பல்லாண்டு பல்லாண்டு...!

கடவுளை கண்ணால் காணமுடியுமா? அவரை காட்ட முடிந்தவர் யார்? -அனேகமாக இதுவே உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். இந்தக் கேள்விக்கு பொட்டில் அடித்த மாதிரி பதில் சொன்னவர்கள் பலர் உண்டு. "காற்றைப் பார்
பல்லாண்டு பல்லாண்டு...!

கடவுளை கண்ணால் காணமுடியுமா? அவரை காட்ட முடிந்தவர் யார்? -அனேகமாக இதுவே உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். இந்தக் கேள்விக்கு பொட்டில் அடித்த மாதிரி பதில் சொன்னவர்கள் பலர் உண்டு. "காற்றைப் பார்க்க முடிவதில்லை. அதனால் அது இல்லையென்றாகுமா?' என்று திருப்பிக் கேட்பவர்களும் பலர் உண்டு.

ஒரு படி மேலே போய், "ஒரு நாற்காலி இருக்கிறது என்றால் அதை செய்த தச்சர் என்று ஒருவர் இருப்பதுபோலே இந்தப் பூமியையும் இதனுள் கோடானுகோடி உயிர்களையும் படைத்த ஒருவனும் இருந்துதானே தீர வேண்டும்?' என்று நியாய வாதம் செய்பவர்களும் உண்டு.

எல்லாம் சரி... அப்படி இருக்கும் ஒருவர், அல்லது ஒருத்தி, அல்லது ஏதோ ஒன்று ஏன் நேரில் தோன்ற மறுக்கிறது? ஏன் அது பளிச்சென்று கண்களுக்கு புலப்படமாட்டேன் என்கிறது? -என்கிற ஒரு கேள்வி மேற்படி பதில்களாலே தோன்றுகின்றன.

இப்படிப்பட்ட கேள்விகள் இன்று மட்டுமல்ல, நேற்றும் கேட்கப்பட்டதுதான் ஆச்சரியம். நேற்று என்றால் ஏதோ இன்று நேற்றல்ல... பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விகளுக்கு சமயவாதிகள் தங்கள் சக்திக்கும், கற்பனைக்கும், நம்பிக்கைக்கும் ஏற்றபடியெல்லாம் பதிலளித்தார்களேயன்றி இந்த உலகைப் படைத்து அதனுள் நீங்களும் நானும் இன்று வாழக்காரணமான அந்த இறைவனை கண்களில் கண்டிட வழி செய்தாரில்லை.

யுகங்களில் கலியுகத்துக்கென்று சில குணங்களை வேதங்களும், புராணங்களும் வரையறுத்துக் கூறியுள்ளன. அதன்படி கலியுகத்தில் மெல்ல தர்மமானது ஆட்டம் காணத் தொடங்கும்; அதர்மம் தலை எடுக்க ஆரம்பிக்கும்! பெற்ற தாயையே பிள்ளை புறக்கணிப்பான்! கணவனை மனைவி பணிய மறுத்து மாற்றானைத் தேடி அடைய முயல்வாள்! மனிதனை மனிதனே ஒரு கட்டத்தில் விலங்குபோல அடித்து உண்ணும் நிலை வரும் என்றெல்லாம் அவை கூறுகின்றன.

இதன் நடுவே உத்தமமானவர்கள் இறைவனை சரண் புகுந்தாலன்றி அவர்கள் தப்பிக்க வழியே இல்லை. இறைவனை சரண் புகவேண்டும் என்றால் அவனை ஒரு முறையாவது இந்த உலகத்தவர் பார்த்தாக வேண்டுமே? காட்சிக்கு அப்படி ஒரு விசேஷ சக்தி இருக்கிறதே..!

இறைவனும் பூ உலகத்தவர்களை அதிகம் சோதிக்க விரும்பவில்லை. அவனும் வைகுண்டபதியாக தனது பரிவாரங்களோடு பூ உலகத்தவர்க்கு சேவை சாதிக்க விருப்பம் கொண்டான்.

அப்படி அவன் விருப்பம் கொண்டபோது அவன் தரிசனமளிக்கத் தேர்வு செய்த இடம் எது தெரியுமா?

கடம்ப வனம் என்று புராணங்கள் போற்றும் மதுரை நகரம்தான்!

