சோழ வளநாட்டின் காவிரி தென்கரைத் தலங்களுள், 82வது தலமாக நாகைக் காரோணம் ஆலயம் திகழ்கின்றது. இவ்வூர் ஆதிசேஷன் வழிபட்டதால், "ஆதி புராணம்' என்றும், பன்னிரண்டு சிவாலயங்களின் நடுவில் அமைந்துள்ளதால், "சிவ ராஜதானி' என்றும் அழைக்கப்படுகிறது.
முசுகுந்த மன்னன் நிறுவிய சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகவும், சக்தி பீடம் 64ல் ஒன்றாகவும் நாகை சிவாலயம் விளங்குகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்று மூவராலும் பாடப்பட்ட தேவாரத் தலமிது.
இங்கு சுயம்பு லிங்கமான மூலவர், "காயாரோகணேசுவரர்' என்ற திருநாமத்துடன், கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.
நாகை மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இக்கோயிலை அடைய எல்லா இடங்களிலிருந்தும் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
நாகப்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள நுளைப்பாடி என்ற குப்பத்தில் வாழ்ந்த மீனவர் அதிபத்தர் ஆவார். இன்று இப்பகுதி நம்பியான் நகர் என்று வழங்கப்படுகிறது. இறைவன் மீது அதிக பக்தி கொண்டவர் என்பதால், அதிபத்தர் என்று இந்த சிவனடியார் அழைக்கப்பட்டார்.
இவர் இறைவன் மீதுள்ள பற்றினால், நாள்தோறும் கடலில் தன் வலை வீச்சில் சிக்கும் முதல் மீனை கடலிலேயே "சிவார்ப்பணம்' என்று விட்டு விடுவார். இவரின் அன்பைச் சோதிக்க விரும்பிய இறைவன், அவரின் வலையில் அதிக மீன்கள் சிக்காதபடி பார்த்துக் கொண்டார். எப்போதாவது ஒரு முறை மீன் கிடைக்கும். ஆனால் அதையும் இறைவனுக்குக் காணிக்கையாகக் கடலில் விட்டுவந்தார்.
இந்நிலையில் அவரை வறுமை வாட்டியது. என்றாலும் வழக்கம்போல மீன் பிடிக்கச் சென்றார். அன்றைய தினம் அவர் வீசிய வலையில் பேரொளி வீசும் தங்க மீன் ஒன்று கிடைத்தது. விலை மதிப்பு மிக்க அந்த மீனை விற்றால் பல ஆண்டுகளுக்கு வறுமையின்றி வாழலாம் என்பது அதிபத்தருக்கு தெரியும். என்றாலும் சஞ்சலம் ஏதுமின்றி, அது முதல் மீன் என்பதால், "ஆடல் வல்லானின் பொன்னார் திருவடிகளுக்கு சமர்ப்பணம்' என்று கூறி, அந்த மீனை கடலிலேயே போட்டுவிட்டார்.
இறைவனின் திருவிளையாடலில் புடம் போட்ட தங்கமாக மின்னிய அதிபத்தரின் பக்தியை மெச்சிய ஆண்டவன், ரிஷபத்தின் மீதேறி வந்து அவருக்குக் காட்சி தந்தார். அத்துடன் அவருக்குச் சிவலோகப் பதவியையும் அளித்து மகிழ்ந்தார். இந்த வரலாறு நிகழ்ந்த தலமாகத் திகழ்வது நாகப்பட்டினம் ஆகும்.
பொதுவாக ஆலயத்தைச் சுற்றி இருக்கும் மாட வீதிகளில் எவராவது மரணமடைந்துவிட்டால், அந்த உடலை எடுத்துச் செல்லும்வரை ஆலயக் கதவுகளை மூடியிருப்பது வழக்கம். ஆனால், நாகை காயாரோகணேசுவரர் ஆலயத்தில் ஒரு ஆச்சரியமான வித்தியாசம்! அதிபத்தர் வாழ்ந்த நம்பியான் நகரில் யார் இயற்கை மரணம் எய்தினாலும், அவரது உடல் ஆலய வாசலுக்குக் கொண்டுவரப்படும். கோயில் கதவுகள் திறந்திருக்கும்.
அங்கே அந்த உடலுக்கு சிவபெருமானின் சார்பாக மாலையும், ஆடையும், தீர்த்தமும் வழங்கப்படும். அதன்பின்னரே அந்த உடல் மயானத்திற்குச் செல்லும். இந்தப் பழக்கம் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. கொள்கை மாறாத அடியாரின் வழித் தோன்றல்களுக்கும், மீனவக் குடிமக்களுக்கும் இன்றளவும் இறைவன் செய்யும் மரியாதையாக இது போற்றப்படுகிறது. நம்பியான் நகரைப் போலவே ஆரிய நாட்டுத் தெரு மற்றும் சாமந்தப் பேட்டையில் வாழ்ந்து மரிப்போருக்கும் இந்த மரியாதை உண்டு என்பது கூடுதல் தகவல்.
