ஓணதீபம்: வையாவூர் திருத்தலத்தில், மாதாமாதம் திருவோண நட்சத்திரங்களில் ஓணதீபம் ஏற்றுகின்றனர். இதற்கு ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள். எலி ஒன்று... சிவாலயம் ஒன்றில் வசித்து வந்தது. ஒருமுறை, சந்நிதியில் இருந்த விளக்கு எண்ணெய் குறைந்து, அணையும் நிலையில் இருந்தது. அப்போது, விளக்கில் தற்செயலாக அந்த எலி குதித்தது. அதனால், அந்த வேகத்தில் திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. இந்தப் புண்ணியத்தால், அந்த எலியே மறு பிறவியில் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்ததாம். பின்னர், மகாபலி திருவோண நட்சத்திரத்தில் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டார். அதை நினைவூட்டும் வண்ணம், இங்கே திருவோண நட்சத்திரங்களில் அகண்ட தீபம் ஏற்றுகின்றனர். அன்றைய தினத்தன்று காலையில் ஸ்ரீனிவாசர் யாக மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அப்போது திருமஞ்சனம், திருக்கல்யாண வைபவங்களும் நடக்கின்றன. பெருமாள் சந்நிதியில் அகண்ட தீபத்தில் நெய் விளக்கேற்றி சுவாமி பாதத்தில் வைத்து ஆராதிக்கின்றனர். இந்த தீப தரிசனம் மிகவும் சிறப்பானது. திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் தீபத்துக்கு நெய் கொடுத்து வேண்டிக்கொண்டால் அந்த தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், புரட்டாசி மற்றும் ஆவணி திருவோணம் இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசித் திருவோணத்தில், ஏழு மலைகள் போல அன்ன நைவேத்யம் படைத்து, ஏழு நெய் தீபம், ஏழு வகையான பட்சணங்கள், காய்கறிகள் வைத்து பூஜிக்கின்றனர். இத்தலம் திருவோண நட்சத்திரத்துக்கு பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.