(வைகை) வேகவதி ஆறு பாய்ந்திடும் இந்த மதுரைக்கு சைவச் சார்போடு பார்த்திடும்போதும் ஏராளமான சிறப்புகள்!

தனது திருச்சடையில் இருக்கும் அமுதத்தை எடுத்து அந்த மதுரத் துளிகளால் இந்த நகரை புனிதப்படுத்தினான் சொக்கேசன். அதன் காரணமாகவே கடம்ப வனம், மதுரை நகரமாயிற்று.

ஈசனால் மதுரை வந்தது- அந்த மதுரைக்குள் விஷ்ணுவால் தரிசனம் விளைந்தது.

அந்த மகாவிஷ்ணு அப்படித் தரிசனம் தந்த- அதாவது ஊருக்கே அருட்காட்சி தந்த -அதுவும் கருட வாகனத்தின் மேல் மகாலட்சுமியை மடிமேல் அமர்த்திக் கொண்டு திருக்காட்சி தந்த ஒரு அருளகம்தான் இன்றும் மதுரை நகரின் மையத்தில் கோயில் கொண்டிருக்கும் கூடல் அழகர் ஆலயம்!

ஸ்ரீவல்லபதேவ பாண்டியனின் காலத்தில்தான் பரந்தாமனின் அந்த அருட்காட்சியை இந்த உலகு கண்டது!

இது எப்படி நிகழ்ந்தது? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம்...

வல்லபதேவ பாண்டியனுக்குள் இக்கட்டுரையின் முகப்பில் எழுப்பப்பட்ட அதே கேள்விகள்தான் ஆரம்ப வித்து!

"இறைவன் இருக்கிறானா? இருந்தால் அவன் எங்கிருக்கிறான்? எனக்கு மறை பொருளிலோ அல்லது சாதுர்யமான விளக்கங்கள் மூலமாகவோ மட்டும் பதில் தேவை இல்லை. எனக்கு நேரடித் திருக்காட்சி வேண்டும். அவனை எனக்கு காட்ட வல்லவர் எவர்?' என்று சபை கூட்டி, சபையோர் முன் கேள்வி எழுப்பினான் பாண்டியன்.

அந்தச் சபையில் "செல்வநம்பி' என்கிற பரமபக்தரும் இருந்தார். அரசனுக்கு அவனுக்கேற்ற விதத்தில் விடை கூறிடும் வழி தெரியாமல் நகரின் நடுவில் கோயில் கொண்டிருக்கும் கூடலழகர் ஆலயத்திற்குச் சென்றார்.

அங்கே திருமால் எழுந்தருளியுள்ள அஷ்டாங்க விமானத்தை வலம் வந்தார். அதனுள் நின்றும், கிடந்தும், அமர்ந்தும் என்று மூன்று நிலைகளில் சேவை சாதிக்கும் கூடலழகரை தரிசனம் செய்து, ""இறைவா அரசனுக்கு நான் என்ன பதில் கூறப் போகிறேன்? நீ இல்லாத இடமில்லை. தூணிலும் துரும்பிலும் இருப்பதை பிரகலாதன் எப்போதோ நிரூபித்துவிட்டான். ஆனால் இப்போது காட்சியாக உன்னை நிரூபணம் செய்ய வழி தெரியாது திகைக்கிறேன்.

தேவர்களும், முனிவர்களும் முயன்றால் உன்னைக் காணமுடிகிறது. அவர்கள் பொருட்டு உன் வைகுண்டக் கதவுகளும் திறக்கின்றன. இறைவா...! அமுதம் தின்றவர்களுக்கும், தவத்தில் சிறந்தவர்களுக்கும் மட்டும்தான் உன் தரிசனமா? என் போன்ற சாதாரண பக்தர்களுக்கு உன் அர்ச்சாவதார ரூபம் (விக்ரக வடிவு) மட்டும்தான் தரிசனக் கோலமா? உன் தரிசன நிதர்சனம் எப்போது?'' என்று அவர் மனது கதறியழுதது. அப்போது அந்த பரந்தாமன் மனதும் இளகியது. அதன் எதிரொலியாக விண்ணில் ஒரு அசரீரி!

"செல்வ நம்பி...! திரு வில்லியில் வாழ்ந்து வரும் விஷ்ணுசித்தன் பொருட்டு உன் விருப்பத்தை பூர்த்தி செய்வோம். விஷ்ணுசித்தன், கலியுகத்தால் மாயையால் சூழப் பெற்றவர்களுக்கு நடுவே சத்யமான பரம் பொருளாகிய எம்மை நிலை நிறுத்திடுவான். அவ்வமயம் என் தரிசனக் காட்சியும் உன் விருப்பம்போல் நிகழும்!'' என்று ஒலித்து அடங்கியது.

