ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பலன்தரும் பரிகாரத் தலம்: மும்மூர்த்திகள் அருளும் கிடைக்கும்!

அதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே "யார் பலசாலி?' என்று போட்டி. இதை எப்படித் தீர்மானிப்பது? கயிலாயம் உள்ள இமய மலையை அடுத்து மேரு மலைதான் அப்போது மிகப் பெரும் மலையாகத் திகழ்ந்தது. எனவே மேரு மலையையே

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:11 pm

மயில் வாகனன்

அதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே "யார் பலசாலி?' என்று போட்டி. இதை எப்படித் தீர்மானிப்பது? கயிலாயம் உள்ள இமய மலையை அடுத்து மேரு மலைதான் அப்போது மிகப் பெரும் மலையாகத் திகழ்ந்தது. எனவே மேரு மலையையே தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான கருவியாக பயன்படுத்த இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, ஆதிசேஷன் தன் நீண்ட உடலால் மேருமலையை அணைத்துப் பாதுகாத்தபடி கிடக்க, வாயு தன் பலங்கொண்ட மட்டும் காற்றை வீசச் செய்து, மேரு மலையை அசைக்கத் தொடங்கினான். மேருமலை வாயுவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதன் ஒரு பகுதி பெயர்ந்து சிதறி ஏழு துண்டுகளாக ஏழு இடங்களில் விழுந்தது. ஒவ்வொரு துண்டும் ஒரு சுயம்பு லிங்கமாக உருமாறியது. அவ்வாறு ரத்தின லிங்கமாக விழுந்த இடம் "கொடுமுடித் தலம்'.

மேலும் அப்போது, ஆதிசேஷனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்களும் பெயர்ந்து விழுந்தனவாம். இவற்றில் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், மரகதம் ஈங்கோய்மலையிலும், நீலக்கல் பொதிகையிலும், மாணிக்கம் வாட்போக்கியிலும், வைரம் கொடுமுடியிலும் விழுந்ததாக புராணம் கூறுகிறது. எனவே இங்கே இறைவன் வைரக் கல்லால் ஆன லிங்கமாக இருந்துள்ளார். மேலும், வாயு மற்றும் ஆதிசேஷன் மூலம் வந்த லிங்கம் என்பதால், இந்தத் தலம் நாக தோஷம் நீக்கும் தலமாகத் திகழ்கிறது.

இன்னொரு சிறப்பு, இந்தத் தலம் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு சிவத்தலங்கள் 7ல், 6வது தலமாகத் திகழ்வதுதான். திருப்பாண்டிக்கொடுமுடி என்று பழங்காலத்தில் அழைக்கப் பட்ட தலம். இந்தத் தலத்தில் கொடுமுடிநாதர், வடிவுடையம்மை, வீரநாராயணப் பெருமாள் மற்றும் தாயார் சந்நிதிகள் உள்ளன. இந்த சந்நிதிகளுக்குச் செல்ல மூன்று வாயில்கள் உள்ளன. மிகப் பரந்து விரிந்த கோவில்.

குஞ்சிதபாத நடராஜர், தன் இரு பாதங்களையும் தரையில் ஊன்றியுள்ளார். இங்கே சூரியனின் கிரணங்கள் பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் நான்கு நாட்கள், சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளில் பட்டு ஒளிரச் செய்கிறது. இங்கே பிரம்மனும், திருமாலும் கோயில் கொண்டுள்ளதால், "திரிமூர்த்தி கோயில்' எனப்படுகிறது.

நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாசல் வழியாகச் சென்றால் கொடுமுடிநாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாசல் வழியாக வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.

குட்டையான சுயம்பு லிங்கமாகத் திகழ்கிறார் கொடுமுடிநாதர். லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களைக் காணலாம். அகத்தியர் இங்கே சிவபெருமானை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் இவை என்கின்றனர். மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம். மகுடேஸ்வரர், மலை கொளுந்தீஸ்வரர் என்றும், செüந்தரநாயகி, வடிவுடைநாயகி என்றும் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் திருநாமங்கள். சுயம்பு லிங்கமாக உள்ள மகுடேஸ்வரர் பாடகர்களுக்கு நல்ல குரல் வளத்தை அருள்கிறார் என்றும், அதற்கு கொடுமுடி கோகிலம் எனப்பட்ட சுந்தராம்பாள் ஓர் உதாரணம் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

காவிரியை விரித்து நிலத்தில் பாயச் செய்த அகத்தியர், கீழ்த் திக்கில் இருந்த உழுவோரின் நலன் காக்க, இங்கிருந்து காவிரியை கிழக்கு திசையாக ஓடும்படி கட்டளை இட்டதாக நம்பப்படுகிறது. எனவே தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி, இந்தத் தலத்தில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக் கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். இங்கே விநாயகர், காவிரி கண்ட விநாயகர் எனப்படுகிறார்.

மூன்று முக பிரம்மா: இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். நம் தலை எழுத்தை மாற்றி எழுதவல்ல பிரம்மன் என்பதால், பக்தர்கள் அதிகம் பேர் இவரை தரிசிக்க வருகிறார்கள். வன்னி மரத்தடியில் இவர் தனியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள வன்னி மரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை என்கின்றனர். மிகவும் பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும், காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெட்டுப் போகாதாம்.

அகத்தியர், பரத்வாஜர் ஆகியோருக்கு இங்கே பெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்தாராம். இந்தத் தலத்தில் இன்னொரு சிறப்பு இங்கே ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் காட்சி தருவது. சஞ்சீவி மலையைக் கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார் ஆஞ்சநேயர். காலசர்ப்ப தோஷம் தீர்க்கும் கோயிலாக இது திகழ்கிறது. இங்கே திருநள்ளாறில் உள்ளது போல் சனீஸ்வரர் சந்நிதி உள்ளது. இவர், மேற்கு நோக்கி உள்ளார். ஆகவே, இவரை வழிபட்டால் சனி தோஷ பாதிப்பு அகலும் என்கின்றனர்.

பிரார்த்தனை: ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத் தடை நீங்கப் பெறுகின்றனர். மேலும், குழந்தைப்பேறும் அடையப் பெறுகிறார்கள். அதற்கு, ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து இங்கே வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும். நவக்கிரக பூஜை செய்து, வாழை மரத்திற்கு தாலி கட்டும் பழக்கமும் இங்கே உள்ளது. மேலும், அறுபதாம் கல்யாணம், ஆயுள் ஹோமம் ஆகியவையும் இங்கே நடத்தி பலன் பெறுகிறார்கள் பக்தர்கள். கோயிலைச் சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டையைக் காணலாம்.

திருவிழா: 11 நாள் நடக்கும் சித்திரைத் திருவிழா விசேஷம். ஆடிப் பெருக்கு தினத்தில் ஆயிரக் கணக்கில் மக்கள் காவிரிப் படித்துறையில் கூடி பூஜை செய்கின்றனர். மேலும், பெüர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜைகள் உண்டு.

திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-9 வரை.

இருப்பிடம்: ஈரோடு-திருச்சி சாலையில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ.

தகவலுக்கு: 04204-222375.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.