விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பலன்தரும் பரிகாரத் தலம்: ஜன்ம வினை நீக்கும் ஜகந்நாதர்

அருள்மிகு ஆதிஜகந்நாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி தர்ப்பைப் புல் நிரம்பிய காடு. அருகே கடல். அந்தக் காட்டில் தங்கள் சிந்தையை ஸ்ரீமந் நாராயணனிடம் வைத்து கடும் தவம் செய்தனர் முனிவர் மூவர். கால

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:29 pm

மயில் வாகனன்

அருள்மிகு ஆதிஜகந்நாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி

தர்ப்பைப் புல் நிரம்பிய காடு. அருகே கடல். அந்தக் காட்டில் தங்கள் சிந்தையை ஸ்ரீமந் நாராயணனிடம் வைத்து கடும் தவம் செய்தனர் முனிவர் மூவர். காலவ, கன்வ, புல்லவ மகரிஷிகளான அந்த மூவரின் கடுந் தவத்தில் மகிழ்ந்த பெருமான் அவர்கள் முன்னே ஓர் அரச மரமாகத் தோன்றினார். ஆனால் அவர்களுக்கோ அதில் திருப்தி ஏற்படவில்லை. தாங்கள் விரும்பும் காப்பாளன், லோக நாயகனாகவே காட்சிதர வேண்டும் என பிரார்த்தித்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய பகவான், ஆதிஜகந்நாதனாகக் காட்சி அளித்தார். அந்தத் தலமே இன்று நாம் காணும் திருப்புல்லாணி திருத்தலம்.

ஜகந்நாதப் பெருமாள், புவனேஸ்வர்(புரி) தலத்தில் உத்தர ஜகந்நாதனாகவும், திருமழிசை தலத்தில் மத்திய ஜகந்நாதனாகவும், திருப்புல்லாணியில் தட்சிண ஜகந்நாதனாகவும் காட்சி தருகிறார் என்பர். அந்த அளவில் மிகச் சிறப்பு வாய்ந்தது மட்டுமன்றி, ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றென்பதால் புராதன புண்ணியத் தலமாகவும் திகழ்கிறது இந்தத் தலம்.

இது ராமாயண காலத் தொடர்பு கொண்டது. இலங்கையில் சிறைப்பட்ட சீதையை மீட்பதற்காக, ராமபிரான் தம்பி லக்குவனுடன் இங்கே வந்தார். இடையில் கடல் விரிந்திருந்தது. தமக்கு வழிவிடுமாறு கடல் அரசனிடம் வேண்டுகோள் விடுத்தார் ஸ்ரீராமர். கடலரசன் செவிமடுக்கவில்லை. மூன்று தினங்கள் இவ்வாறு ராமபிரான் காத்திருந்தார். அப்போது, தன் தமையனுக்காக தர்ப்பைப் புல்லில் படுக்கை அமைத்து அளித்தான் லக்குவன்.

இதனை நினைவூட்டும் வகையில் ஆதிசேஷன் மீது தர்ப்பைப் புல் பாய் விரித்தபடி, ராமர் இங்கே சயனக் கோலம் கொண்டு தர்ப்ப சயன ராமராகக் காட்சி தருகிறார். லக்குவன் ஆதிசேஷன் அம்சம் என்பதால், ராமனுக்கு படுக்கையாக ஆதிசேஷ உருவில் உள்ளார். சீதையை மீட்கப் புறப்பட்ட கோலம் என்பதால், இங்கே சீதை அருகினில் இல்லை. அனுமன் மட்டும் உடன் உள்ளார். கருவறை சுவரில் சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோர் பாலம் அமைக்க ஆலோசனை செய்த கோலத்தில் உள்ளனர்.

பாலம் கட்ட அனுமதி கேட்டும் முன்னே வராததால், சினமுற்ற ஸ்ரீராமன் கடலரசனின் மீது அம்பு தொடுக்க முயன்றார். இதனால் அச்சம் மிகக் கொண்ட கடலரசன், ராமன் முன் தோன்றி, சரண் புகுந்தான். இதனை நினைவூட்டும் வண்ணம், தர்ப்ப சயன ராமர் சந்நிதி முன் கடலரசன் தம்பதி சகிதனாக முன் மண்டபத்தில் காட்சி தருகிறான். அருகே, வீடணன். மேலும், ராமனின் படையை உளவு பார்க்க ராவணன் அனுப்பி வைத்த அரக்கர்கள் இருவர், ராமனைக் கண்டதும் திருவடி பணிந்தனர். அவர்கள் இருவரும் ராமனின் திருவடி அருகே வணங்கியபடி காட்சி தருகின்றனர்.

