முக்தி தரும் மகர ஜோதி!
உலகம் முழுவதும் இருக்கும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகையில் விரதம் இருப்பார்கள். பின்னர் இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள். அதுவும் மகர


உலகம் முழுவதும் இருக்கும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகையில் விரதம் இருப்பார்கள். பின்னர் இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள். அதுவும் மகர ஜோதியைக் காண அங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் கணக்கிலடங்காது. மகர ஜோதியைத் தரிசிக்கும்போது பக்தர்கள் முழங்கும். ஸரண கோஷத்தினால் சபரி மலையே அதிரும். இதன் புராணப் பின்னணியைச் சற்று பார்ப்போம்.
இப்பூவுலகில் ஐயப்பனாக அவதாரம் செய்த தர்மசாஸ்தா, தன் அவதார நோக்கம் முடிந்தவுடன் தனது வளர்ப்புத் தந்தையான பந்தள மகாராஜாவிடம் விடைபெற்றார். அந்தத் தருணத்தில், வளர்த்த பாசம் மிகவும் வாட்ட, மன்னன் விடை கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்டார். ஐயப்பனிடம், "தன் நாட்டைக் காத்து ரட்சித்து அங்கேயே வாழ்ந்து வர வேண்டும்' என்று வேண்டினார். மேலும் பிறவிப் பிணியிலிருந்து தனக்கு விடுதலை அளித்து முக்தி நிலையை நல்குமாறும் வரம் கேட்டார்.
அப்போது ஐயப்ப பகவான் அரசரிடம், "கரும வினைகள் தீராமல் வீடு பெறுதல் இயலாத காரியம். ஆகையால் ஒரு குருவிடம் உபதேசம் பெற்று வருவாயாக' என்று கூறி அகத்திய முனிவரை அரசனுக்கு முறைப்படி உபதேசம் செய்யப் பணித்தார்.
ஞானகுருவிடம் உபதேசம் பெற்ற மன்னருக்கு ஜகத்குருவான மணிகண்ட தேவன் உலகுய்யும் வழிவகுக்கின்ற "பூதநாத கீதை' என்னும் ஆன்மீகத் தத்துவங்களை உபதேசம் செய்தார். இந்த உபதேசம் முக்கியமாக இரண்டு கருத்துக்களை வலியுறுத்துகிறது. ஒன்று, மனிதன் அறவழியில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்; மற்றொன்று கலியுகத்தில் பக்தி மார்க்கமே சிறந்தது என்பன ஆகும்.
மைந்தனது உபதேச மொழிகளில் ஆறுதலடைந்த மன்னர், மணிகண்டனுக்கு ஆலயம் அமைக்கும் பாக்கியம் கிடைக்க அருள வேண்டும் என்று இறைஞ்ச, ஐயனும் சம்மதம் தெரிவித்து மறைந்தார்.
ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை மன்னர் உடனே செய்ய முனைந்தார். இரு கால்களையும் குத்திட்டு யோக பட்டத்துடன் பந்தனம் செய்த வண்ணம், தத்வமஸி என்னும் சின் முத்திரையுடன் கூடிய பகவானின் திரு உருவமே ஏற்றது என்பதை ஆண்டவன் கட்டளைப்படி அறிந்தார் மன்னர். அதற்கேற்ப பரசுராமரை தியானித்து, அந்தக் கோலத்திலே ஐயப்பன் திருவுருவை பிரதிஷ்டை செய்ய வேண்டினார் மன்னர். ஒரு மார்கழி மாதக் கடைசி நாளில் சபரிமலையில் ஆலயத் திருப்பணிகள் இனிது முடிந்தது. மகா சங்கராந்தி தினமான தை மாதப் பிறப்பு நன்னாளில் (கிருஷ்ணபட்சம், பஞ்சமி திதி) உத்திர நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் பரசுராமர் ஸ்ரீதர்மசாஸ்தாவை பிரதிஷ்டை செய்தார். குலகுருவாம் அகத்திய முனிவர் துணையிருந்து பூஜை விதிகளைக் கிரமமாக நிறைவேற்றி வைத்தார்.
இக்காட்சியை பூவுலகில் பந்தள மன்னர் மட்டுமின்றி, வானுலக தேவர்களும் கண்டு களித்தனர் என்பர். இந்த வைபவத்தை காந்த மலையிலிருந்து ஸ்ரீபூதநாதன் ஜோதி ஸ்வரூபமாக எழுந்தருளி, சபரிமலையில் யோகி வடிவில் அமர்ந்து அருளியதாக வரலாறு.
இன்றும் தை மாதம் மகர சங்கராந்தி தினத்தன்று சபரி மலையில் யோகியாகவும், காந்த மலையில் ஜோதியாகவும் ஐயப்பன் காட்சி கொடுப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. மகர ஜோதி தினத்தன்று பந்தள ராஜன் மணிகண்டனுக்காக செய்வித்த ஆபரணங்களை அணிவித்து, தீப ஜோதியில் ஐயப்பனை தரிசனம் செய்விப்பார்கள். இந்தக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.
இத்தருணத்தில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் அருளுரை கவனிக்கத் தக்கது. ""பகவானின் அநேக ரூபங்களில் சபரிமலையில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தாவும் ஒன்று. சபரிமலை பாரதத்தில் உள்ள ஒரு பெரிய புண்ணியத் தலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்லும் இடம். விரதமிருந்து எல்லா விரத முறைகளையும் சரியான முறையில் அனுசரித்து, தர்ம சாஸ்தாவை சபரி மலையில் தரிசித்தால் உலகத்தில் நலமோடு வாழலாம்! முக்தியும் பெறலாம்! அவருடைய சிறப்பான திருவருளைப் பெற்றுய்யலாம்'' என்கிறார். மேலும் அவர் இயற்றியருளிய ஸ்ரீதர்மசாஸ்தா என்ற அஷ்டகத்தில், ""சிவன் ஞானத்தை அருளுகிறார்; விஷ்ணு மோட்சத்தை அருளுகிறார்.
ஹரிஹரபுத்திரரான சாஸ்தாவோ ஞானம், மோட்சம் இரண்டையுமே அருளுகிறார்'' என்று போற்றுகின்றார்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது விரதமிருந்து, சபரிமலையில் அந்த ஐயனைக் கண்டு கண் குளிர தரிசிக்க ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வரும் ஜனவரி 14-ம் தேதி தை மாதம் மகர சங்கராந்தி புண்யதினம்! அன்று ஐயன் காந்த மலையில் ஜோதியாகக் காட்சி தர காத்திருக்கிறான். கண்டு தரிசிப்போம்! ஞானத்தையும் முக்தியையும் பெறுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...