தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பாற்கடல் அல்ல! தயிர்க் கடல்!

திருமாலின் திரு அவதாரங்கள் பத்தில் மக்கள் மனதில் தனியிடம் பெற்றவை ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் எனலாம். அதிலும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒப்பற்ற, ஈடு இணையற்ற அவதாரம்! உலகம் முழுவதும் போற்றிப் பெருமை கொள்ள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:54 am

எஸ். வெட்கட்ராமன்

திருமாலின் திரு அவதாரங்கள் பத்தில் மக்கள் மனதில் தனியிடம் பெற்றவை ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் எனலாம். அதிலும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒப்பற்ற, ஈடு இணையற்ற அவதாரம்!

உலகம் முழுவதும் போற்றிப் பெருமை கொள்ளும் வகையில், அனைவரது இதயத்தையும் ஈர்த்த திரு உருவம் கண்ணனின் திரு உருவமாகும். திரு ஆயர்பாடி (கோகுலம்), கண்ணனின் பிள்ளைப் பருவ விளையாட்டுக்கள் நடந்த இடம். கண்ணனின் பால லீலைகள் பிரமிக்கத் தக்கவை. அவனது திருவிளையாடல்களைக் கண்ணுற்ற கோகுலவாசிகள், "கண்ணன் சாதாரண மானிடப் பிறவி அல்ல!

தெய்வாம்சம் நிறைந்த குழந்தை' எனப் போற்றினர்.

கோகுலத்தில் ஒரு சமயம் பெரிய பாத்திரத்தில் தயிர் நிரப்பி, அன்னை யசோதை மத்தைக் கொண்டு கடைந்து கொண்டிருந்தாள். அச்சமயம் தாய்ப்பால் குடிக்கும் ஆவல் கொண்டு, கிருஷ்ணன் தயிர்ப் பாத்திரத்தில் உள்ள மத்தை அசையாதபடி பிடித்து நிறுத்தினான்; தனக்கு  பால் கொடுக்கும்படி யசோதையை வற்புறுத்தினான்.

யசோதையும் தயிர் கடைவதை நிறுத்தி, குழந்தைக்குப் பால் கொடுத்தாள். அந்தச் சமயத்தில் வீட்டினுள் அடுப்பில் பெரிய பாத்திரத்தில் காய்ந்து கொண்டிருக்கும் பாலானது பொங்கி வழிவதை அறிந்த யசோதை, கண்ணனுக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு அடுப்பில் இருக்கும் பால் பாத்திரத்தைக் கவனிக்கச் சென்றாள். அப்பொழுது "கண்ணன், "தனக்குப் பாலை முழுதும் கொடுக்காமல் அன்னை சென்றுவிட்டாளே?' என்ற கோபத்தில் (கோபம் வந்ததுபோல் நடிப்பு) அந்த மத்துக் கம்பினால், தயிர்ப் பானையை உடைத்து நந்தகோபருடைய இல்லத்தை ஒரு சிறிய தயிர்க் கடலாக்கிவிட்டானாம். இந்தச் சம்பவம் பாகவதத்தில், அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பாற்கடலில் பள்ளி கொள்ளும் அந்தப் பரமன், கோகுலத்தில் உருவாக்கிய தயிர்க் கடல் இது!

"கண்ணனின் இந்தப் பால லீலைகளைக் காணத் தனக்குத் கொடுப்பினை இல்லையே' என்று கண்ணனைக் கருவிலே சுமந்து பெற்ற தேவகி புலம்புவதாகக் குலசேகரப் பெருமான் அருளிச் செய்த "பெருமாள் திருமொழி' அழகாகக் கூறும். அதிலும், கண்ணன் யசோதையிடம் பால் பருகிய கோலத்தை மானசீகமாகத் தேவகி மனத்தில் நினைத்து,

""குழகனே! என் தன் கோமளப் பிள்ளாய்!

கோவிந்தா! என் குடங்கையில் மன்னி,

ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல் ஒரு கையால் ஒரு முலை

-முகம் நெருடா,

மழலை மென்னகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க,

என் முகத்தே

எழில் கொள் நின் திருக்கண்ணிணை நோக்கந் தன்னையும் இழந்தேன்,

இழந்தேனே!''

என்று புலம்புகிறாள்.

"கண்ணனுக்குப் பாலூட்டி, பருகச் செய்த செய்கையின் மூலம் யசோதை அண்டம் முழுதுமுள்ள அனைத்துப் புண்ணிய சீலர்களையும், வென்றுவிட்டாள்' என்பார் நாராயண பட்டத்திரி.

கண்ணன் யசோதையிடம் தாய்ப்பால் பருகும் அழகிய அற்புதமான திருக்கோலத்தை (ஸ்தன்ய பானம்) உற்சவ விக்ரஹமாக, வேலூர் மாவட்டம் பூண்டி திருத்தலத்தில் (காவேரிப்பாக்கம் அருகில்) தரிசிக்கலாம். அங்குள்ள ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் கருவறையில் வைத்து இந்த மூர்த்தி பூஜிக்கப்படுகிறார்.

மழலைச் செல்வம் வேண்டுவோர், மார்பகச் சம்பந்தமான கோளாறுகளுடைய பெண்கள்  ஆகியோர் உடனடி நிவாரணம் பெற இத்திருத்தலத்திற்கு வந்து கண்ணபிரானை வழிபாடு செய்து பிரார்த்தனை செய்து அருள் பெறலாம்!

படம்: எம். என். ஸ்ரீநிவாஸன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.