சேரன் குளம் சேர்வோம்

குன்றமேந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான்- பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே! - என்ற திருவாய்மொழிப் பாடல் ஒரு விசேஷமான பொருள் கொண்டது. அதாவது அந்த திருமலை வ
சேரன் குளம் சேர்வோம்

குன்றமேந்திக் குளிர் மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான்- பரன்

சென்று சேர் திருவேங்கட மாமலை

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!

- என்ற திருவாய்மொழிப் பாடல் ஒரு விசேஷமான பொருள் கொண்டது. அதாவது அந்த திருமலை வாசனான  வேங்கடவனை சேவிப்பவர்க்கு அவர்களது கர்ம வினைகள்  கட்டுக்குள் அடங்கும் என்பது இதன் பொருள். இதில் என்ன விசேஷ உட்பொருள் உள்ளது என்று கேட்கலாம். பாடல் வரியில், "ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே' என்கிறார் ஆழ்வார்.

   "தீருமே' என்றிடவில்லை. தீர்வதற்கும், ஓய்வதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது.  ஒன்று தீர வேண்டும் என்றால் அதை நாம் அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்.   அதற்கான காலம் என்பது கர்ம வினையின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். அதே வினையை ஓயவைத்துவிட்டால் அதை நாம் அனுபவிப்பதே தெரியாது. அதாவது மலைபோல் கனக்க வேண்டியதுகூட குருணைபோல சிறுத்துவிடும்.

    மயக்க மருந்து தந்துவிட்டு அறுவைச் சிகிச்சை செய்யும்போது எப்படி அதன் வலியை மனமானது உணர்வதில்லையோ அப்படி கர்மத்தை ஓயச் செய்து விடும்போது அதன் குதியாட்டம் அடங்கி, நாமும் இந்த மாயையின் பிடியைக் கடப்பது தெரியாமல் வாழ்வைக் கடந்துவிடுகிறோம்.

   இதற்கான பேரருளைத் தருபவன்தான் அந்த திருவேங்கடவன். இவன் இருக்குமிடமோ ஏழுமலைக்கு மேல்...! இவனை இன்று தரிசிக்க வேண்டும் என்றாலும்  நிரம்பிய பிரயாசை, மிகுந்த மெனக்கெடல், எல்லாவற்றுக்கும் மேலாக கோவிந்த நாமம் கொப்பளிக்கும் ஆழ்ந்த பக்தி; இதனோடு சற்று பொருளும் தேவைப்படுவதை நாம் அறிவோம். வரிசையில் நின்று மூன்று மணி நேரத்துக்குள் சேவை கிடைத்துவிட்டால் அதுதான் அன்று சீக்கிரம் கிடைத்த சேவை! இதன் அதிகபட்சமோ இருபத்து நான்கு மணி நேரத்தில் இருந்து முப்பத்து ஆறு மணி நேரம் வரை எல்லாம் நீள்கிறது. இது இந்த நாள் கணக்கு!

   அந்த நாளில் இப்படி ஒரு ஜனக்கூட்டம் கிடையாது. போனால் திவ்யமாக சேவிக்கலாம்தான்! ஆனால்  அவரவர் ஊர்களில் இருந்து நடந்து வந்துதான் தரிசனம் புரிய வேண்டும். இதில் ஏழுமலையை கடக்கும்போது பக்தியில் குறைபாடு இருந்தால் யானை மிதிக்கலாம்; இல்லையேல் புலி அடித்து மாளலாம்!

   மொத்தத்தில் அந்த வேங்கடவன் அன்றும் சரி, இன்றும் சரி, வானத்து நிலவுக்குப் பக்கத்தில் பீடம் அமைத்து நின்று கொண்டிருப்பது போலத்தான் எண்ணத் தோன்றுகிறது.

  அன்பெனும் பிடிக்குள் அவன் நினைவு அகப்பட்டுவிடுகிறது. ஆனால் ஸ்தூல தரிசனமோ அன்றும், இன்றும் அபூர்வமாகவே உள்ளது.

  இந்த அபூர்வத்தை அன்றாடமாக்கி, அவனை எல்லோரும் எண்ணிய மாத்திரத்தில் தரிசிக்க வகை செய்யும் விதமாக அந்த நாளிலேயே சான்றோர்கள் சில ஏற்பாடுகளைச் செய்தனர். அதன் விளைவாகவே அந்த திருவேங்கடவனின் திருச்சன்னதிகள்  பாரத தேசத்தில் பல கிராமங்களிலும் எழும்பி நின்றன. சன்னதி அமைந்தால் போதுமா? சான்னித்தியம் குறைவின்றி ஒளிர வேண்டுமே? அதன் பொருட்டு அன்று எழும்பிய அவன் சன்னதிகளில்  அபிஷேக ஆராதனைக்கும் சரி, பிரம்மோத்சவம், பவித்ரோத்சவம், திருப்பாவை உத்சவம், சாற்றுமறை, ஹஸ்ர  நாமார்ச்சனை என்று எந்த ஒன்றுக்கும் குறையின்றி, அந்த வேங்கடவனின் திருச்சன்னதி  அமைந்த ஊர்களையே திருமலையாக ஆக்கிவிட்டனர்.

