பாறை மீது விழுந்த விதைகள்!
"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை!' என்கிறார் திருவள்ளுவர். ஆம்! இறைவன் நமக்கருளிய ஒப்பற்ற செல்வங்களுள் தலையாயது செவியால் கேட்டறியும் செல்வம். ஒருவரின் அ


"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை!' என்கிறார் திருவள்ளுவர்.
ஆம்! இறைவன் நமக்கருளிய ஒப்பற்ற செல்வங்களுள் தலையாயது செவியால் கேட்டறியும் செல்வம். ஒருவரின் அறிவு விரிவடைவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, கேட்கும் நல்லோரின் சொற்களை மனதில் உள்வாங்கி அவற்றைப் பின்பற்றுவதாகும். பெற்றோரும், ஆசிரியரும் நம்மை நெறிப்படுத்த கற்றுக் கொடுக்கும் போதனைகள் நம்மில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றி பைபிளில் கூறப்பட்டுள்ள பின்வரும் ஒரு உவமையின் மூலம் காண்போம். (மத்தேயு 13:3-23)
விதைப்பவர் ஒருவர் வயலில் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் பாறை மீது விழுந்தன. அங்கு முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன. முட்செடிகள் நெருக்கி விட்டதால் அவை நன்கு வளரவில்லை. இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
இறைவன் நம்மிடம் நேரிடையாகப் பேசுவதில்லை. பெற்றோர், ஆசிரியர், மத குருமார், வேத நூல்கள் இவற்றின் வாயிலாக இறைவார்த்தை நம் உள்ளமாகிய நிலத்தில் விதைக்கப்படுகிறது. வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளைப் பறவைகள் விழுங்கிவிடுகின்றன. அதுபோல நம்மில் சிலர், பெரியோர்களின் சொற்களைக் கேட்டாலும் புரிந்து கொள்ள இயலாத - அல்லது விரும்பாத காரணத்தால் நாளடைவில் அவற்றை மறந்துவிடுகின்றனர். இதனால் அவர்களுக்குத்தான் நஷ்டம்!
மற்றும் சிலர் மகிழ்ச்சியுடன் ஆன்றோர் சொற்களையும், இறைவார்த்தையையும் கேட்கும்போது அந்நேரத்திற்கு ஏற்றுக் கொள்வர். ஆனால் பாறை மீது விழுந்த விதைகள் விரைவில் முளைத்தாலும் வேர் ஊன்ற இயலாததால் கருகிப் போவதைப் போல, வேதனையோ அல்லது இன்னலோ உற்ற வேளையில் தடுமாற்றம் அடைந்து, தொடர்ந்து நல்லுபதேசங்களைப் பின்பற்றாது விட்டு விடுவர்.
வேறு சிலர் நல்லோர் சொற்களைக் கேட்டாலும் உலகக் கவலையும், செல்வ மாயையும் நெருக்கிவிடுவதால் பல்வேறு நாட்டங்களால் கவரப்பட்டு வழி தவறிச் சென்றுவிடுகின்றனர். இவர்கள் முட்செடிகளால் அமுக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பாவார்கள்!
இறை வார்த்தையைக் கேட்டு, புரிந்து கொண்டு சீரிய வாழ்க்கை வாழ்வோர் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பாவர்.
நிலத்தின் நல்ல தன்மையின் மாறுபாட்டுக்கு ஏற்ப பலனும் வேறுபடுவது போல தங்கள் நற்செயல்களுக்கும், வாழும் முறைக்கும் ஏற்ப சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர். எனவே இறைவார்த்தையைக் கேட்போம்; வாழ்வாங்கு வாழ்வோம்; மோட்சப் பேரின்பம் அடைவோம்.
"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்' என்பதும் வள்ளுவரின் வாய்மொழியே!
"ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல வாழ்க்கையில் உதவும்' என்பது இதன் கருத்து! உலகெங்கும் ஆன்றோர்களின் குரல் ஒரே த்வனியில்தானே இருக்கின்றன!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...