இறைவன் கவனித்துக் கொண்டிக்கிறான்!

மனிதன் நேர்மையாகவும் நீதியோடும் வாழ வேண்டும். குறிப்பாக, பொறுப்பான பதவிகளில் இருப்போர், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி நிலவும். மனிதன் நேர்மை தவறி, நீதி வழுவி
இறைவன் கவனித்துக் கொண்டிக்கிறான்!
Updated on
2 min read

மனிதன் நேர்மையாகவும் நீதியோடும் வாழ வேண்டும். குறிப்பாக, பொறுப்பான பதவிகளில் இருப்போர், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி நிலவும். மனிதன் நேர்மை தவறி, நீதி வழுவினால், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாவான்;  போராட்டங்கள் வெடிக்கும்;  மக்களின் அமைதி கெடும். இதை நாம் வரலாற்றில் அன்றிலிருந்து இன்று வரை பார்த்து வருகிறோம்.

பொது வாழ்வில் ஈடுபடும் நாட்டுத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் நேர்மை தவறக் கூடாது. அதனால் நாட்டில் குழப்பங்களும் போராட்டங்களும் தோன்றும். நாட்டு மக்கள், ஆள்வோரை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை ஆள்வோர் உணர வேண்டும். "நாட்டு மக்கள் கவனிக்காவிட்டாலும் இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான்' என்ற மனசாட்சியோடு பொதுவாழ்வில் ஈடுபடுவோர் நடந்து கொள்ள வேண்டும்.

""அறிந்து கொள்வீர்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள். உங்களுள் ஒவ்வொருவரும் தம் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் மக்களுக்குப் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண் தம் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடும்பம் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்திற்கும் அவர் குழந்தைகளுக்கும் பொறுப்பாளர் ஆவாள். ஓர் அடிமை தம் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பு ஆவான். அவனும் விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்வீர்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! உங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்'' (புகாரீ, முஸ்லிம்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வுலகில் வாழும் அனைவருமே, மறுமையில் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவ்வளவு ஏன்? அவர்களது பொறுப்பில் தவறிழைக்கும் போது இவ்வுலகிலேயே அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களது வேலை பறிக்கப்படும். அவர்களது பதவிகள் பறிபோகும். எனவே ஒவ்வொருவரும் தமது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு கடமையாற்றும்போது பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பொதுமக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பொதுச் சொத்துக்களைக் கவனமாகக் கையாள வேண்டும். அதில் கையாடல், மோசடி செய்வது கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ""நாடாளும் பொறுப்பை இறைவன் ஓர் அடியாருக்குக் கொடுக்க, அவர் நாட்டு மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்துவிட்டால் அவருக்கு இறைவன் சொர்க்கத்தைத்  தடை செய்து விடுகிறான்'' (புகாரி, முஸ்லிம்).     

மற்றொரு நபிமொழி கூறுவதைக் கேளுங்கள். ""இறைத் தூதர் (ஸல்) அவர்கள், எங்களிடத்தில் (சொற்பொழிவு மேடையில்) நின்று பொதுச் சொத்துக்களில் மோசடி செய்வது குறித்து எச்சரித்தார்கள். அப்போது, மறுமை நாளில், கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தை தம் தோளில் சுமந்தவாறே ஒருவர் வந்து, "என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலற வேண்டாம். ஏனெனில் அன்று உமக்கு எதையும் செய்ய என்னால் முடியாது (உலகில் பொதுச் சொத்தில் ஒட்டகம் ஒன்றை மோசடி செய்தவரே அவ்வாறு வருவார்). இது குறித்து நான் அன்றே (உலகில் உள்ளபோதே) சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன். இந்த ஒட்டகம் போன்றே குதிரையை சுமந்தவாறு மறுமையில் வந்து என்னிடம் உதவி கோர வேண்டாம்; ஆடு ஒன்றை சுமந்தவாறு வர வேண்டாம்; அசைந்தாடும் துணிமணிகளைச சுமந்தவாறு வந்து என்னிடம் உதவி கோர வேண்டாம்; பொன்னையும் வெள்ளியையும் தம் கழுத்தில் சுமந்தவாறு வந்து உதவி கோர வேண்டாம்' என்று குறிப்பிடுகிறார்கள்'' (புகாரி, முஸ்லிம்).

பொதுச் சொத்தில் கையாடல் செய்துவிட்டால் அவர் கையாடல் செய்த துணிமணிகள், குதிரை, ஆடு, ஒட்டகம், நிலம் போன்றவற்றை அவர் சுமந்தவாறு மறுமையில் வருவார் என இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது. எனவே பொதுச் சொத்தைக் கையாள்வோர் கவனமாக நேர்மை, நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி எத்தனைக் கோடி அளவுக்கு மோசடி, ஊழல் செய்தார்களோ, அந்த அளவுக்கு மறுமை நாளில் கொடி ஒன்று அவரது முதுகில் ஏற்றப்படும். அதன் மூலம் அவர் செய்த மோசடி மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படும்.

நபி(ஸல்) அவர்கள் அதை இப்படிக் கூறுகிறார். ""மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று ஏற்றப்படும். அவனது மோசடி அளவுக்கு அது உயரமாக ஏற்றப்படும். அறிவீர். பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று அதில் மோசடி செய்தவனைவிட மிகப் பெரும் மோசடிக்காரன் வேறெவனுமில்லை'' (புகாரீ 31 86, முஸ்லிம் 35 79).

  எனவே பொது வாழ்வில் நேர்மையைக் கடைப் பிடிப்போம்! ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com