அன்பே கடவுள்!
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இரு முக்கியமான மறையுண்மைகளில் அடக்கிவிடலாம். அவை இறையன்பு, பிறரன்பு என்பனவாகும். அன்பைப் பற்றி பைபிளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ""என் உடமையையெல்லாம் நான் வாரி வழங்கினாலும்


இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இரு முக்கியமான மறையுண்மைகளில் அடக்கிவிடலாம். அவை இறையன்பு, பிறரன்பு என்பனவாகும். அன்பைப் பற்றி பைபிளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ""என் உடமையையெல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பு பொறுமையுள்ளது. நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது; அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது; அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு எதையும் பொறுத்துக் கொள்ளும்'' 1 கொரிந்தியர் (13:3-7).
அன்பே கடவுள், கடவுளே அன்பு என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் திருவுருவப் படமானது இதயம் வெளிப்படையாகத் தெரியுமாறு வரையப்படுகிறது. இயேசுவின் திரு இருதயப் படங்கள் இல்லாத கிறிஸ்துவ வீடுகளே இல்லை எனலாம். ஜுன் மாதங்களில் இந்த திரு இருதயப் படங்களை ஜெபிக்குமாறு குருக்கள் வீடுகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இயேசுநாதர் மரித்த நாளான புனித வெள்ளியன்று தேவாலயங்களில் இயேசுவின் அன்பை நினைவு கூறும் விதமாக சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
""என்னுடைய இருதயப் படம் ஸ்தாபிக்கப்பட்டு, வணங்கப்பட்டு வரும் வீடுகளில் உள்ளவர்கள் ஒரு நாளும் அவலமாகச் சாகமாட்டார்கள்'' என்று இயேசு, மார்கரீத் என்னும் புனிதைக்கு வாக்குக் கொடுத்துள்ளார்.
சென்னையில் எழும்பூரிலுள்ள திரு இருதய ஆண்டவரது கோயிலும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் கோயிலும் பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றன. இக்கோயில்களில் மாதத்தின் ஒவ்வொரு முதல் வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பூஜை மற்றும் ஆராதனைக்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதைக் காணலாம்.
எண்ணற்ற கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இன்று சமூக சேவை, மருத்துவப் பணி, ஆதரவற்றோர் பராமரிப்பு போன்ற அன்புப் பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றன என்றால் அதற்கு மூல காரணம் இயேசு கிறிஸ்து போதித்த அன்பு என்ற தத்துவமே.
""அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு'' என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது. எனவே அன்பாய் வாழ்வோம். அயலார்க்கு உதவுவோம். மோட்ச பேரின்பம் பெறுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...