நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தவறாமல் வாக்களிப்போம்

அதிக மக்கள் நியாயமாக வாக்களிப்பதன்மூலம் இந்த நியாயமில்லாத, குறைந்த வாக்குகளின் செல்வாக்கு அடிபட்டுப் போகும்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 1:21 am

திருப்பூர் கிருஷ்ணன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதுபோல் தேர்தலுக்கும் முன்பாக இப்போதே மணி ஓசை கேட்கத் தொடங்கிவிட்டது.

மணி ஓசை என்ற சொற்றொடரின் முதல் இரு எழுத்துகளை ஆங்கிலச் சொல்லாகக் கொண்டும் புரிந்துகொள்ளலாம்!ஜனநாயகம் அல்ல, எல்லாமே பண நாயகம்தான். எங்கும் பணம்- எதிலும் பணம். ஏழை மக்களை ஈர்க்கும் ஆசை வார்த்தைகள் மேடைகள்தோறும் கொட்டப்படுகின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குக்குப் பணம் கொடுத்து கற்பூரம் அணைத்து வாக்குறுதி பெற்றுக்கொள்ளும் முறைகேடும் அரங்கேறத் தொடங்கும்.

தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் கண்காணித்தாலும், ரகசியமாக நடைபெறும் இந்தக் குற்றத்தை முழுமையாகத் தடுக்க முடியும் என்று தோன்றவில்லை. "திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விவகாரத்துக்கும் பொருந்தும்.

பாவம் ஏழை எளியவர்கள் என்னதான் செய்வார்கள்? அன்றாடத் தேவைக்கு கொஞ்ச நாள்களையாவது சமாளிக்கும் வகையில் பணம் கிடைத்தால், வேண்டாம் என்று சொல்ல அவர்கள் என்ன முற்றும் துறந்த முனிவர்களா?; அவர்கள் நிலை பரிதாபகரமானது.

"ஜனநாயகத்தில் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதைப் போன்ற பாவச் செயல் வேறில்லை' என்பதை அவர்கள் உணர்வதில்லை. பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதால் உண்மையான ஜனநாயகம் அடிபட்டுப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படித் தெரியவிடாமல் அவர்களின் அப்போதைய பொருளாதாரத் தேவை தடுக்கிறது.

லஞ்சம் பெற்ற பிறகு திடீரென ஒரு தார்மிக உணர்வு அவர்களை ஆட்கொள்வதுதான் வியப்பு. வாக்குக்குப் பணம் கொடுப்பதும், வாக்களிக்கப் பணம் பெறுவதும் குற்றச் செயல்கள் என்பதை உணராத அவர்கள், பணம் வாங்கிவிட்டதால் பணம் கொடுத்தவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற (அ)நியாய உணர்ச்சிக்கு மட்டும் ஆட்பட்டு விடுகிறார்கள். என்னே நமது அற உணர்வு!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்சிகள் பணம் கொடுத்து வாக்குப் பெறுவது சாத்தியமல்ல. ஆனால், கொஞ்சம் மக்களை இப்படிக் கவர்ந்து வாக்கைத் திருட முடியும் என்பது உண்மைதான்.

இப்படித் தவறான வழியில் கிடைக்கக் கூடிய வாக்குகளின் செல்வாக்கை எப்படிக் குறைப்பது? அதிக மக்கள் நியாயமாக வாக்களிப்பதன்மூலம் இந்த நியாயமில்லாத, குறைந்த வாக்குகளின் செல்வாக்கு அடிபட்டுப் போகும்.

60 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றால், பணம் கொடுத்துப் பெற்ற வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கப் பயன்படலாம். ஆனால், வாக்குப்பதிவு 90 சதவீதத்தை எட்டுமானால், இத்தகைய மோசடிகளைத் தாண்டி அதிக மக்களின் உண்மையான எண்ணப்படி தேர்தல் முடிவு அமைந்து ஜனநாயகம் தழைக்கும்.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் பலவிதமான கண்ணோட்டங்களில் கூட்டணிகளை அமைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. இந்தக் கூட்டணி வியூகத்தின் பின்னணியில் கொள்கைப் பிடிப்பு எதுவும் கிடையாது. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதே கட்சிகளின் இலக்கு.

மக்கள் ஜாதி உணர்விலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதைக் கட்சிகள் நன்கு உணர்ந்திருக்கின்றன. அதனால்தான் எந்தப் பிராந்தியத்தில் எந்த ஜாதியினரின் எண்ணிக்கை அதிகமோ அங்கு அந்த ஜாதி வேட்பாளரை நிற்க வைக்கின்றன.

குறைந்தபட்சம் தேர்தல் நேரத்திலாவது ஜாதி உணர்வை முற்றிலுமாக விட்டொழிக்க வேண்டும் என்பதை மக்கள் என்று உணர்வார்கள் எனத் தெரியவில்லை.

தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் இரண்டிலும் மிகச் சிறந்த தலைவர்களாக இன்றும் போற்றப்படுபவர்களும் லஞ்ச ஊழலற்று வாழ்ந்தவர்களுமான கக்கன், காமராஜ், மூதறிஞர் ராஜாஜி மூவருமே வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தான். எனவே, தனிமனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுக்கத்தையும் ஜாதி தீர்மானிப்பதில்லை. அவரவரின் தனிப்பட்ட பண்பே தீர்மானிக்கிறது.

நம் சொந்த ஜாதியினரில், கலப்புத் திருமணம் செய்துகொண்ட சிலரைத் தவிர, மற்ற எல்லோருமே ஒரே ஜாதியினர்தான். நம் உறவினர் அனைவருமே எந்தப் பணியில் எங்கு வேலை செய்தாலும் தங்கள் ஜாதி காரணமாக லஞ்சமே வாங்காதவர்கள் என நாம் உத்தரவாதம் தர முடியுமா?

