட்டு விட்டலனின் சந்நிதியை அடைந்தான். ஏதோ ஒரு உந்துதலில் அவ்வூரில் அச்சமயம் விஜயம் செய்திருந்த ஜ்யோதிர் மட (ஆதிசங்கர பகவத் பாதாள் தம் போதனைகளை மக்களிடம் பரப்ப நிறுவிய மடங்களில் முதலாவது ஜ்யோதிர் மடம் என்பர்) பீடாதிபதிகளான ஸ்ரீசிவரத்னகிரி சுவாமிகளை தரிசித்தான். ஒரு மகாநதி கடலுடன் முழுமையாகக் கலந்ததுபோல் குருவிற்காக காத்துக் கொண்டிருந்த சீடனையும், சீடனுக்காகக் காத்திருந்த குருவையும் இணைத்து வைத்தான் அந்த விட்டலன்.
சுப்பிரமணியனுக்கு "ஞான ஆனந்த கிரி' என்ற "தீக்கை' நாமத்தைச் சூட்டினார் சிவரத்னகிரி சுவாமிகள். குருவிற்கு சேவை செய்து, அவருடன் புண்ணியத் தலங்களுக்கு விஜய யாத்திரைகள் மேற்கொண்டார் ஞானானந்தகிரி. குருவின் மறைவுக்குப் பிறகு இமய மலைக்குச் சென்று தவம் செய்வதிலும், அங்குள்ள மகான்கள், சித்த புருஷர்களை தரிசிப்பதிலும் காலத்தைக் கழித்து வந்தார். எங்கேயோ பிறந்து எங்கெங்கோ சஞ்சரித்திருந்த ஞானானந்தர், தன் வாழ்வின் பிற்காலத்தில் (100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர்) தன் அருட்பணியைத் தொடர தேர்ந்தெடுத்த இடம் தென்னாடு. அதிலும் அவரை முதன்முதலில் ஈர்த்த தலம், சித்தலிங்க மடம் என்னும் ஊராகும்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூருக்குக் கிழக்கே பத்து கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய் நல்லூர் வழியாகச் சென்றால் சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சித்தலிங்க மடம்.
ஞானாந்தகிரி சுவாமிகளை சித்தலிங்க மடம் ஈர்த்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஞானிகளும், சித்தர்களும் முற்காலத்திலிருந்தே இங்கு தவம் மேற்கொள்வது வழக்கம். இரண்டாவது, இங்குள்ள பழமை வாய்ந்த வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம். 1942ம் ஆண்டு, திருக்கோயிலூரில் உள்ள தபோவனம் செல்லும் வரை ஞானானந்தகிரி சுவாமிகள், சித்தலிங்க மட ஆலயத்தையொட்டி ஆஸ்ரமம் அமைத்துத் தங்கியிருந்தார்; தன்னை நாடி வந்த பக்தர்களின் துயரை நீக்கி ஆறுதலளித்து வந்தார்.
இனி மகான் ஞானானந்த கிரியை ஈர்த்த அந்தச் சிவாலயத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
தல வரலாற்றுப்படி, அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த இப்பகுதியில் வேடன் ஒருவன் கோடரியால் விறகு வெட்டும் போது மரத்தின் இடையில் இருந்த சுயம்புலிங்கத்தைப் பார்க்காமல் வெட்டிவிட்டான். அப்போது மரத்திற்குள்ளிருந்து பீறிட்ட ரத்தம், அந்த வேடனின் முகத்தில் தெறித்தது; அவன் பார்வை பறிபோனது.
இச்செய்தியினைக் கேள்விப்பட்ட அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னன் திப்பரசன் என்பவன், உடனே அங்கு வந்து பார்த்தான். பிளவுப்பட்ட மரத்துக்குள் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டு சிலிர்த்துப் போனான். நடந்ததை எண்ணி வருத்தப்பட்ட வேடன் மீண்டும் கண்பார்வை பெற்றான். இறையருளை எண்ணி வியந்த மன்னன், அந்த சுயம்பு லிங்கத்தைப் பிரதானமாக வைத்து ஓர் ஆலயம் அமைத்தான்.