பழங்காலத்தில் காஞ்சி, மதுரை, காவிரிப்பூம்பட்டினம் போன்ற நகரங்களுக்கு இணையாக நாகையும் கல்வியில் சிறந்த ஊராகத் திகழ்ந்தது. "கற்றார் பயில் கடல்நாகைக் காரோணம்' என்ற திருஞானசம்பந்தரின் பாடல் இதனை உறுதிப்படுத்துகின்றது.
இதேபோல, காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது, அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம், ""தம்பி! சோறு எங்கே விக்கும்?'' என்று கேட்டாராம். அதற்கு அந்தச் சிறுவர்கள், ""தொண்ûடையில் விக்கும்', என்று பதில் கூறினார்களாம். உடனே கோபம் கொண்ட புலவர், பாக்கு தரித்து விளையாடும் பாடலுக்கு என்று சுவரில் எழுதிவிட்டு, சாப்பிடச் சென்றாராம். உண்ட பிறகு பாடலை முடிக்கத் திரும்பி அங்கு வந்துள்ளார். அப்போது அவர் எழுதி வைத்த வரியின் கீழ், "நாக்குத் தமிழுரைக்கும் நன்நாகை' என்று எழுதி முடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிசயித்தாராம். இதன்மூலம் நாகை கல்வியில் சிறந்த நகராக விளங்கியதை உணரமுடிகிறது.
அட்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் வணங்கி வாழ்ந்த கடற்கரைப் பட்டினம் இது என்பதால், இத்தலம் நாகப்பட்டினம் என்ற பெயர் பெற்றது. காரோணம் என்பது கோயிலின் பெயராகும். புண்டரீக முனிவரை உடலோடு (காயம்) தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் பரமேஸ்வரன். இதற்கு "காயாரோஹணம்' என்று பெயர். அதுவே தமிழில் "காரோணம்' என்றானது. தேவாரப்பாடல்கள் அனைத்திலும், "நாகை காரோணம்' என்றே இத்தலம் குறிப்பிடப்படுகின்றது.
ஆதிசேஷனுக்கு இறைவன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை பருவமடைந்த நிலையில், மூன்று தனங்களுடன் வளர்ந்தது. இதைக் கண்டு மனம் வருந்திய ஆதிசேஷன், நாகை இறைவனிடம் வேண்டி நின்றார். அதற்கு இறைவன், "இவளுக்கு உரிய கணவன் வரும்போது தனங்களுள் ஒன்று மறைந்துவிடும்' என்று அருள் வழங்கினார். அதன்படியே சூரிய குல மன்னனான சாலிசுகன் என்பவனைக் கண்டதும், அப்பெண்ணின் குறை நீங்கியது; அவர்களுக்குத் திருமணமும் நடைபெற்றது. அதன்பின் ஆதிசேஷன், நாகை ஆலயத்திற்குத் திருப்பணிகள் செய்து நன்றிக் கடன் ஆற்றினான்.
அம்மனின் சந்நிதி, ரதத்தின் அமைப்பில் காணப்படுவது குறிப்பிடத் தக்கது. காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்பதுபோல, "நாகை நீலாயதாட்சி' புகழ்பெற்றவராக விளங்குகின்றார். இந்த அன்னைக்கு, "கருந்தடங்கண்ணி' என்ற பெயரும் உண்டு.
அம்மனுக்கு ஆடிப்பூரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினத்தில் பீங்கானால் செய்யப்பட்ட பெரிய வாகனத்தில் அம்மன் உலா வருவது குறிப்பிடத் தக்கது.
அன்னை நீலாயதாட்சியின் பாதுகாவலராக நந்தி தேவர் விளங்குகின்றார். அதனால் தன் தலையை இறைவன் பக்கம் திருப்பி, தனது ஒரு கண்ணை அன்னையின் மீதும், மற்றொரு பார்வையை சிவலிங்கத்தின் மீதும் பதித்திருக்கிறார். இதனால் இவருக்கு "இரட்டைப் பார்வை நந்தி' என்ற பெயரும் உண்டு.
"புரி' தலத்தையும், காசியையும் போல நாகையில் உள்ள காசி விசுவநாதர் கோயிலிலும் முத்தி மண்டபம் அமைந்துள்ளது.
இங்குள்ள நவக்கிரகங்கள் சப்தவிடங்கத் தலங்களில் காணப்படும் அமைப்பைப் போல, மேற்கு நோக்கி நேர் வரிசையில் அமைந்துள்ளன.
தசரத சக்ரவர்த்தி, தன் நாட்டில் சனி தசையால் பஞ்சம் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பினார்; நாகை சிவபெருமானை வணங்கினார். அவரின் அருளால் சனி பகவானின் அருள் கிடைத்து அயோத்தியில் சுபிட்சம் ஏற்பட்டது. இதன் நினைவாக தசரதன் நிறுவிய சனீஸ்வரர் சந்நிதி இங்கே தெற்கு முகமாக அமைந்துள்ளது.