எல்லா ஜாதியினரிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்வதற்கு நல்லவர்கள் தேவை. நல்லவர்களை நம் ஜாதியில் மட்டுமே தேடுவது சரிவராது.

அவர்கள் எந்த ஜாதியினர் என்றாலும் நல்லவர்களாக இருக்கிறார்களா என்பதே முக்கியம்; நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் எல்லா ஜாதியினரும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

பணம், ஜாதி உணர்வு இவற்றோடு கள்ள வாக்குகளும் தவறான நபர் வெற்றி பெற உதவுகின்றன. இப்போது வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இருப்பதால் கள்ள வாக்குக்கான வாய்ப்பு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடையில் இருப்பதுபோல் ரேகையைச் சரிபார்ப்பது, வாக்களித்த பிறகு நம் வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி வருவது போன்ற நடைமுறைகள் எதிர்காலத்தில் வருமானால் கள்ள வாக்குகளின் எண்ணிக்கை மேலும் குறையலாம்.ஆனால் கள்ள வாக்குகளின் எண்ணிக்கையை இப்போதே குறைக்க நாம் மேற்கொள்ளக் கூடிய ஒரு வழி இருக்கிறது. தேர்தல் நாளில் இயன்றவரை முற்பகலிலேயே வாக்களித்துவிட வேண்டும்.

யார் யார் வாக்களிக்கவில்லை என்பதை ரகசியமாகத் தெரிந்துகொண்டு கள்ள வாக்கு செலுத்த முயல்பவர்கள் பிற்பகலில்தான் அத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்.

முற்பகலிலேயே அதிகபட்ச வாக்குகள் பதிவாகி விட்டால் கள்ள வாக்குகளின் எண்ணிக்கை குறையத்தானே செய்யும்? வாக்களித்தவர்களின் பெயரில் மீண்டும் வாக்களிக்க இயலாதல்லவா?

தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ள காலம் இது. பல கட்சிகள் சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை வாரிவாரி வழங்குகின்றன. இலவசங்கள் குறித்த அறிவிப்புகளுக்கும் பஞ்சமே இல்லை.

எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தேர்தலில் அது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப் படுகின்றனவா என்பதைத் தேர்தல் ஆணையம் கண்காணிக்கப் போவதில்லை. தேர்தல் நடத்துவதுடன் அதன் கடமை முடிந்துவிடுகிறது.

நடிகர் சந்திரபாபுவின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது. "மேடையேறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு; கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு.'

தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பி வாக்களிப்பதில் அர்த்தமே இல்லை. வெற்றி பெற்றபிறகு தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்பதற்கு வெற்றி பெற்றவர்கள் காரணம் சொல்லத் தொடங்குவார்கள்.

எனவே, தேர்தல்கால வாக்குறுதிகளில் மயங்காமல் வேட்பாளர் நேர்மையானவரா என்பதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

நாம் நல்லாட்சி வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறோம். அதை எந்தக் கட்சி தந்தாலும் நமக்கென்ன? நமக்கு லஞ்ச ஊழலற்ற நல்லாட்சி கிடைத்தால் போதுமானது.ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்றவரே ஆட்சி அமைக்கப் போகிறார். அவர் யார் என்பது இப்போது விடை தெரியாத கேள்வி. தேர்தல் முடிவு வெளியாகும்போது அதற்கு விடை கிடைத்துவிடும்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! ஆனால், மக்களின் தீர்ப்பு மக்கள் எண்ணப்படி அமைய வேண்டுமானால் குறைந்தது 90 சதவீதமாவது வாக்குப் பதிவு இருக்க வேண்டும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.

சோம்பேறித்தனம் இல்லாமல் எல்லோரும் வாக்குச் சாவடிக்குப் போய் முற்பகலிலேயே வாக்களித்துவிட வேண்டும். குறைவான மக்கள் வாக்களித்து நடைபெறும் தேர்தலில் எப்படிப்பட்ட முடிவு வந்தாலும், அந்த முடிவை அனைத்து மக்களின் முடிவாகக் கொள்ள முடியாது.

வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்காத நபர்களுக்கு நல்லாட்சியைப் பெற என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் நல்லாட்சி குறித்துப் புலம்புவதில்தான் என்ன பொருள் இருக்கிறது?

எந்த முடிவு வந்தாலும் அதை ஆதரித்தோ, எதிர்த்தோ நாம் வாக்களித்திருக்கிறோம் என்கிற பெருமிதம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் அல்லவா? வாக்களிப்பது நம் உரிமை, அந்த உரிமையை நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

அதோடு வாக்குச் சாவடிக்குச் சென்று நம் மனசாட்சிப்படி வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, நம் ஜனநாயகக் கடமையும்கூட. இதையும் நாம் உணர வேண்டியது அவசியம். கடமையைச் செய்யாமல் தவிர்த்துவிட்டு, நல்லாட்சி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பொருளில்லை.

அவரவர் விரும்பும் கட்சிக்கு, விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அது அவரவர் சுதந்திரம். ஆனால், கட்டாயம் எல்லோரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பது முக்கியம்.

அனைவரும் வாக்களித்தால்தான் நடக்கவிருக்கும் தேர்தலில் பணச் செல்வாக்கு, ஜாதி உணர்வின் செல்வாக்கு, கள்ள வாக்கின் செல்வாக்கு, அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளின் செல்வாக்கு போன்றவை குறைந்து உண்மையான ஜனநாயகம் தழைக்கும். ஜனநாயகம் தழைத்தால்தான் நல்லாட்சி மலரும்.

ஆகையால் ஓர் உறுதி ஏற்போம்; அனைவரும் தவறாமல் கட்டாயம் வாக்களிப்போம்!

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.