புராண வரலாறுப்படி சிவபக்தரான ஒரு முனிவர், இறைவனுக்குப் பூஜை செய்வதற்கு உகந்த மலர்களைப் பறித்து அர்ப்பணிப்பதைத் திருத்தொண்டாகச் செய்து வந்தார். தேன் வேண்டி வண்டுகள் மொய்ப்பதற்குமுன் இருட்டினிலேயே மரத்தில் ஏறிப் பறிப்பதற்கு ஏதுவாக தனக்கு புலிக்கால்களை நல்குமாறு இறைவனை வேண்டினார். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ஈசனை வணங்கிப் புலிக்கால்களைப் பெற்றார். இவரே, "வியாக்ர பாதர்' எனப்படுகிறார். அந்த மாமுனிவர் தவம் புரிந்தது சித்தலிங்க மடத்தில்தான். இந்தக் காரணம் பொருட்டு இவ்வூர் ஈசனுக்கு, "திருப்புலிப் பகவானார்' என்றும், "வியாக்ர பாதீஸ்வரர்' என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன.
மேலும் சித்தமெல்லாம் சிவமயம் என்று வாழ்ந்திருந்த மகிமை வாய்ந்த ஒரு சிவயோகியே இங்கு சிவலிங்கமாக மாறியதாக ஒரு செவி வழிச் செய்தியும் உண்டு. இந்த ஊரில் பார்த்தன், பாசுபத அஸ்திரம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மூலவரான சிவலிங்கத்தின் நெற்றியில் வேடனது கோடரியால் ஏற்பட்ட வடு இருப்பதைக் காணலாம். வலது திருக்கரத்தில் தாமரையும், இடது திருக்கரத்தில் தனுசும் திகழ அழகுறக் காட்சியளிக்கிறாள் அன்னை நீல விசாலாட்சி.
இவ்வாலயத்தில் தனிச்சந்நிதி கொண்டு அருள்புரியும் விநாயகப்பெருமானை "வாதாடிப் பிள்ளையார்' என அழைப்பார்கள். இதற்கான காரணத்தையும் காண்போம். ஒருமுறை சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர், திருவெண்ணெய் நல்லூரிலிருந்து திருக்கோயிலூர் ஈசனைத் தரிசிப்பதற்காக இத்தலம் வழி வரும்போது, இங்கு கோயில் கொண்டுள்ள ஈசனைப் பாடாமல் கடந்து சென்றார். இதைக் கண்ட விநாயகப் பெருமான் ஓடிச் சென்று ஊர் எல்லையில் சுந்தரரைத் தடுத்து, ""எந்தை சிவனை சிந்தை செய்யாமல் போவதென்ன?'' என்று சுந்தரரிடம் வாதிட்டாராம். தன் தவறை உணர்ந்த சுந்தரர், சித்தலிங்க மடம் சிவாலயத்திற்கு வந்து ஈசனைப் போற்றிப் பாடினார் என்றொரு கர்ண பரம்பரைக் கதை வழங்குகிறது. "சித்தீஸ்வரம்' என்று இத்தலத்தின் பெயர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. சுந்தரமூர்த்திநாயனாருடன் வாதாடி பாடல் பெற்றதால் இத்தல விநாயகர் "வாதாடும் விநாயகர்' என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் சனிபகவான் நான்கு திருக்கரங்களுடன், இடது கரங்களில் தண்டமும், பாசமும், வலது கரங்களில் ஜபமாலையும், சூலமும் கொண்டு அபூர்வ கோலத்துடன் காட்சியளிக்கிறார். ராகு, கேது பகவான்கள் தனித்தனியாகக் காட்சியளிப்பது அற்புதத் தரிசனமாகும்.
