தெப்பத்தில் அப்பன்!

கோயில் இல்லா ஊரில் குடியிருந்தால், அருளற்ற ஒரு வாழ்க்கைக்கு நாம் ஆளாக வேண்டியிருக்கும். மாயா உலகம் இது... அருளோடு திகழ்பவர்களையே அவ்வப்போது ஆட்டிப் பார்க்கும் இந்த மாயை, அருளற்றவர்களை என்னதான் செய்யாத
தெப்பத்தில் அப்பன்!

கோயில் இல்லா ஊரில் குடியிருந்தால், அருளற்ற ஒரு வாழ்க்கைக்கு நாம் ஆளாக வேண்டியிருக்கும். மாயா உலகம் இது... அருளோடு திகழ்பவர்களையே அவ்வப்போது ஆட்டிப் பார்க்கும் இந்த மாயை, அருளற்றவர்களை என்னதான் செய்யாது?

இதை உணர்ந்தே சான்றோர்கள், ஊர்தோறும் ஆலயங்களை வடிவமைத்தனர். ஆனபோதிலும் நகரங்களின் வளர்ச்சியாலும், மானுடப் பெருக்கத்தாலும் இன்று புராதன ஆலயங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான தூரம் அதிகரித்துவிட்டது. இதைக் குறைத்துக் கொள்ள ஆங்காங்கே புதுப்புது ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன.

அவ்வகையில், தருமமிகு சென்னையில், மடிப்பாக்கத்தை ஒட்டியுள்ள புழுதிவாக்கம் ராம்நகரிலும் ஒரு ஆலயமானது பற்பல ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவானது.

ஆலயம் என்று வந்துவிட்டாலே அதனை அந்த இறைவன் மனிதர்களை பயன்படுத்தித்தானே கட்டிக் கொள்கிறான்? புழுதிவாக்கத்திலும் "ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் திருக்கோயிலும்' அவ்வாறே உருவானதுதான்!

அப்பகுதியில் வாழும் அன்பர்கள் அவனருளால் ஒன்று கூடினர். எல்லோருமாய் ஒன்று கூடினாலும் ஆலயம் என்று ஒன்றை எழுப்ப முதலில் அடிப்படையாக இடம் என்று ஒன்று வேண்டுமே?

வேறு ஒரு ஊரில் வாழும் அன்பர் ஒருவரின் கனவிலே, "நீ போய் இடத்தைக் கொடு' என்று கட்டளையிடுகிறான் அப்பெருமான்! அவரும் அவன் கட்டளையை நிறைவேற்ற ஓடோடி வந்து இடத்துக்கு வழி செய்கிறார்; பின்னர்தான் ஆலயமும் உருவானது.

தன் காலாலேயே உலகை அளந்த திரிவிக்ரமனான ஸ்ரீமன் நாராயணனின் அர்ச்சா ரூபங்கள் பலப்பல! அதில் பட்டாபிஷேக ராமன் கோலம், அலாதியானது. வெற்றிகளைக் குவிக்க எண்ணுபவர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி, அந்த ராமமூர்த்தி!

ராவண வதம் முடிந்த பின் அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் செய்து கொண்டான் ராமன். தர்மத்தை நிலைநாட்டிவிட்ட நிலையில் தர்ம ராஜாவாகத்தான் அரசனானான். அது ஒரு பரிபூரண நிலை. அந்த நிலை கொண்ட ஒரு ஆலயத்துக்கும் சான்னித்யம் மிகுதி. பக்கத்திலேயே ஒப்பிலியப்பனும் வந்து அருளாட்சி புரிய திருவுள்ளம் கொண்டதில், புழுதிவாக்கம் கோயிலில் ஒன்றுக்கு இரண்டாய் திருச்சந்நிதிகள்! இவற்றோடு ஸ்ரீவைஷ்ணவ ஆகமப்படி அனுமன், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் உருவாகி, இன்று ஆலயம் பலருக்கும்  அருள் கேந்திரமாக விளங்கி வருகிறது.

ஒருமுறை வருபவரை நூறு முறை வரும்படி செய்கிறது எம்பெருமானின் தேஜஸ்!

உப்பில்லாத பெருமான் - அந்த ஒப்பில்லாத பெருமான்! கடலில் விளைவதுதான் உப்பு... அறு சுவைக்கே அடிப்படையானதும் உப்புதான். இதை நாம் துறக்கும்போது உண்ணும் சுவைகளைப் பெரிதாகக் கருதாது, எண்ணும் சுவைக்குரிய அந்தத் திருமாலே முற்றானவன், முழு முதலானவன் என்றாகிறது. ஆகையால்தான் ஒப்பிலியப்பன் சந்நிதி பிரசாதங்களிலும் உப்புக்கு மறுப்பு கூறப்படுகிறது. அதை நாம் ஏற்கும்போது நமக்கும் இந்த மாய உலகின் எந்தச் சுவையும் பெரிதில்லை, அவனே பெரிய சுவை என்னும் ஞானம் படிப்படியாகச் சித்திக்கிறது.

புலன்களை வென்று ஞானம் எய்தினால் முக்தி. ராம நாம ஜபத்தால் புலன்கள் தாமே அடங்கும். அந்த ராமனாக வந்த ஒப்பிலியப்பன் திருவருளால் ஞானமும் கைகூடும். இந்த இரண்டுக்கும் வித்தான இந்த ஆலயம், இன்னமும் வளர்ச்சிகளைக் காண வேண்டியுள்ளது. இப்போது ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது.  

இத்திருக்கோயிலில் வைபவ உற்சவங்களுக்கும் குறைவில்லை. பஞ்சகருட சேவை, தெப்போத்சவம் என்று ஆலய நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

"தெப்பத்து பெருமான் திருப்பத்தைத் தருவான்' என்பதும் சான்றோர் வாக்கு. இன்று மாலை (18.2.11) இப்பெருமான் தெப்போத்சவம் காண இருக்கிறான். மடிப்பாக்கம் ஏரிதான் தெப்போத்சவ களம். வாழ்வில் திருப்பம் வேண்டும் என்று வேண்டுபவர்கள் எல்லாம் திரண்டு வருக.

"சொல்லாய் திருமார்வா! உனக்காகித் தொண்டுபட்ட

நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பி

மல்லா! குடமாடீ! மதுசூதனே! உலகில்

சொல்லா நல்லிசையாய்! திருவிண்ணகரானே'

என்று ஆழ்வார்கள் பாடித் துதித்த பெருமானை நாமும் பாடித் துதிப்போம். நாராயண! நாராயண!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com