கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வார், நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, "நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம்' என்று திருவாய் மலர்ந்தருளினான். அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, "நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக' என்று பணித்தான். மேலும் பாண்டியன் வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக' என்றருளினான்.