இவ்வாறு புராணப் பெருமைகளுடன் வரலாற்றுச் சான்றுகளுடன் திகழும் இவ்வாலயத்தில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. அவை முதலாம் பராந்தக சோழனின் காலம் தொடங்கி பாண்டியர், பல்லவர், சம்புவராயர், விஜயநகர வேந்தர் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் வரையப் பெற்றவையாகும். இவ்வூரின் பழைய பெயர் "சிற்றின்கூர்' என்று சாசனங்களில் குறிப்பிடப்பெறுகிறது.
அரசர்களின் பேராதரவுடன் திகழ்ந்த இவ்வாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்து குடமுழுக்கு கண்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது (கடைசியாக 1956ம் ஆண்டில் நடந்தேறியது). ஆலயம் நலிவுற்ற நிலையிலும் ஆண்டவனின் சாந்நித்யம் சிறிதளவும் குறைவில்லாமல், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை அள்ளி வீசிக் கொண்டிருந்தான் கருவறையில் உள்ள ஈசன். முக்கியமாக புத்திர பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி வேண்டுபவர்கள் இவ்வாலயத்திற்கு வந்து பயன்பெறுகிறார்கள்.
அருள்மிகு நீலவிசாலாட்சி உடனுறை அருள்மிகு வியாக்ரபாதீஸ்வரர் ஆலய இறைப்பணி மன்றம், உபயதாரர்கள், இறையன்பர்கள் உதவியுடனும், கிராம மக்கள் ஆதரவுடனும், ஸ்ரீ ஞானானந்த தபோவனம் பக்தர்கள் உதவியுடனும், தமிழக அரசு அறநிலையத்துறை ஒத்துழைப்புடனும் பல்வேறு திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றன. முக்கியமாக புதியதாக மூன்று நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. "தூல லிங்கம்' என்று ராஜகோபுரத்தைப் போற்றுவார்கள். கண்ணுக்கு கோபுரம் தென்படும்போது அதையே தெய்வமாக எண்ணி வணங்குவது முறை. இத்தகைய புனிதமான ராஜகோபுரத்தை அமைக்கும் பணிக்காக சித்தலிங்கமடம் அருள்மிகு வியாக்ரபாதீஸ்வர ஆலய ராஜகோபுர திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டது; மூன்று நிலை ராஜகோபுரத்தை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் நிறைவேற்றியுள்ளது. இதில் அமைந்துள்ள சத்குரு ஞானானந்த சுவாமிகளின் திருவுருவச் சிலை அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ""உனக்கு அருள்புரிய கீழே கர்பக்கிரகத்தில் உள்ள சிவன் காத்துக் கொண்டிருக்கிறான், வா மகனே'' என்று சொல்லாமல் சொல்லுவதுபோல் தன் இரு கைகளையும் தொடையின் மீது சுவாமிகள் வைத்துக் கொண்டிருக்கும் அற்புதமான காட்சியைக் கோபுரத்தில் தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நூதன ராஜகோபுர மகாகும்பாபிஷேகம், கடந்த ஜூன் 29ம் தேதி திங்கள் கிழமை இனிதே நடைபெற்றது.
குடமுழுக்கு நிறைவேறிவிட்டாலும் இன்னும் சில பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இவற்றுக்கு மேலும் சில லட்சங்கள் தேவைப்படுகின்றன. சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகளின் பக்தர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம். நிறைவேற வேண்டிய பணிகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர், "சித்தலிங்கமடம் அருள்மிகு வியாக்ரபாதீஸ்வர ஆலய ராஜகோபுர திருப்பணி கமிட்டி, "கமலாலயா' உ-7, 3 வது மாடி,
ஜெமினி பார்ஸன் அபார்ட்மென்ட்ஸ்,
கதீட்ரல் கார்டன் சாலை,
சென்னை- 600006
தொலைபேசி : 044-28257991
(செல் : 9444109401) என்ற
முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...