காட்டம்மனின் சகோதரி கொப்புடையம்மன். அவளும் காரைக் காட்டில் அமர்ந்து அருளாட்சி நடத்திவந்தாள். ஆனால், இவளுக்குக் குழந்தைகள் இல்லை. எனவே காட்டம்மனின் இடத்துக்குச் சென்று, அவளின் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வாள் கொப்புடைய நாயகி. சகோதரியின் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும். அதனால் கொழுக்கட்டைகள், பலகாரம் முதலியன செய்து, வாஞ்சையுடன் அந்தக் குழந்தைகளைக் காணச் செல்வாள். ஆனால் காட்டம்மனுக்கோ, குழந்தையில்லாத சகோதரி தன் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்வது பிடிக்கவில்லை. ஒரு நாள் இப்படி தன் சகோதரி வரும் நேரம் பார்த்து குழந்தைகளை மறைத்து வைத்துவிட்டு, அவர்களைக் காணவில்லை என்று பொய் சொன்னாள் காட்டம்மன். நடந்ததை தன் ஞானத்தால் அறிந்து கோபம் கொண்ட கொப்புடைய நாயகி, "எதை வைத்து இப்படிச் சொன்னாய்? அப்படியே காணாமல் போகட்டும்' என்று சொல்லிவிட்டாள். மறைத்து வைத்திருந்த குழந்தைகள் எல்லாம் கற்களாயின. இதனால் மிகவும் வருந்தினாள் காட்டம்மன். ஆனால் அதே கோபத்துடன் காரைக் காட்டுக்குத் திரும்பிய கொப்புடைய நாயகி, அங்கே கோயில் கொண்டாள்.