திருப்புல்லாணியில் இருந்து, சுமார் 4 கி.மீ., தொலைவில் உள்ளது சேதுக்கரை. இங்கிருந்துதான் இலங்கை செல்ல கடலில் ராமர் பாலம் அமைத்தார். இங்கே அனுமனுக்கு ஒரு கோயில் உள்ளது. இலங்கையை நோக்கி காட்சி தருகிறார் அனுமன். இங்குள்ள ரத்னாகர தீர்த்தம் எனப்படும் கடற்கரையில் சித்திரை, பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். அமாவாசை நாட்களில் இங்கே மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.



தசரதன் மூல மந்திரம் கேட்கப் பெற்ற தலம்:
தனக்கு குழந்தைகள் இல்லையே என்று கவலைப்பட்ட தசரதச் சக்ரவர்த்தி, ரிஷிகளின் ஆலோசனையின் பேரில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தயாரானார். அந்த யாகத்துக்கான மூலமந்திரத்தை தசரதன் உபதேசம் பெற்ற இடம் இந்தத் தலமே. எனவே, இங்கே ஆதி ஜகந்நாதப் பெருமானை வழிபட்டால் புத்திர பாக்கியத்துக்கு நிச்சயம் வழி செய்வார் என்பது நம்பிக்கை. அதற்கு தம்பதியர், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடி, கோயிலுக்கு வந்து, நாகர் சிலைக்கு வழிபாடு செய்யவேண்டும். ஒரு நாள் முழுதும் உபவாசம் இருந்து, நீராட வேண்டும். அன்றிரவு ஆலயத்தில் தங்கி, மறுநாள் காலை முறைப்படி நாகபிரதிஷ்டை செய்து, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை அருந்த வேண்டும். இவ்வாறு தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இந்தக் கோயிலில் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஆலயத்தில் நாம் சந்நிதியை வலம் வரும்போது, முனிவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணன் முதலில் காட்சி தந்த அரசமரத்தைக் காணலாம். இதுதான் இங்கே தல விருட்சம்.

ஆதிஜெகந்நாதர்(அமர்ந்த கோலம்), தர்ப்ப சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபி ராமர்(நின்ற கோலம்) என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

சீதையை மீட்க அருளும்படி ஜகந்நாதரிடம் வேண்டினார் ஸ்ரீராமர். அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார் ஸ்ரீஜகந்நாதர். அந்த பாணத்தைப் பிரயோகித்து ராவணனை அழித்தார் ராமபிரான். எனவே, எந்தச் செயலையும் துவங்கும் முன், ஆதி ஜகந்நாதரை வேண்டினால் அது வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

இவ்வளவில், காசி - ராமேஸ்வர தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள் சேதுக்கரையில் தீர்த்தமாடி, யாத்திரையை முடிக்கின்றனர். இந்தத் தலம் தீர்த்த யாத்திரைக்கென்றே சிறப்புப் பெற்ற தலம்.

ஆதிஜகந்நாதருக்கு பங்குனியிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம். அப்போது இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். மேலும், வைகுண்ட ஏகாதசி இங்கே மிகப் பிரபலம். கோயிலில் உள்ள ஸ்ரீசந்தான கிருஷ்ண ஸ்வாமிக்கு கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம் சிறப்பு.

குழந்தை வரம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர், நாகதோஷம் நீக்கும் நாகப் பிரதிஷ்டை, முன்ஜன்ம வினை அகல சேதுதீர்த்தமாடல், கிரக தோஷம் நீங்க, திருமணத்தடை அகல உற்ஸவப் பெருமான் ஸ்ரீகல்யாண ஜகந்நாதரிடம் வேண்டுதல் என பக்தர்களின் அனைத்து குறைகளையும் தீர்த்து அருள்கிறார் பரமன்.



இருப்பிடம்:
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு. ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் செல்லலாம். பேருந்து வசதி உண்டு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 - 12.30 வரை, மாலை 3.30 -8 .30வரை.

தகவலுக்கு: 04567- 254527

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.