தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பாசுரம் கேட்ட பிராட்டியார்

திருமகளின் தலைவனும், கருணைக் கடலானவருமான ஸ்ரீமந் நாராயணன், உலகினோர் உய்யும் பொருட்டு ஆழ்வார்களையும், ஆசார்ய புருஷர்களையும் திரு அவதாரம் செய்விக்கச் செய்தான். இத்தகைய பெரியோர்கள்தான் வைணவ சமயத்தின் ஆணி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:06 am

எஸ். வெட்கட்ராமன்

திருமகளின் தலைவனும், கருணைக் கடலானவருமான ஸ்ரீமந் நாராயணன், உலகினோர் உய்யும் பொருட்டு ஆழ்வார்களையும், ஆசார்ய புருஷர்களையும் திரு அவதாரம் செய்விக்கச் செய்தான். இத்தகைய பெரியோர்கள்தான் வைணவ சமயத்தின் ஆணிவேர்கள்.

பெருமாளின் கல்யாண குணங்களில் ஊறி ஆழ்ந்தவர்கள் என்பதால் இவர்கள் "ஆழ்வார்கள்' என அழைக்கப்பட்டனர்.

வைணவ நெறி தழைத்தோங்க அவர்கள் திருவாயிலிருந்து மலர்ந்ததே வேதத்தின் சாரமான "நாலாயிர திவ்ய பிரபந்தம்.' நெஞ்சைக் குழையவைக்கும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களில் சொல்நயம், பொருள் நயம் மிகுந்திருப்பதால் இசையோடு அனுபவிக்கும்போது பக்திப் பரவசம் உள்ளத்தில் தோன்றி மனக்கவலைகளை நீக்கும். பாற்கடலில் உதித்த பிராட்டியார் திருமகளே பிரபந்தப் பாடல்களில் மனம் பறிகொடுத்து, அவற்றைக் கேட்க விரும்பி, தன் பதியான பரந்தாமனை அனுப்பி வைத்து, ஆழ்வாரிடம் பாசுரம் பெற்று வரச் செய்தாள். 

அந்தச் சுவையான சம்பவத்தை இங்கு பார்ப்போம்.

திருமங்கையாழ்வார் திருத்தலப் பயணமாக திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் சந்நிதியை அடைந்தார். அப்போது பெருமாள், ஆழ்வாரைக் கவனிக்கத் தவறிவிட்டாராம். ஆழ்வார் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, பாசுரம் பாடாமலேயே போய்விட்டாராம். (ஆழ்வார் இப்பகுதிக்கு வந்தபோது திருநின்றவூர் வராமல் சென்றுவிட்டதாகவும் சிலர் சொல்கின்றனர்). பெருமாளிடம் தாயார், ஆழ்வார் பாடாமல் போன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உடனே ஆழ்வாரைத் தேடிக் கொண்டு பெருமாள் மாமல்லபுரத்தை அடைந்தார். பெருமாளைக் கண்டவுடன் ஆழ்வார் மகிழ்ந்து, முதல் பாசுரத்தைப் பாடினார்.

""பூண்டவத்தம் பிறர் கடைந்து...'' என்று தொடங்கும் அந்தப் பெரிய திருமொழியில் ஆழ்வார் நின்றவூர்ப் பெருமாளை தான் கண்டு சேவித்ததை, ""கண்டது நான் கடல்மல்லைத் தல சயனத்தே'' என்று உறுதிப்படுத்துகின்றார்.

அந்தப் பாடலைப் பெற்றுக் கொண்டு தாயாரிடம் பெருமாள் கொடுத்தபோது, ""ஒரே ஒரு பாசுரம்தானா?'' என்று பொய்க் கோபம் கொண்டு ஆழ்வாரின் பாடலை மேலும் கேட்க விரும்பினாராம் பிராட்டியார். உடனே மீண்டும் புறப்பட்டுச் சென்ற எம்பெருமான், ஆழ்வாரைத் திருகண்ணமங்கை என்ற தலத்தில் கண்டு ஒரு பாசுரத்தைப் பெற்று தாயாரிடம் கொடுத்து மகிழ்வித்தாராம். ""ஏற்றினை யிமயத்து'' என்று தொடங்கும் அந்தப் பாசுரத்திலும் ஆழ்வார் நின்றவூர் பெருமாளை தான் கண்டு சேவித்ததைக் குறிப்பிட்டு, ""கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே'' என முடிக்கின்றார். இவ்வாறாக நின்றவூர் எம்பெருமான் திருமங்கையாழ்வாரை தொடர்ந்து சென்று, கடல்மல்லை மற்றும் திருக்கண்ணமங்கையில் தனக்குப் பாடல் பெற்றார்.

108 வைணவ திவ்ய தேசங்களில் திருநின்றவூரும் இடம் பெற்றுள்ளது. (வடவேங்கடம் பெரிய ஜீயர் பரம்பரை அறங்காவலராக உள்ளனர்).

சென்னைக்கு அருகில் ஆவடியை அடுத்துள்ள இந்தத் திருத்தலத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் மார்ச் 31- தொடங்கியது. ஏப்ரல் 2ல் (இன்று)தங்க கருட சேவையும், ஏப்ரல் 6ம் தேதி திருத்தேர் வைபவமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 9, புஷ்ப யாக உற்சவம்.

அன்பர்கள் அவசியம் இவ்வைபவங்களில் கலந்து கொண்டு, அருள்மிகு என்னைப் பெற்ற தாயார் சமேத பக்தவத்சலப் பெருமாளின் திருவருளுக்குப் பாத்திரர்களாக வேண்டும். ஆலயம் சம்பந்தமான விவரங்களுக்கும், உற்சவத்தில் பங்கேற்கவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: எஸ். லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் -044-26390434.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.