இவ்வாலயத்தைச் சுற்றிலும் பன்னிரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. நாகையில் வைகாசி மாதம் நடக்கும் பதினெட்டு நாள் விழாவில் பன்னிரண்டு சிவாலயங்களில் இருந்தும் ரிஷப வாகனங்களின் மீது சிவ மூர்த்தங்கள் ஒன்றுகூடும் திருவிழா, பல காலமாய் நடந்துள்ளது. ஆயினும் ஏனோ இச்சிறப்பு மிகு விழா, காலப்போக்கில் நின்றுவிட்டது.
பிரதோஷ காலத்தில், சுவாமி புறப்பாடுக்கு முன்பாக, திருமால் மோகினி உருவில் காட்சி தருவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். பிரதோஷ கால வரலாற்றை இது நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதிபத்தரின் வரலாற்றைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில், "உற்சவ அதிபத்தர்' படகில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் சம்பவமும், அங்கே சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் காட்சி தரும் தரிசனமும் விழாவாக நடைபெற்றுவருகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்தரை பெருமைப்படுத்தும் வகையில், ஆலயத்திற்குள் அவருக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.
இத்தலத்து விநாயகர் ஆதிசேஷனின் நாகக் குடையுடன் சுந்தர விநாயகராக விளங்குகின்றார்.
இத்தலத்துத் தியாகராஜரின் பாத தரிசன விழா, வைகாசி விசாகத்திலும், மார்கழி திருவாதிரையிலும் நடைபெறுகிறது. அப்போது தியாகராஜரின் நடனம் வெகு சிறப்பாக இருக்கும். தியாகராஜர் முன்னும் பின்னுமாக நடனமாடுவார். இந்நடனத்திற்கு பாராவதரங்க நடனம் என்று பெயர்.
சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றான நாகையில் "சுந்தர விடங்கர்' அமைநதுள்ளார்.
புண்டரீக முனிவர் இறைவனுடன் ஐக்கியமான விழா, ஆனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் சிறப்பாக நடைபெறு கிறது.
அன்னையிடம் குழந்தைபோல அழுது, முக்தி பெற்ற அழுகுணிச் சித்தரின் ஜீவ சமாதி, அன்னை ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது. பைரவர் கோலம் பொதுவாக, நாய் வாகனத்தில் காணப்படுவது வழக்கம். ஆனால், புண்டரீக தீர்த்தத்தில் காணப்படும் அஷ்டபுஜ பைரவர், சிம்ம வாகனத்தில் காட்சி தருகின்றார். இவரை வழிபட்டால் எம பயம் நீங்கி, நீண்ட ஆயுள் பெறலாம். இவரின் உக்ரத்தைத் தணிக்க இவர் எதிரில் இரட்டை விநாயகர் காட்சி தருகின்றனர்.
பொதுவாக ஆலயத்தைச் சுற்றிய தெருக்களுக்கு இறைவன் பெயரிலேயே வடக்கு, தெற்கு என மாட வீதிகள் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தைச் சுற்றி அன்னையின் பெயராலேயே நீலா வடக்கு, நீலா தெற்கு, நீலா கிழக்கு, நீலா மேற்கு என வீதிகள் அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
அகிலமெல்லாம் காத்து ரட்சிக்கும் அம்பிகையை, இந்த ஊர்க்காரர்கள் மகளாகக் கருதி, "நீலா! நீலா!' எனச் செல்லமாக அழைப்பது மனதை நெகிழ்விக்கின்றது. அஷ்டதிக்குப் பாலகர்களின் சிலைகள் அமைந்த தலமாகவும் இது விளங்குகின்றது. சிவபெருமானின் திருமணக் கோலத்தைக் காண வேண்டி, ஏழு ஊர்களில் தவமியற்றிய சாலிசுக மாமன்னனின் தவத்தைக் குறிக்கும் வகையில், சப்த ஸ்தான பல்லக்குத் திருவிழா, இங்கே நடைபெறுகின்றது. அப்போது சப்த ஸ்தான பல்லக்கில் இறைவன் புறப்பட்டு, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொரவச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழூர்களுக்கு விஜயம் செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும்.
இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் திகழ்கின்றது. இதில் விளையும் காய்கள் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.
ஆலயத்தின் தெற்கே தேவதீர்த்தமும், அதனருகே முக்தி மண்டபமும், மேற்கே முனி தீர்த்தம் எனப்படும் புண்டரீக தீர்த்தமும், பிரம்மன் நீராடிய காகத் தீர்த்தமும், வடக்கே சர்வ தீர்த்தமும், முக்கியமான தீர்த்தங்களாகத் திகழ்கின்றன.
காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 9.15 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
இத்தனைச் சிறப்புகள் மிக்க இந்தப் புராதன சிவாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பெரும் பாக்கியம் செய்தவர்களுக்கே இத்திருப்பணியில் பங்கேற்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆலய புனருத்தாரணத்துக்கு நன்கொடை நல்கிட விரும்புவோர், "செயல் அலுவலர், அருள்மிகு நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம், பின்கோடு-611 001' என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். சிவ பக்தர்களின் செல்லப் பெண் "நீலா'வுக்கும், மாப்பிள்ளையான காயாரோகண சுவாமிக்கும் "சீர்' செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? வாரீர் அன்பர்களே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