செல்வநம்பி அடைந்த மகிழ்ச்சிக்கு ஒரு அளவில்லை. அன்றிரவே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை நிலமிசைக் கண்டெடுத்து தன் மகளாய்க் கருதி வளர்த்து வந்த விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வார் கனவில் இறைவன் தோன்றினார்; மதுரைக்கு செல்லப் பணித்தார்!

அவரும் மதுரை வந்து ஸ்ரீவல்லப பாண்டியன் திருச்சபையில் கூடி இருக்கும் அமண சமண பௌத்தர்கள் முதல் மாயாவதிகள், மீமாம்சகர்கள், சாருவாகர்கள் முதலானோர் முன்னால் நின்றார். "ஸ்ரீமன் நாராயணனே அறுதியும் இறுதியுமான பரம்பொருள்' என்று ஒரு ஓலையில் எழுதி பொற்கிழியில் வைத்தார்.

அந்தப் பொற்கிழி அந்த ஏட்டை மட்டும் ஏற்றுக் கொண்டது; மற்றையோர் ஏடுகளை வெளித்தள்ளியது.

தனது கூற்றை ஓலை வழி நிரூபித்த விஷ்ணு சித்தர், ஆலயம் ஏகி அஷ்டாங்க விமானத்தை நோக்கினார். ""எம்பெருமானே! உன்கோலத்தைக் காட்டி அருள்வாய்'' என்று வேண்டினார். உடனே அஷ்டாங்க விமானம் மேல் அனைவரும் காணும் விதமாய் கூடலழகனான சுந்தரராஜன் விண்ணிலே கருட வாகனம் மேல் ஸ்ரீதேவி-பூதேவி சகிதம் அருட்காட்சி தந்தார்.

உலகம் கேட்ட பெரும் கேள்விக்கு விடையாக அந்தக் காட்சி அமைந்தது. அதைக் கண்ட பரவசத்தில் விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வார் பாடியதுதான் வைணவப் பாசுரங்களில் தலையாயது எனப் போற்றப்படும், "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்...' என்னும் திருப்பல்லாண்டுப் பாசுரம் ஆகும்!

அதனாலேயே கூடலழகர் ஆலயத்து அஷ்டாங்க விமானத்துக்கு ஒரு தனிச் சிறப்பு. அதைப் பார்த்தபடியே தியானம் புரிவதும், அதை வலம் வந்து சேவிப்பதும், அதை மனக்கண்ணில் எண்ணித் துதிப்பதும் அந்த மாலவன் தாளடிக்கே அழைத்துச் சென்றுவிடும் உபாயங்களாகும்.

அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி, விஷ்ணு சித்தன்போல நாமும் பக்தியோடு திகழ்ந்தால் இறைவன் திருக்காட்சியும் நமக்கு உறுதி!

மதுரை மையத்தில் அருள் பெட்டகமாய் விளங்கி வரும் ஆதி பரம்பொருளின் அழகிய ஆலயமான கூடலழகர் கோயிலில் இந்த வைகாசி மாதம்தான் திருவிழாக்காலம்!

நித்ய உற்சவம் காணும் இந்த ஆலயம், இந்த விழாக்காலத்தில் மதுரையையே பரவசப்படுத்திடும். 29.05.09ல் தொடங்கி 12.06.09ம் தேதி வரை நிகழும் இந்த பிரம்மோத்ஸவத்தில் 7.06.09 அன்று நடைபெற உள்ள தேரோட்டமானது மிகுந்த சிறப்பு கொண்டது.

இந்தத் தேர்வடம் பற்றி இழுப்பவர் வாழ்வில் தீராத கருமம் தீரும் என்பது சூட்சுமமான ஒன்றாகும். அதேபோல 9.06.09 அன்று ராமராயர் மண்டபத்தில் நிகழும் தசாவதாரக் காட்சிகளை காண்பவர்களுக்கு முக்தி நிச்சயம்.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற அரிய அருட்செல்வமான கூடலழகரை "கோவிந்தா கோவிந்தா' என்று கூவிக் கூவிச் சேவிப்போம்! வாரீர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com