இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மத்தியார்ஜூனத்தில் ஓர் மாணிக்கப் பெருந்துறை

இடைமருது என்னும் மத்தியார்ஜுனம்: திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில். தமிழகத்திலுள்ள பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 pm IST

இடைமருது என்னும் மத்தியார்ஜுனம்:

திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில். தமிழகத்திலுள்ள பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று.

தமிழ்நாட்டில் மருதூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.  இத்திருத்தலத்தின் தலவிருட்சம் மருதமரம் என்பதால் மருதூர் என்று இதற்கும் பெயர் வந்தது. இத்தலத்து இறைவன் பெயர் மருதவாணர்.

மருதமரத்துக்கு வடமொழியில் "அர்ஜுன விருட்சம்' என்று பெயர். இடைமருதூர் என்பது மத்தியார்ஜுனம் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது. காரணம், வடக்கே உள்ள "ஸ்ரீசைலம்' ஒரு மருதூர். அதற்கு மல்லிகார்ஜுனம் என்று பெயர். அது தலைமருதூர். தெற்கே திருநெல்வேலியில் "திருப்புடைமருதூர்' என்று ஒரு தலம் உள்ளது. இது வடமொழியில் "புடார்ஜுனம்' என்று அழைக்கப்படுகிறது. இது கடைமருதூர். மல்லிகார்ஜுனத்துக்கும் புடார்ஜுனத்துக்கும் இடையில் இருப்பதால், இத்தலம் மத்தியார்ஜுனம் (இடைமருதூர்) என்று பெயர்பெற்றது.

இத்திருத்தலச் சிறப்பு:

இத்திருத்தலத்தில் அருள் பாலிக்கும் இறைவன், அருள்மிகு ஸ்ரீமகாலிங்கப்பெருமான். அம்மை-பெருநலமாமுலையம்மை. திருவாவடுதுறையை நந்தித் தலமாகவும், திருவாய்ப்பாடியை சண்டீசர் தலமாகவும், சீர்காழியை பைரவர் தலமாகவும், சிதம்பரத்தை நடராசர் தலமாகவும், திருவாரூரை சோமாஸ்கந்தர் தலமாகவும், சூரியனார் கோயிலை நவக்கிரத் தலமாகவும், ஆலங்கு டியை தட்சிணாமூர்த்தி தலமாகவும் கொண்டு ஸ்ரீமகாலிங்கப் பெருமான் நடுநாயகமாகத் திகழ்கிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புப் பெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் அம்பிகை தவம் செய்தாள் என்ற ஒரு ஐதீகம் உள்ளது. அந்தக் கோலத்தில் "மூகாம்பிகை' என்ற திருப்பெயரோடு அம்பிகை இங்கு தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கி றாள். அம்பிகை, விநாயகர், முருகன், ஆதிசங்கரர், பட்டினத்தார், பத்திரகிரியார், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமாளிகைத் தேவர், சேந்தனார்  முதலிய பலராலும் பாடப்பட்ட இத்திருத்தலம், அவர்களது பாதம்பட்ட சிறப்புக்குரியது.

இத்திருத்தலப் பெருமானை மாணிக்கவாசகர், "அந்த இடைமருதினில் ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லிக்கொள்யாமோ' என்று பாடியுள்ளார். மேலும், "இடைமரு ததனில் ஈண்ட இருந்து படிமப்பாதம் வைத்த அப்பரிசும்'' என்று பாடியுள்ளார்.

படிமப்பாதம் (திருவடி தீக்கை) வைத்த இடம்:

மணிவாசகருக்கு, சிவபெருமான் திருப்பெருந்துறை என்ற திருத்தலத்தில் குருவாக எழுந்தருளி திருவடி சூட்டினார் என்பதை அவரது வரலாறு தெரிவிக்கிறது. மணிவாசகப் பெருமானுடன் யாத்திரைக்கு வந்த  ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதாவது ஐந்து கொத்தார் (ஐந்து வகையான கோத்திரங்களை உடையவர்) மணிவாசகப் பெருமானை நோக்கி, ""ஐயனே! தங்களுக்கு இறைவன் திருவடி சூட்டியவாறே அடியோங்களுக்கும் திருவடி சூட்டுவிக்க தாங்கள் அருள் புரிய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டனர்.

மணிவாசகப்பெருமானும் ஸ்ரீமகாலிங்கப்பெருமானை வழிபட்டு, இந்த ஐவரின் விருப்பத்தை எடுத்துரைத்து அருள்பாலிக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தார்.

மணிவாசகரின் வேண்டுகோளுக்கிணங்க, பெருமானும், ""வாதவூரன்ப! வருகிற சிவராத்திரியன்று மூன்றாம் சாமத்தில் உமது பர்ணசாலையில் தோன்றி உம்முடைய எண்ணத்தை நிறைவேற்றுவோம்'' என்று அசரீரியாக அருளிச்செய்தார். அது கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்.