  அப்படிப்பட்ட ஒரு சன்னதி உடைய ஊர்தான் சேரன்குளம். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கு மூன்று கிலோமீட்டர் தெற்கில், முத்துப்பேட்டை செல்லும் வழித் தடத்தில் அமைந்துள்ளது இவ்வூர். வடக்கு தெற்காக காவிரியின் கிளை நதியான பாமினி ஆறு பாய்கிறது. இதனால், தென்னையும் வாழையும் தழைத்து வளர்ந்திருக்கும் ஒரு ஊராக இது உள்ளது. இலுப்பை மரத்துக்கும் புகழ் பெற்ற ஊராக இருந்திருக்கிறது. இலுப்பை இருந்தால் எண்ணெய் இருக்கும். எண்ணெய் இருந்தால் விளக்கு. விளக்கு இருந்தால் ஒளி என்பது ஒரு கணக்கு.

   குன்றா ஒளி என்றும் திகழ வேண்டியே இந்த ஊரில் இலுப்பை முளைத்ததாகக் கூறுவார்கள். ஒளி உள்ள இடத்தில் அருளும் வேகமாக சென்று சேர்ந்துவிடுமே? எனவேதான் இந்தக் கிராமத்தை தேர்வு செய்து, இங்கே அந்த வேங்கடவனுக்கு கோயில் அமைத்தார்கள். கோயிலுக்குள் வேங்கடவனை குடியேற்ற ஒரு உபாயமும் செய்தனர். சேரன்குளத்தோடு சேர்ந்து இன்னும் நான்கு கிராமங்கள் உள்ளன. இவைகளை "பஞ்ச கிராமம்'  என்பார்கள். மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தின் பரிபாலனத்துக்கு கீழ் வரும் இந்த பஞ்ச கிராமவாசிகள், அந்த ராஜ கோபாலனின் அருளோடு நடந்தே திருப்பதிக்கு சென்று அங்கிருந்தே அந்த ஸ்ரீனிவாசனின்  அர்ச்சா ரூபங்களை சுமந்து வந்து சேரன் குளத்தில் சேர்த்தும்விட்டனர்.

   இது நடந்து கிட்டத்தட்ட 700ஆண்டுகள் ஆகின்றன. இந்த பெருமானுக்கு ஊர் மக்களும் சரி, பஞ்ச கிராம வைணவப் பெரியவர்களும் சரி... ஒரு குறைவும் வர விட்டதில்லை. பிரம்மோத்சவம், பவித்ரோத்சவம் என்று வருஷம் முழுக்க பெருமாளுக்கு இங்கே திருநாள்தான்.

   கடந்த 1998ல் மஹாசம்ப்ரோக்ஷணம் கண்ட இந்த ஆலயம், இந்த 2010ல் வரும் ஆவணி மாதத்தில் 12 ஆண்டுகளைக் கடந்து திரும்பவும் சம்ப்ரோக்ஷணம் காண உள்ளது. இது மிக விசேஷமான ஒரு தருணம். இந்த சம்ப்ரோக்ஷணம் அமைந்திருப்பதே லட்சக்கணக்கானவர்களின் கொடும் வினைகளை ஓய வைக்கத்தான்!

   இவ்வேளையில்  ராஜகோபுரத்தை புனருத்தாரணம் செய்து மடப்பள்ளி, ததியாராதன மண்டபம், வாகன மண்டபம் போன்றவற்றையும் செய்து முடிக்க கோயிலின் "சேரன்குளம் கைங்கர்ய சபா' தீர்மானித்து, அதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்த சேரன் குளத்து சீனிவாசனுக்கு என்று பிரத்யேக நில புலன்கள் ஏதுமில்லை. இவனது பக்தர்கள்தான் இவனது தனிப் பெரும் சொத்தாகும்.

  இவனிடம் அருட்கடன் பெற்றவர்கள் தாங்கள் பெற்றதில் நூற்றில் ஒரு பங்கை இவனுக்கு அளித்தாலும் கூட போதும்... இத்திருப்பணி வேகமாக முடிந்து சேரன் குளத்து ஸ்ரீனிவாசன் பேரருளாலே நம் வினைகள் அவ்வளவும் ஓயும்!

   அன்பர்கள் தாராளமாய் நிதி உதவி செய்யலாம். நிதிகளை அனுப்ப வேண்டிய முகவரி: "சேரன் குளம் கைங்கர்ய சபா', 3/647- வடக்கு மட விளாகம், சேரன் குளம்,

மன்னார்குடி தாலுக்கா-614016

தொலைபேசி எண்: 04367-251204.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com