நீதியரசருக்கு நிதி!
"பணக்காரக் கடவுள்' என்று திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளைப் பற்றி பேச்சுவாக்கில் கூறப்படுவது உண்டு. ஆனால் அதே பெயரைத் தாங்கியுள்ள ஒரு பெருமாளின் திருக்கோயில், மிகவும் சிதிலமடைந்து, ஆராதனை நடைபெறுவதற்கே


"பணக்காரக் கடவுள்' என்று திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளைப் பற்றி பேச்சுவாக்கில் கூறப்படுவது உண்டு. ஆனால் அதே பெயரைத் தாங்கியுள்ள ஒரு பெருமாளின் திருக்கோயில், மிகவும் சிதிலமடைந்து, ஆராதனை நடைபெறுவதற்கே சிரமமான சூழ்நிலையில் பரிதாப நிலையில் இருந்தது. தஞ்சை மாவட்டம், காகிதப் பட்டறை கிராமத்தில் இருக்கிறது இவ்வாலயம்.
கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள், பந்தநல்லூர் ஆகிய ஊர்களுக்கு இடையே-மண்ணியாற்று வடகரையில் அமைந்துள்ளது காகிதப்பட்டறை. இங்குதான் நாம் குறிப்பிட்டுள்ள அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இது மிகவும் தொன்மையானதாகும். முதலாம் ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார், இவ்வாலயத்தைப் புதுப்பித்ததாகக் கூறுகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் காகிதங்கள் இங்கு தயாரிக்கப்பட்டதால் இவ்வூர் "காகிதப் பட்டறை' என்ற பெயருடன் திகழ்கிறது. "திருவம்பநல்லூர்' என்பதே இத்தலத்தின் தொன்மைப் பெயராகும்.
இக்கோயிலில் மூலவர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சகிதமாய் புன்னகை வதனத்துடன் திகழ்கிறார். பத்மாவதி தாயாருக்கு தனி சந்நிதி.
இந்தப் பெருமாள் இந்த ஊரின் நீதியரசராகவும் விளங்குகின்றார். ஆம்! ஊரில் ஏற்படும் வழக்குகள், திருட்டு முதலியனவற்றை பெருமாள் சந்நிதியில் விசாரித்து நீதி வழங்குவார்கள். வழக்கில் பொய் சாட்சி சொன்னாலோ, பொய்த் தகவல்கள் கூறினாலோ, அல்லது வழக்கை விசாரிப்போர் ஒரு தலைப்பட்சமான நீதி வழங்கினாலோ அவர்கள் தாங்க முடியாத துயர் அடைவர்; அவர்களை பெருமாள் தண்டித்து விடுவார் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை!
இவ்வழக்கம் இன்றளவும் இவ்வாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு வியப்பான செய்தி. அதாவது ஆலயம் இடிந்த நிலையிலும் பெருமாள் சாந்நித்தியத்திற்கு என்றும் அழிவில்லை என்பதையே இது குறிக்கின்றது.
இவ்வூருக்கு அருகில் உள்ள காவனூர், செருகுடி, முள்ளங்குடி போன்ற கிராம மக்களுக்கும் இந்தப் பெருமாள்தான் கண் கண்ட தெய்வம்.
இவ்வாலயத்தில் 1956ல் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதற்குப் பிறகு தகுந்த பராமரிப்பு இல்லாததால் காலப் போக்கில் சிதிலமடைந்துவிட்டது. இவ்வூர் மக்களில் பலர் வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தமையால் நிலைமை இன்னும் மோசமானது. கட்டடங்களின் மேல் செடி, கொடிகள் ஆக்கிரமித்து, விரிசல்கள் ஏற்பட்டன. உற்சவ மூர்த்திகள் தகுந்த பாதுகாப்பு இல்லாததால் வேறு ஒரு ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. யார் செய்த புண்ணியத்தினாலோ ஒரு வேளை பூஜை நடத்தப்பட்டது.
இந்த ஆலயத்தை பழைய பொலிவுடன் திகழச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் பேராதரவுடன் "ஸ்ரீநிவாசப் பெருமாள் கைங்கர்ய சபா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆலயத் திருப்பணி முழு அளவில் நிறைவேற சுமார் ரூபாய் 25 லட்சம் வரை தேவை. எனினும் முக்கியத் திருப்பணிகளை மட்டும் முடித்து, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன் சென்ற வாரம், மே 2 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆலயத் திருப்பணி செய்வதால் ஒருவரின் 21 தலைமுறைகள் இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவதாக ஆன்றோர்கள் கூறுவர். இந்த ஊரை அல்லது இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும், மற்றும் இந்தப் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்களும், பிற திருமால் அடியார்களும் மீதமுள்ள திருப்பணிகளுக்குத் தாராளமாக நிதியுதவி அளித்து, அவை நிறைவேற உறுதுணையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்கொடைகளை காசோலை அல்லது அல்லது வரைவோலை மூலமாக "ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கைங்கர்ய சபா' என்ற பெயருக்கு, பந்தநல்லூரில் பெறும் விதமாக எடுக்க வேண்டும்.
நன்கொடை அனுப்புவதற்கான முகவரி :-
எஸ். ரமேஷ், 18/2, 14வது தெரு, ஜெய் நகர், அரும்பாக்கம்,
சென்னை-600 106.
தொலைபேசி : 9841275167/ 044-24750980 (அல்லது) ஏ. அன்பழகன், 357, மெயின் தெரு, காகிதப்பட்டறை, பந்தநல்லூர் (போஸ்ட்), பின்கோடு- 609807, தஞ்சாவூர் மாவட்டம். நீதியரசராக நிற்கும் திருமாலின் ஆலயத் திருப்பணிகள் முழுமை பெற நிதி வழங்கிப் புனிதமடைவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...