மாணிக்கவாசகப் பெருமானும் மற்ற ஐந்து கொத்தாரும், சிவராத்தியன்று நியமமோடும் சிவசிந்தனையோடும் மூன்றாம் சாமத்தில் தமது பர்ணசாலைக்கு வடமேற்கில் உள்ள திருக்குளத்தில் நீராடி, பர்ணசாலையில் காத்திருந்தனர். ஸ்ரீமகாலிங்கப்பெருமான் குருவடிவாய்த் தோன்றி மணிவாசகர் முன், ஐந்து கோசத்தார்களுக்கும் படிமப்பாதம் (திருவடி தீக்கை) சூட்டி உபதேசித்தார்.

பிறகு அவர்களை நோக்கி, ""அன்பர்களே! நீவீர் இன்று முதல் சைவக் குலத்தார்க்குத் தீக்கை செய்து வைக்கும் உரிமை பெறுகிறீர்கள். அதனால் தேசிகன் என்னும் சிறப்புடன் இத்தலத்திலேயே தங்கி வாழுங்கள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இடைமருதூர் ஸ்ரீமகாலிங்கப்பெருமான் படிமப்பாதம் அளித்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. இதுகேட்ட  பாண்டியன் அந்த ஐவரை வந்து வணங்கிச் சென்றான். இந்த ஐந்து குடும்பத்தார்க்கும், வீடு, நிலம், பசு முதலியவற்றை தந்தான். மேலும், ""இறைவனால் திருவடி சூட்டப்பெற்றதாலும், எம்மால் குதிரை ஏறும் உரிமை தரப்பட்டதாலும், நீவீர் உமது கோத்திரப் பெயருக்கு முன்னே, "படிமப்பாதம் வைத்த', "பரியேறும்' என்ற இரண்டு விருதுகளையும் சேர்த்து வழங்கிக் கொள்க'' என்று உரிமையும் வழங்கினான்.

ஸ்ரீமகாலிங்கப்பெருமானால் படிமப் பாதம் சூட்டப்பட்ட அந்த ஐவரும், மணிவாசகப்பெருமானின் ஆணைப்படி திருவிடைமருதூரிலேயே தங்கி தினமும் இடைமருதீசனை வணங்கி வந்தனர்.

அவ்வாறு மணிவாசகப்பெருமான் பொற்பாதங்கள் பட்ட  இடமும், அவர் தங்கிய இடமும்தான் திருவிடைமருதூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீஆத்மநாதர் திருக்கோயில். இத்திருக்கோயில் மூலத்தானம் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் திருக்கோயிலைப் போன்றே காணப்படுகிறது.

மணிவாசகப்பெருமான் வந்து தங்கிய புனித இடம். ஐந்து கொத்தார்க்கு ஸ்ரீமகாலிங்கப்பெருமான் திருவடி சூட்டிய இடமும் இதுதான். இக்கோயில் ஐந்து கொத்தார்க்கும் சொந்தமானது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் ஐந்து கொத்தார்களால் கற்றளியாக்கப்பட்டது இவ்வாலயம் என்கின்றனர். ""இத்திருக்கோயில் அறநிலையத்துறை ஆட்சியில் இருந்து, தற்பொழுது என் நிர்வாகத்தில் உள்ளது'' என்று, "வரலாற்றில் திருவிடைமருதூர் - சூரியனார் கோயில் ஆதீனம்' (1999 வெளியீடு) என்ற நூலில் பக்.39-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புக்குரிய இக்கோயிலில் மூன்றுகால பூஜை செய்து, மணிவாசகப் பெருமான் குருபூஜை நாளிலும், சிறப்பான நாட்களிலும், திருவாசக முற்றோதல் நடைபெறவேண்டியது அவசியம். ஆனால் தற்போது ஒருகால பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்ல, தற்போது இக்கோயில் இருக்கும் இடம் பலருக்கும் தெரியாதபடி முற்காடுகள் மண்டிக் கிடக்கின்றன. இரண்டு வீடுகளுக்கு நடுவில் உள்ள முட்புதர்களுக்குள் சிரமப்பட்டு நடந்து சென்றால்தான் இப்படி ஒரு அற்புதமான கோயில் உள்ளது என்பதே பலருக்கும் தெரியவரும்.

இத்திருக்கோயிலைச் சுற்றியுள்ள உழவாரப்பணி மன்றத்து அன்பர்கள் கண்ணோக்கம் செய்து இவ்விடத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். ஆவுடையார் கோயில் மட்டுமே பெருந்துறை அல்ல, மகாலிங்கப்பெருமான் குருவாய் வந்து தமது பொற்பாதம் (திருவடி தீக்கை)பட்ட இந்தப் பெருந்துறையும் மாபெரும்துறைதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.